
உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்டின் புதிய மெர்சிடிஸ் பென்ஸ் காருக்கு குறிப்பிட்ட பதிவு எண்ணை ஒதுக்கக் கோரி உச்சநீதிமன்ற பதிவாளர், தில்லி போக்குவரத்து ஆணையருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த டி.ஒய்.சந்திரசூட் 2 ஆண்டுகள் பணிக்குப் பிறகு கடந்த 2024 நவம்பர் மாதம் ஓய்வு பெற்றார்.
அயோத்தி வழக்கு, அரசியலமைப்பின் 370-வது பிரிவு உள்ளிட்ட பல முக்கிய தீர்ப்புகளை வழங்கியுள்ளார். இவர் ஓய்வு பெற்றும் அரசு பங்களாவை இன்னும் காலி செய்யாதது குறித்து உச்சநீதிமன்றம் சமீபத்தில் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியது.
இந்நிலையில் டி.ஒய்.சந்திரசூட் புதிதாக மெர்சிடிஸ் பென்ஸ் கார் ஒன்றை வாங்கியுள்ளதாகத் தெரிகிறது. அதற்கு அவர் கேட்டுள்ள குறிப்பிட்ட பதிவு எண்ணை வழங்கும்படி உச்சநீதிமன்ற பதிவாளர், தில்லி போக்குவரத்து ஆணையருக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார்.
மேலும் முன்னாள் தலைமை நீதிபதியின் காருக்கு அந்த எண்ணை விரைவாக ஒதுக்கீடு செய்து அவருக்கு தகவல் தெரிவித்தால் நான் நன்றியுள்ளவராக இருப்பேன் என்று கடிதத்தில் கேட்டுக்கொண்டுள்ளார். இந்தக் கடிதம் ஜூலை 28 அன்று அனுப்பப்பட்டுள்ளது.
முன்னாள் தலைமை நீதிபதியின் காருக்கு பதிவு எண் கேட்டு உச்சநீதிமன்ற பதிவாளர் கடிதம் எழுதியுள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.