முப்படை தலைமைத் தளபதி பேச்சு எதிரொலி: நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரை உடனடியாக நடத்த காங்கிரஸ் வலியுறுத்தல்

இரு நாடுகளுக்கு இடையிலான மோதலின்போது இந்தியா சில போர் விமானங்களை இழந்ததாக தலைமைத் தளபதி ஒப்புக்கொண்டார்.
முப்படை தலைமைத் தளபதி பேச்சு எதிரொலி: நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரை உடனடியாக நடத்த காங்கிரஸ் வலியுறுத்தல்
PTI
Published on
Updated on
2 min read

இந்தியா-பாகிஸ்தான் இடையிலான மோதல் குறித்து முப்படைகளின் தலைமைத் தளபதி அனில் சௌஹான் பல்வேறு தகவல்களைத் தெரிவித்துள்ள நிலையில், ராணுவம் மற்றும் வெளியுறவுக் கொள்கை உத்தி தொடர்பாக விவாதிப்பதற்கு நாடாளுமன்றத்தின் சிறப்பு கூட்டத்தொடரை உடனடியாக நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களைத் தகர்க்கும் நோக்கில் இந்தியாவின் முப்படைகளும் இணைந்து "ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையை எடுத்தன. இதையடுத்து இந்தியா-பாகிஸ்தான் இடையே நடைபெற்ற சண்டையின்போது பாகிஸ்தானின் பல்வேறு ராணுவ தளங்களை இந்தியா தகர்த்தது. இது தொடர்பான தகவல்களை முப்படைகளின் தலைமைத் தளபதி அனில் சௌஹான், சிங்கப்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பகிர்ந்துகொண்டார். இரு நாடுகளுக்கு இடையிலான மோதலின்போது இந்தியா சில போர் விமானங்களை இழந்ததாக அவர் ஒப்புக்கொண்டார்.

இந்தச் சூழலில், காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், பிடிஐ செய்தியாளரிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:

"ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கை தொடர்பாக பல்வேறு முக்கியமான தகவல்களை முப்படைகளின் தலைமைத் தளபதி அனில் சௌஹான் பகிர்ந்துகொண்டுள்ளார். இந்த விவரங்களை அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பிரதமரோ, பாதுகாப்புத் துறை அமைச்சரோ எதிர்க்கட்சித் தலைவர்களிடம் முதலில் தெரிவித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

"ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கைக்கு பிந்தைய காலகட்டத்தில் வெளியுறவுக் கொள்கை உத்தி மற்றும் பொருளாதாரப் பிரச்னைகள் குறித்து விவாதிக்க நாடாளுமன்றத்தின் சிறப்பு கூட்டத்தொடரை உடனடியாகக் கூட்ட வேண்டும் என்ற வாதத்தை அனில் சௌஹானின் கருத்துகள் வலுப்படுத்தியுள்ளன.

சிங்கப்பூர் சென்ற முப்படைகளின் தலைமைத் தளபதியிடம் இருந்து இதுபோன்ற கருத்துகள் வெளிவருவது கவலைக்குரியது. இது தொடர்பாக பிரதமரால் எதிர்க்கட்சித் தலைவர்களிடம் விளக்க முடியாமல் போனது ஏன்? இந்த நோக்கத்துக்காகவே அனைத்துக் கட்சிக் கூட்டங்களையும் நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தையும் நடத்துமாறு நாங்கள் (காங்கிரஸ்) தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.

கார்கில் போரைத் தொடர்ந்து இந்தியாவின் பாதுகாப்பு தயார்நிலை குறித்து ஆராய அமைக்கப்பட்டது போன்ற சிறப்பு பரிசீலனைக் குழுவை அமைக்க வேண்டும் என்று மத்திய அரசை மீண்டும் வலியுறுத்துகிறேன். கார்கில் போர் முடிவடைந்த சில தினங்களில் தற்போதைய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரின் தந்தை தலைமையில் கார்கில் பரிசீலனைக் குழுவை அப்போதைய பிரதமர் வாஜ்பாய் அமைத்தார். அந்தக் குழுவின் அறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு, பின்னர் அது தொடர்பாக விவாதம் நடைபெற்றது.

தற்போது முப்படைகளின் தலைமைத் தளபதி நமது போர் விமானங்களின் இழப்பு குறித்து கருத்து கூறியுள்ள நிலையில் அதுபோன்ற குழு அமைக்கப்படுமா? என்று ஜெய்ராம் ரமேஷ் கேள்வி எழுப்பினார்.

இந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் ஊடகப் பிரிவு தலைவர் பவன் கேரா கூறுகையில் "நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தொடர் நடத்தப்பட்டு இந்தப் பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட வேண்டும். அனைவரின் நம்பிக்கையையும் பெற்று அரசு செயல்பட வேண்டும். இந்தியா-பாகிஸ்தான் இடையிலான போர்நிறுத்தத்தை அமெரிக்கா அறிவித்த நிலையில், "ஆபரேஷன் சிந்தூர்' பற்றி எடுத்துக் கூற நமது அரசியல் கட்சித் தலைவர்கள் வெளிநாடுகளுக்கு சென்றுள்ளனர். இது தொடர்பான கேள்விகளுக்கு யார் பதிலளிப்பார்கள்? இதற்கு முப்படைகளிடம் இருந்து பதில் வரக் கூடாது; மாறாக அரசிடம் இருந்து பதில் வரவேண்டும்' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com