
பெங்களூர்: பெங்களூர் சின்னசாமி அரங்கில் வெறும் 35 ஆயிரம் பேர்தான் கூட முடியும் என்ற நிலையில், சுமார் 3 லட்சம் பேர் அரங்குக்குள் முண்டியடித்துக் கொண்டு உள்ளே வர முயன்றதே கூட்ட நெரிசலுக்குக் காரணம் என கூறப்படுகிறது.
பெங்களூரில் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் சாம்பியன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் வெற்றிக் கொண்டாட்டத்தின்போது ஏற்பட்ட நெரிசலில் 11 பேர் பலியாகியிருக்கிறார். இதற்குக் காரணம் வெறும் 35 ஆயிரம் பேர்தான் நுழைய இடமிருந்த சின்னசாமி அரங்குக்குள் 3 லட்சம் பேர் நுழைந்ததுதான் காரணம் என்று கூறப்படுகிறது.
கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம் சார்பில் சின்னசாமி விளையாட்டரங்கில் நடைபெற்ற பாராட்டு விழாவில் பங்கேற்க மாலை 5 மணியளவில் லட்சக்கணக்கானோர் குவிந்தனர்.
வெறும் 35 ஆயிரம் பேர் மட்டுமே அந்த அரங்குக்குள் இருக்க முடியும். நுழைவு வாயில்கள் மூடப்பட்டுவிட்டன. கையில் டிக்கெட் இல்லாத ரசிகர்கள் வாயிலில் நிக்க வைக்கப்பட்டனர்.
ஒரு கட்டத்துக்கு மேல், நுழைவு வாயில்களை உடைத்துக்கொண்டும், தாண்டி குதித்தும் ரசிகர்கள் விளையாட்டு அரங்குக்குள் நுழைய முயன்ற போதுதான் அந்த சம்பவம் நடந்தது.
பெரிய அளவில் அதுவும் இளைஞர்கள் கூட்டம். அவர்களது கட்டுக்கடங்காத வேகம், ஒருவரை கீழேத் தள்ளினாலும் அது அடுத்தடுத்து பலரைக் கீழே தள்ளி அவர்கள் மீது பலர் ஏறி மிதித்து ஓட, அவர்களும் விழ, சம்பவம் கைமீறியது.
இதில் பலரும் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழந்து பலியானவர்கள்தான்.
முதலில், செவ்வாய்க்கிழமை நள்ளிரவில்தான், ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் வெற்றி பெற்றது. ஆனால், எந்தவித முன்னேற்பாடுகளும் இன்றி, அடுத்த நாளே வெற்றிக் கொண்டாட்டத்துக்கு அதுவும் இரண்டு இடங்களில் நடத்தப்பட்டது மிகப்பெரிய தவறாகக் கருதப்படுகிறது.
முன்னேற்பாடுகள் எதுவும் இன்றி, இத்தனை ரசிகர்கள் குவிவார்கள் என்று மாநில அரசு திட்டமிடாமல் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு கொடுத்திருக்கிறது, அனுமதி அளித்திருக்கிறது. இதுபோன்ற பிரச்னை ஏற்படலாம் என்று காவல்துறை தரப்பில் முன்கூட்டியே எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகவும் உறுதி செய்யப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.