
பெங்களூர் சின்னசாமி விளையாட்டரங்கில் நேரிட்ட கூட்ட நெரிசல் குறித்துப் பேசிய கர்நாடக முதல்வர் சித்தராமையா, சம்பவத்தை எந்த வகையிலும் நியாயப்படுத்திப் பேச விரும்பவில்லை, நாடு முழுவதும் பல இடங்களிலும் கூட்ட நெரிசல்கள் நேரிடுகின்றன என்று கூறியுள்ளார்.
ஐபிஎல் சாம்பியன் ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் வெற்றிக் கொண்டாட்ட நிகழ்ச்சி நடைபெற்ற பெங்களூர் சின்னசாமி விளையாட்டரங்கில் நேரிட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் பலியாகினர்.
இது குறித்துப் பேசிய கர்நாடக முதல்வர் சித்தராமையா, இந்த சம்பவத்தை வைத்து அரசு அரசியல் செய்ய விரும்பவில்லை. நாடு முழுவதும் பல இடங்களில் ஏன் கும்ப மேளாவிலும் கூட்ட நெரிசல் ஏற்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த சம்பவத்தை நியாயப்படுத்த நான் விரும்பவில்லை. இதில் அரசியல் செய்யவும் இல்லை. நீதித்துறை விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளேன். 15 நாள்களுக்குள் விசாரணை நடத்தி அறிக்கை அளிக்கக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. விளையாட்டரங்கின் நுழைவு வாயிலையே இளைஞர்கள் உடைத்துக்கொண்டு உள்ளே வந்துள்ளனர். அதனால், அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. இவ்வளவு பெரிய கூட்டம் வரும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. அந்த விளையாட்டரங்குக்குள் 35 ஆயிரம்பேர்தான் இருக்க முடியும். அங்கு 2- 3 லட்சம் பேர் வந்திருக்கிறார்கள் என்று சித்தராமையா கூறியிருக்கிறார்.
கவனக்குறைவுதான் காரணம் என பாஜக குற்றம்சாட்டியிருப்பது குறித்த செய்தியாளர்கள் சித்தராமையாவிடம் கேட்டபோது, இதுபோன்ற சம்பவங்கள் நாடு முழுவதும் நேரிடுகின்றன. நான் இந்த சம்பவத்தை நியாயப்படுத்தவோ, ஒப்பிடவோ விரும்பவில்லை. ஆனால், இங்கும் அங்கும் நேரிட்டுக் கொண்டுதான் இருக்கிறது. மகா கும்ப மேளாவிலும் 50 - 60 பேர் பலியானார்கள். அதனை நான் விமர்சிக்கவில்லை. காங்கிரஸ் விமர்சித்தால் அது வேறு விஷயம். ஆனால், நானோ அல்லது கர்நாடக அரசோ விமர்சித்தால் அது வேறுமாதிரியாகிவிடும் என்றார் கர்நாடக முதல்வர் சித்தராமையா.
பெங்களூர் கூட்ட நெரிசல் மரணத்துக்கு கர்நாடக முதல்வரும், உள்துறை அமைச்சரும்தான் பொறுப்பேற்க வேண்டும் என்று பாஜக கடுமையான விமர்சனங்களை முன் வைத்துள்ளது.
முன்னேற்பாடுகள் ஏதுமின்றி, பாராட்டு விழா நடத்த காவல்துறைக்கு கர்நாடக அரசுதான் அழுத்தம் கொடுத்ததாகவும், இங்கு லட்சக்கணக்கானோர் குவிவார்கள் என்று மாநில அரசு கணித்திருக்க வேண்டாமா என்றும் மாநில பாஜக கடுமையான கேள்விகளை எழுப்பியிருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.