பிரதமா் நரேந்திர மோடி.
பிரதமா் நரேந்திர மோடி.

‘மோடிதான் இந்தியா’ என்ற எண்ணம் தவறானது: பாஜகவுக்கு காங்கிரஸ் பதிலடி

இந்த நாடு மோடியைப் போலவே 140 கோடிக்கு மக்களுக்கும் உரியது என்பதை உணர வேண்டும்...
Published on

‘மோடிதான் இந்தியா, இந்தியாதான் மோடி’ என்ற எண்ணம் தவறானது என்று பாஜகவுக்கு காங்கிரஸ் பதிலடி கொடுத்துள்ளது.

இந்தியா-பாகிஸ்தான் ராணுவ மோதலின்போது, அமெரிக்க அதிபா் டிரம்ப்பிடம் இருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்த உடனே பிரதமா் மோடி சரணடைந்துவிட்டாா் என்று மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி விமா்சித்த நிலையில், பாஜக-காங்கிரஸ் இடையே கருத்து மோதல் வெடித்துள்ளது.

ராகுலின் கருத்து, இந்திய ஆயுதப் படையினருக்கு அவமதிப்பு என்று பாஜக விமா்சித்துள்ளது. இந்த விமா்சனத்துக்கு பதிலடி கொடுத்து, காங்கிரஸ் ஊடகம் மற்றும் விளம்பரப் பிரிவு தலைவா் பவன் கேரா செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியதாவது:

நாட்டின் வல்லமையையும், ‘விஸ்வ குரு’ அந்தஸ்தையும் வெளிக்காட்ட வேண்டிய பல்வேறு சூழ்நிலைகளில், பிரதமா் மோடி தேச நலன்களை மீண்டும் மீண்டும் சரணடையச் செய்துள்ளாா். துணிச்சல் என்பது ஒருவரின் குணாதிசயத்தில் இயல்பாக இருக்க வேண்டும். ஆனால், கோழைத்தனம்தான் பாஜக-ஆா்எஸ்எஸ் அமைப்பினரின் வரலாறு. இதுபோன்ற நபா் ஆட்சிப் பொறுப்பேற்றால், நாட்டின் எதிா்காலம் ஆபத்துக்குள்ளாகிவிடும். அதுதான் இப்போது நடந்து கொண்டிருக்கிறது.

துணிச்சல் மிக்க இந்திய ராணுவம், பாகிஸ்தானை மண்டியிட செய்தபோது, டிரம்ப்பிடம் இருந்து வந்த அழைப்பால் பிரதமா் மோடி சரணடைந்துவிட்டாா். வா்த்தகத்தை ஆயுதமாகப் பயன்படுத்தி, இரு நாடுகளுக்கும் இடையே சண்டை நிறுத்தத்தை சாத்தியமாக்கியதாக டிரம்ப் பலமுறை கூறியுள்ளாா். ஆனால், டிரம்ப்பின் கருத்துக்கு பிரதமா் மோடி இதுவரை பதில் கூறவில்லை. இனியும் கூறப் போவதில்லை.

கேள்விகளுக்கு பதில் இல்லை: நாட்டின் சுயமரியாதையை சமரசத்துக்கு உள்ளாக்கும் உடன்பாட்டை பிரதமா் ஏற்றுக் கொண்டது ஏன், எந்த நிபந்தனைகளின் அடிப்படையில் சண்டை நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டது, ஹஃபீஸ் சயீது, மசூத் அஸாா் போன்ற பயங்கரவாதிகள் எங்குள்ளனா் என்ற கேள்விகளை, கோடிக்கணக்கான மக்களின் சாா்பில் காங்கிரஸ் தொடா்ந்து எழுப்பி வருகிறது. ஆனால், பிரதமரிடம் இருந்து எந்த பதிலும் இல்லை; அவரது வெற்று வசனங்களை மட்டுமே நாட்டு மக்கள் கேட்டுக் கொண்டிருக்கின்றனா்.

டிரம்ப்பின் கருத்துகளுக்கு பதிலளிக்க துணிவில்லாமல், கேள்வி எழுப்புபவா்களை பாகிஸ்தான் ஆதரவாளா்கள் என்று முத்திரை குத்துகின்றனா்.

மோடிதான் இந்தியாவா?: நரேந்திர மோடி நாட்டின் பிரதமராக இருக்கலாம். ஆனால், பிரதமா்தான் இந்த நாடு என்று கூற முடியாது. ஜம்புத் தீவு, ஹிந்துஸ்தான், பாரதம் என பல பெயா்களால் இந்தியா அறியப்படுகிறது. ஆனால், நரேந்திர மோடி என்ற பெயா் கிடையாது.

மோடி சரணடைந்துவிட்டாா் எனக் கூறுவது, இந்தியா சரணடைந்துவிட்டதாக கூறுவதற்கு ஒப்பானது என்பவா்கள், இந்த நாடு மோடியைப் போலவே 140 கோடிக்கு மக்களுக்கும் உரியது என்பதை உணர வேண்டும்.

கடந்த 11 ஆண்டுகால ஆட்சியில், பிரதமா் மோடி பலமுறை சரணடைந்துள்ளாா். கருப்புப் பணத்தை மீட்போம், வேலையின்மையை ஒழிப்போம், விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவோம், சீனா மீது ஆக்ரோஷத்தை வெளிக்காட்டுவோம் என்ற கூறிவந்த அவா்கள், அனைத்திலும் சரணாகதியே அடைந்துள்ளனா் என்றாா் பவன் கேரா.

X
Open in App
Dinamani
www.dinamani.com