
நமது நிருபர்
முன்னாள் அமைச்சர் வி. செந்தில் பாலாஜி தொடர்பான வழக்குகளில் 2,000-க்கும் மேற்பட்டவர்களை குற்றஞ்சாட்டப்பட்டவர்களாக சேர்த்ததற்காக தமிழக அரசை உச்சநீதிமன்றம் புதன்கிழமை கடிந்து கொண்டது.
மேலும், அனைத்து குற்றஞ்சாட்டப்பட்டவர்கள், சாட்சிகளின் விவரங்களைத் தெரிவிக்குமாறு கூறிய உச்சநீமன்றம், இத்தனை அதிகமான எண்ணிக்கையில் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் வழக்கில் சேர்க்கப்பட்டிருப்பதால் விசாரணை நடத்த கிரிக்கெட் மைதானம்தான் தேவைப்படும் என்று கூறியது.
இது தொடர்பான விவகாரத்தை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் சூர்ய காந்த் மற்றும் ஜாய்மால்ய பாக்சி ஆகியோர் அடங்கிய அமர்வு, செந்தில் பாலாஜி சம்பந்தப்பட்ட வழக்குகளின் விசாரணையை "திசைகாட்டி இல்லாத கப்பல்' என்று குறிப்பிட்டது.
மேலும், நீதித் துறை தலையீடு இல்லாமல் இருந்திருந்தால், வேலைக்கான பண மோசடி வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சம்பந்தப்பட்ட வழக்குகளை "தயக்கம் காட்டும் அரசு' கண்ணியமாக முடிக்க விரும்பியது என்று கூறியது.
இந்த விவகாரத்தில் தொடர்புடைய வழக்குகளை ஒன்றாகச் சேர்த்து விசாரிப்பதற்கான முடிவை எதிர்த்து மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ள ஒய்.பாலாஜி என்பவர் தரப்பில் மூத்த வழக்குரைஞர் கோபால் சங்கரநாராயணன் ஆஜரானார்.
அவரிடம் நீதிபதிகள் அமர்வு கூறுகையில், "2,000-க்கும் மேற்பட்ட குற்றஞ்சாட்டப்பட்டவர்களும் 500 சாட்சிகளும் உள்ள இந்த வழக்கு, இந்தியாவின் மிகவும் அதிகமான நபர்கள் இடம்பெற்ற விசாரணையாக இருக்கும். விசாரணை நீதிமன்றத்தின் ஒரு சிறிய நீதிமன்ற அறை இவர்களை விசாரிக்கப் போதுமானதாக இருக்காது.
குற்றஞ்சாட்டப்பட்டவர்களின் இருப்பைக் குறிக்க ஒரு கிரிக்கெட் மைதானம்கூட தேவைப்படும்' என்று கூறியது.
இந்த விவகாரத்தில் ஒரு சிறப்பு அரசு வழக்குரைஞர் நியமிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை மீது, நீதிபதிகள் அமர்வு தமிழக அரசின் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் அபிஷேக் சிங்வியிடம் கூறுகையில், "ஒரு சக்திவாய்ந்த அமைச்சரும் வசதி படைத்தவர்களும் ஒரு வழக்கில் குற்றஞ்சாட்டப்படும்போது, ஒரு தனி அரசு வழக்குரைஞரால் நீதி வழங்க முடியாது என்ற கருத்தாக்கம் நிலவுகிறது' என்றது.
சிறப்பு அரசு வழக்குரைஞரை நியமிப்பதற்கு அபிஷேக் சிங்வி ஆட்சேபம் தெரிவித்தார். மேலும், "இந்த வழக்கு விசாரணையை ஓராண்டு மேற்பார்வை செய்துவந்த உச்சநீதிமன்ற நீதிபதி அபய் ஓகா, சிறப்பு வழக்குரைஞரை நியமிக்கும் கோரிக்கையை நிராகரித்துவிட்டார்' என்றார்.
இதையடுத்து, நீதிபதி சூர்யகாந்த் கூறுகையில், "முதலில் எங்களுக்கு குற்றஞ்சாட்டப்பட்டவர்களின் பட்டியல் வேண்டும். இதுதான் மிகப்பெரிய முட்டுக்கட்டை. மேலும், எங்களுக்கு சாட்சிகளின் பட்டியலையும் தாருங்கள். அப்போதுதான், எத்தனை குற்றஞ்சாட்டப்பட்ட நபர்களும், சாட்சிகளும் ஒன்றோடு ஒன்று சேர்கிறார்கள் என்பதை நாங்கள் பார்க்க முடியும்' என்றார்.
இதையடுத்து, வழக்கு விசாரணை ஆகஸ்ட் 11-ஆம் தேதிக்குப் பட்டியலிடப்பட்டது. செந்தில் பாலாஜி தொடர்பான வழக்குகளில் 2,000-க்கும் மேற்பட்டவர்களை பண மோசடியில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களாக இணைத்து விசாரணையை தாமதப்படுத்த தமிழக அரசு முயல்கிறதா என்று உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை கேள்வி எழுப்பியிருந்தது.
மேலும், இந்த முயற்சி நீதித் துறை அமைப்பை முழுமையாக ஏமாற்றுவது என்றும் கூறியது.
முன்னதாக, உச்சநீதிமன்றத்தின் கடும் கண்டனத்துக்குப் பிறகு, ஏப்ரல் 27 அன்று செந்தில் பாலாஜி தனது அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.