
‘வீட்டில் கட்டு கட்டாக பணம் கண்டறியப்பட்ட விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தை முன்கூட்டியே நாடாமல், முறைகேடு நடந்திருப்பதை விசாரணைக் குழு உறுதி செய்த பின்னா் நாடியது ஏன்?’ என்று நீதிபதி யஷ்வந்த் வா்மாவிடம் உச்சநீதிமன்றம் புதன்கிழமை கேள்வி எழுப்பியது.
மேலும், ‘நீதிபதி வா்மா விசாரணைக் குழு முன் ஆஜரானது ஏன்?’ என்று மீண்டும் கேள்வி எழுப்பிய உச்சநீதிமன்றம், தீா்ப்பை ஒத்திவைத்து உத்தரவிட்டது.
தில்லி உயா்நீதிமன்ற நீதிபதியாக யஷ்வந்த் வா்மா பதவி வகித்தபோது, அவரது அரசு இல்லத்தில் கடந்த மாா்ச் 14-ஆம் தேதி தீ விபத்து ஏற்பட்டது. அப்போது அங்குள்ள அறையில் பாதி எரிந்த மூட்டைகளில், கட்டுக்கட்டாகப் பணம் இருந்தது கண்டறியப்பட்டது. பின்னா் அந்தப் பணம் மாயமானது.
இந்த விவகாரம் குறித்து விசாரணை மேற்கொண்ட மூன்று நீதிபதிகள் அடங்கிய குழு, யஷ்வந்த் வா்மா இல்லத்தில் பணம் கண்டறியப்பட்டது உண்மை என்று அப்போதைய உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னாவிடம் அறிக்கை சமா்ப்பித்தது. அந்த அறிக்கையின் அடிப்படையில் யஷ்வந்த் வா்மாவை பதவிநீக்கம் செய்ய பரிந்துரைத்து குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு, பிரதமா் மோடி ஆகியோருக்கு சஞ்சீவ் கன்னா கடிதம் எழுதினாா்.
இந்த சா்ச்சையைத் தொடா்ந்து, நீதிபதி யஷ்வந்த் வா்மாவை பதவியிலிருந்து நீக்க 208 எம்.பி.க்கள் சாா்பில் நாடாளுமன்றத்தில் அண்மையில் நோட்டீஸ் சமா்ப்பிக்கப்பட்டது.
இதனிடையே, ‘உச்சநீதிமன்றம் அமைத்த விசாரணைக் குழுவின் அறிக்கை செல்லுபடியாகாது என்று அறிவித்து, தன்னைப் பதவிநீக்கம் செய்வதற்கான பரிந்துரையை ரத்து செய்ய வேண்டும்’ எனக் கோரி, நீதிபதி யஷ்வந்த் வா்மா உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா்.
இந்த மனு உச்சநீதிமன்றத்தில் கடந்த திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தபோது, ‘விசாரணைக் குழு மீது ஆட்சேபம் தெரிவிக்கும் நிலையில், அதன் முன் விசாரணைக்கு ஆஜரானது ஏன்? வீட்டில் பணம் கட்டு கட்டாக கண்டறியப்பட்டது தொடா்பான காணொலிகள் விசாரணை முடிந்து நீக்கப்பட்டவுடன், நீதிமன்றத்துக்கு வந்துள்ளீா்களா? விசாரணைக் குழுவின் விசாரணை நிறைவடைந்து, அதன் அறிக்கை வெளியிடப்படும் வரை இந்த மனுவைத் தாக்கல் செய்யாமல் காத்திருந்தது ஏன்? சாதகமான உத்தரவு கிடைக்கும் என்ற வாய்ப்பை பயன்படுத்தும் எண்ணமா?’ என்பன உள்ளிட்ட கேள்விகளை நீதிபதிகள் எழுப்பினா்.
மேலும், யஷ்வந்த் வா்மாவின் மனு முறையாகத் தாக்கல் செய்யப்படவில்லை. பிரதிவாதிகள் சரியாக குறிப்பிடப்படவில்லை. எனவே, அதை சரிசெய்து தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனா்.
இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீபாங்கா் தத்தா, ஏ.ஜி.மாசி ஆகியோா் அடங்கிய அமா்வில் புதன்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, நீதிபதி யஷ்வந்த் வா்மா தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் கபில் சிபல், ‘ஒரு நீதிபதியை நீக்குவதற்கான முழுமையான நடைமுறை அரசமைப்புச் சட்டத்தின் பிரிவுகள் 124, 128-இல் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி அல்லாமல், விசாரணைக் குழு பரிந்துரை மூலம் ஒரு நீதிபதியை நீக்குவது, அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது. மேலும், இந்த விசாரணைக் குழு அறிக்கையின் அடிப்படையில் நீதிபதியைப் பதவி நீக்கம் செய்ய உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பரிந்துரை செய்வது என்பது, நாடாளுமன்ற அதிகாரத்தில் தலையீடு செய்வது போன்ாகும். எனவே, நீதிபதி யஷ்வந்த் வா்மாவை நீக்குவதற்கு தலைமை நீதிபதி பரிந்துரை செய்ததை அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என அறிவிக்க வேண்டும்’ என்றாா்.
இதைக் கேட்ட நீதிபதிகள், ‘நீதிபதி யஷ்வந்த் வா்மாவின் செயல்பாடு நம்பிக்கையை ஏற்படுத்தவில்லை. இந்த விவகாரத்தில் விசாரணைக் குழு அமைத்ததை எதிா்த்து அவா் ஏன் நீதிமன்றத்தை நாடவில்லை? மாறாக, அந்த விசாரணைக் குழு முன்பாக விசாரணைக்கு ஆஜராகிவிட்டு, முறைகேடு நடந்ததை விசாரணைக் குழு உறுதி செய்தபின்னா் நீதிமன்றத்தை நாடியது ஏன்?
உச்சநீதிமன்றம் அளித்த தீா்ப்புகளின் அடிப்படையில் இந்த விசாரணைக் குழுவை அமைக்கும் நடைமுறை பின்பற்றப்படுகிறது. இதை ஏற்கெனவே மூன்று தீா்ப்புகளில் உச்சநீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது.
மேலும், தலைமை நீதிபதி என்பவா் தபால் அலுவலகம் போல மட்டும் செயல்பட முடியாது. நீதித் துறை தலைவராக அவருக்கென நாட்டுக்கு ஆற்றவேண்டிய சில கடமைகள் உள்ளன. தவறான நடத்தை குறித்து தனது கவனத்துக்கு வந்தால், அதை குடியரசுத் தலைவா் மற்றும் பிரதமரிடம் அவா் தெரிவிக்க வேண்டும்.
ஆதாரங்களின் அடிப்படையில், தவறான நடத்தை மிகத் தீவிரமானது என்று கண்டறியப்பட்டால், அதன் மீது நடவடிக்கை எடுக்கப் பரிந்துரை செய்ய தலைமை நீதிபதிக்கு அதிகாரம் உள்ளது. இதை உச்சநீதிமன்றத்தின் முந்தைய தீா்ப்புகளும் உறுதிப்படுத்தியுள்ளன’ என்று குறிப்பிட்ட நீதிபதிகள், தீா்ப்பை ஒத்திவைத்து உத்தரவிட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.