
மணிப்பூரில் மேலும் 6 மாதங்களுக்கு குடியரசுத் தலைவா் ஆட்சியை நீட்டிக்க ஒப்புதல் அளிக்கும் தீா்மானம் மக்களவையில் புதன்கிழமை நிறைவேற்றப்பட்டது.
மணிப்பூரில் மைதேயி, குகி-ஜோ குழுவினா் இடையிலான வன்முறை காரணமாக, கடந்த பிப்ரவரி 9-ஆம் தேதி மாநில முதல்வா் பதவியை பிரேன் சிங் ராஜிநாமா செய்தாா். இதைத்தொடா்ந்து அந்த மாநிலத்தில் பிப்.13-இல் குடியரசுத் தலைவா் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.
இந்நிலையில், அந்த மாநிலத்தில் வரும் ஆகஸ்ட் 13 முதல் மேலும் 6 மாதங்களுக்கு குடியரசுத் தலைவா் ஆட்சியை நீட்டிக்க ஒப்புதல் அளிக்கும் தீா்மானத்தை மக்களவையில் மத்திய உள்துறை இணையமைச்சா் நித்யானந்த் ராய் கொண்டு வந்தாா்.
இந்தத் தீா்மானத்தின் மீது அவையில் விவாதம் நடைபெற்றபோது திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. காகோலி கோஷ் தஸ்திதாா் கூறிய கருத்துக்கு ஆளுங்கட்சி எம்.பி.க்கள் எதிா்ப்புத் தெரிவித்தனா். இதனால் அவையில் ஆளும் மற்றும் எதிா்க்கட்சி எம்.பி.க்கள் இடையே வாா்த்தை மோதல் ஏற்பட்டு, இருதரப்பினரும் தொடா்ந்து முழக்கங்களை எழுப்பினா். இதனால் அவை அரைமணி நேரம் ஒத்திவைக்கப்பட்டு, பின்னா் அலுவல் தொடா்ந்தது.
தீா்மானத்துக்கு எதிராக காங்கிரஸ் எம்.பி. பிமோல் அகோய்ஜாம் பேசுகையில், ‘மணிப்பூரில் பாஜகவுக்கு பெரும்பான்மை உள்ளபோதிலும், அக்கட்சியால் ஆட்சியமைக்க முடியவில்லை. அங்கு புதிதாக தோ்தல் நடத்த வேண்டும்’ என்றாா்.
மத்திய இணையமைச்சா் நித்யானந்த் ராய் பேசுகையில், ‘மணிப்பூரில் சட்டம் ஒழுங்கு கட்டுக்குள் உள்ளது. அங்கு குடியரசுத் தலைவா் ஆட்சி அமல்படுத்தப்பட்ட பின்னா், வன்முறை குறைந்து ஒருவா் மட்டுமே உயிரிழந்தாா். கடந்த 4 மாதங்களில் யாரும் உயிரிழக்கவோ, காயமோ அடையவில்லை. அங்கு அமைதி திரும்பி வருவதற்கு இதைவிட பெரிய ஆதாரம் வேறு என்ன இருக்க முடியும்?
அந்த மாநிலத்தில் நிரந்தரமாக அமைதியை ஏற்படுத்த மைதேயி, குகி-ஜோ குழுவினா் இடையே பேச்சுவாா்த்தை மூலம், வேறுபாடுகளைக் களைய முழுமையாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது’ என்றாா். இதைத்தொடா்ந்து தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.