2.5 கோடி போலி கணக்குகளை முடக்கியது ஐஆர்சிடிசி!

போலி கணக்குகளை ஐஆர்சிடிசி நிர்வாகம் முடக்கியிருப்பது பற்றி...
ஐஆர்சிடிசி
ஐஆர்சிடிசி
Published on
Updated on
1 min read

தட்கல் பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்வதற்காக செயல்பட்டு வந்த 2.5 கோடி போலி கணக்குகளை ஐஆர்சிடிசி நிர்வாகம் முடக்கியுள்ளது.

போலி கணக்குகள் மூலம் பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்வோர், மக்களிடம் அதிக விலைக்கு விற்பனை செய்வதை தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாளும் காலை 10 மணிமுதல் லட்சக்கணக்கான இந்தியர்கள் சாத்தியமற்ற முயற்சி என அறிந்தும், தட்கல் பயணச்சீட்டை முன்பதிவு செய்ய காத்திருக்கிறார்கள்.

தட்கலுக்கு முயற்சிக்கும் 90 சதவிகிதம் பேருக்கு பலமுறை இணையதளமே வேலை செய்வதில்லை. வெறும் இரண்டு நிமிடங்களில் பயணச்சீட்டுகள் அனைத்தும் விற்றுத் தீர்ந்துவிடுகின்றன.

ஆனால், சாமானிய மக்கள் எவ்வளவு முயற்சித்தும் கிடைக்காத தட்கல் பயணச்சீட்டுகள் ஏஜெண்டுகள் மூலம் சென்றால் மட்டும் எப்படி கிடைக்கிறது? என்ற கேள்வி நீண்ட காலமாக மக்கள் மத்தியில் எழுந்து வருகின்றன.

தட்கல் நேரத்தில் இணையதளம் முடங்குவது, மிகவும் மெதுவாக செயல்படுவது, கட்டண நுழைவு வாயில் செயலிழப்பு போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகளை மத்திய ரயில்வே அமைச்சகத்துக்கு மக்கள் புகாராக தெரிவித்து வருகின்றனர்.

சமீபத்தில் வெளியான ஆய்வு ஒன்றில், கடந்த 2015 ஆம் ஆண்டு தட்கலில் பயணச்சீட்டு முன்பதிவு செய்தால் கிடைப்பதற்கான வாய்ப்பு 90 சதவிகிதமாக இருந்த நிலையில், தற்போது 1.5 சதவிகிதமாக குறைந்துவிட்டதாக தெரியவந்துள்ளது.

தொடர் புகார்களை அடுத்து தட்கல் பயணச்சீட்டு விவகாரத்தை ரயில்வே அமைச்சகமும் ஐஆர்சிடிசி நிர்வாகமும் இணைந்து விசாரணையைத் தொடங்கியது.

ஐஆர்சிடிசி நடத்திய ஆய்வில், கடந்த ஜனவரி முதல் மே மாதம் வரையிலான காலகட்டத்தில் மட்டும் தட்கல் தொடங்கி 5 நிமிடங்களில் பயணச்சீட்டை முன்பதிவு செய்த 2.9 பரிவர்த்தனைகளை கண்டறிந்துள்ளனர்.

2.5 கோடி போலி கணக்குகள் கண்டறியப்பட்டு முடக்கப்பட்டுள்ளது. மேலும், 20 லட்சம் கணக்குகளை மறுமதிப்பீடு செய்யும் பணி நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐஆர்சிடிசியின் சரிபார்ப்பை தவிர்ப்பதற்காக நெக்ஸஸ் மற்றும் சூப்பர் தட்கல் போன்ற சட்டவிரோத மென்பொருள்கள் மூலம் போலியாக உருவாக்கப்பட்ட 6,800 டொமைன்கள் கண்டறியப்பட்டு, தேசிய சைபர் குற்ற போர்டலில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கடந்த மே 22 ஆம் தேதி காலை 10 மணிக்கு ஒரு நிமிடத்தில் அதிக பயணச்சீட்டுகள் (31,814) முன்பதிவு செய்து வரலாற்று சாதனை படைத்துள்ளதாக ஐஆர்சிடிசி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

போலி கணக்குகள் முடக்கப்பட்டதன் மூலம் தட்கல் நேரத்தில் ஐஆர்சிடிசி தளத்தை அணுகுவோரின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம், வரும் காலங்களில் தட்கல் நேரங்களில் ஐஆர்சிடிசி இணையதளம் சந்தித்து வரும் தொழில்நுட்ப ரீதியிலான பிரச்னைகள் குறையும் என்று நம்பப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com