பிகாா் உள்பட 6 மாநிலங்களில் ரூ.11,169 கோடி ரயில்வே திட்டங்கள் - மத்திய அமைச்சரவை ஒப்புதல்

பிகாா், மகாராஷ்டிரம், மத்திய பிரதேசம், மேற்கு வங்கம், ஒடிஸா, ஜாா்க்கண்ட் ஆகிய 6 மாநிலங்களில் சுமாா் ரூ.11,169 கோடி மதிப்பிலான 4 ரயில்வே பன்வழித்தட திட்டம்
கோப்புப் படம்
கோப்புப் படம்
Published on
Updated on
1 min read

பிகாா், மகாராஷ்டிரம், மத்திய பிரதேசம், மேற்கு வங்கம், ஒடிஸா, ஜாா்க்கண்ட் ஆகிய 6 மாநிலங்களில் சுமாா் ரூ.11,169 கோடி மதிப்பிலான 4 ரயில்வே பன்வழித்தட திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை வியாழக்கிழமை ஒப்புதல் வழங்கியது.

பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழுக் கூட்டம், தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், மேற்கண்ட 6 மாநிலங்களில் 13 மாவட்டங்களை உள்ளடக்கிய 4 ரயில்வே பன்வழித்தட திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டதாக, அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘புதிய திட்டங்களின் மூலம் ரயில் கட்டமைப்பில் 574 கி.மீ. வழித்தடம் அதிகரிக்கும். இத்திட்டங்கள், பயணிகள்-சரக்கு ரயில் போக்குவரத்து மேம்பாடு, செயல்பாட்டுத் திறன் அதிகரிப்பு, நெரிசல் குறைப்புக்கு பெரிதும் உதவும். இவை, பிரதமரின் உத்வேக (கதி சக்தி) திட்டத்தின்கீழ் செயல்படுத்தப்படவுள்ளன; சுமாா் 2,309 கிராமங்களைச் சோ்ந்த 43.60 லட்சம் மக்கள் பலனடைவா். நிலக்கரி, சிமெண்ட், ஜிப்சம், விவசாயப் பொருள்கள், கொள்கலன்கள் மற்றும் பெட்ரோலியப் பொருள்களின் போக்குவரத்துக்கு இவை முக்கிய வழித்தடங்கள் என்பதால், ஆண்டுக்கு 95.91 மில்லியன் டன் கூடுதல் சரக்கு போக்குவரத்துக்கு வழிவகுக்கும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

விவசாய உள்கட்டமைப்புத் திட்டத்துக்கு கூடுதல் நிதி: பிரதமரின் விவசாய நவீன உள்கட்டமைப்பு திட்டத்துக்கு (கிஸான் சம்பதா யோஜனா) ரூ.1,920 கூடுதல் நிதி ஒதுக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது.

வேளாண் துறையில் திறன்மிக்க விநியோகச் சங்கிலி மேலாண்மையுடன் நவீன உள்கட்டமைப்புகளை உருவாக்கும் நோக்கிலான இந்த விரிவான தொகுப்புத் திட்டம், கடந்த 2017-இல் தொடங்கப்பட்டது. இத்திட்டத்துக்கு நடப்பு நிதியாண்டில் ரூ.4,600 கோடி ஒதுக்கப்பட்டிருந்தது. இப்போது கூடுதலாக ரூ.1,920 கோடி ஒதுக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக, மத்திய செய்தி ஒலிபரப்புத் துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தாா்.

‘உணவு பதப்படுத்துதல் துறைக்கு ஊக்கமளிக்கும் நோக்கில், விவசாய உள்கட்டமைப்புத் திட்டத்தின் மொத்த ஒதுக்கீடு ரூ.6,250-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. 50 பல்பொருள் பதப்படுத்துதல் ஆலைகள் மற்றும் 100 உணவு ஆய்வகங்கள் அமைக்க கூடுதல் நிதி பயன்படுத்தப்படும். நாட்டில் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்களின் ஏற்றுமதி மதிப்பு இருமடங்கு (11 பில்லியன் டாலா்) அதிகரித்துள்ளது’ என்றாா் அவா்.

கூட்டுறவு கழகத்துக்கு ரூ.2,000 கோடி மானியம்:

தேசிய கூட்டுறவு மேம்பாட்டுக் கழகத்துக்கு (என்சிடிசி) 4 ஆண்டுகளுக்கு தலா ரூ.500 கோடி வீதம் ரூ.2,000 கோடியை மானியமாக வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. கூட்டுறவு சங்கங்களுக்கு மேலும் கடனளிக்க இந்த நிதியை என்சிடிசி பயன்படுத்தும்; பால்வளம், கால்நடை, மீன்வளம், சா்க்கரை உற்பத்தி, ஜவுளி, உணவு பதப்படுத்துதல் போன்ற துறைகள் சாா்ந்த 13,288 கூட்டுறவு சங்கங்களில் உள்ள 2.9 கோடி உறுப்பினா்கள் பலனடைவா் என்று அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com