
உத்தரப் பிரதேசத்தின் அயோத்தி ராமர் கோயில் கட்டுமானத்தில் மொத்தம் 45 கிலோ கிராம் தூய தங்கம் சேர்த்து கட்டப்பட்டுள்ளதாக கோயில் கட்டுமான குழுவின் தலைவர் நிருபேந்திர மிஸ்ரா தெரிவித்தார்.
அயோத்தியில் பிரம்மாண்டமாக எழுப்பப்பட்டு வரும் ராமர் கோயில் வளாகத்தில் முதல்தள பணிகள் நிறைவடைந்த நிலையில், ராம தர்பார் உள்பட 8 சன்னதிகளுக்கு நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் பிறந்தநாளான நேற்று ராமர் தர்பாரின் கும்பாபிஷேக விழாவில் நடைபெற்ற சடங்குகளில் கலந்துகொண்டார்.
இதுதொடர்பாக கட்டுமான குழு தலைவர் நிரூபேந்திர மிஸ்ரா கூறுகையில்,
அயோத்தி ராமர் கோயில் கட்டுமானத்தில் இதுவரை 45 கிலோ தூய தங்கம் சேர்த்து கட்டப்பட்டுள்ளதாகவும், வரிகளைத் தவிர்த்து தூய தங்கத்தின் மதிப்பு சுமார் ரூ.50 கோடி என்று அவர் கூறினார்.
கோயிலின் தரைதளத்தில் உள்ள கதவுகளிலும், ராமரின் சிம்மாசனத்திலும் தங்கம் அதிகளவில் பயன்படுத்தப்பட்டுள்ளது. சேஷாவதர் கோயிலில் தங்க வேலைப்பாடு இன்னும் நடைபெற்று வருவதாக அவர் கூறினார்.
ராமர் கோயிலின் முக்கிய கட்டமைப்பு நிறைவடைந்துள்ள நிலையில், அருங்காட்சியகம், கலையரங்கம் மற்றும் விருந்தினர் மாளிகை உள்ளிட்ட கோயில் வளாகத்தின் பிற பகுதிகளில் கட்டுமான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. இந்த பணிகள் டிசம்பர் 2025க்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ராமர் தர்பாரின் கும்பாபிஷேகத்தைத் தொடர்ந்து, பொதுமக்கள் தரிசனத்திற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும், தற்போது குறைந்த எண்ணிக்கையிலான பக்தர்கள் மட்டுமே ராமர் தர்பாரைப் பார்வையிட அனுமதிக்கப்படுவதாகவும், நுழைவு சீட்டு மூலம் இலவச தரிசனம் வழங்கும் முயற்சிகள் நடைபெற்று வருகிறது. ராம தர்பார் கும்பாபிஷேக விழா அதிகளவிலான மக்களை ஈர்த்துள்ளதாகவும் அவர் கூறினார்.
ராமர் கோயில் அறக்கட்டளையின் செயலாளர் சம்பத் ராய் கூறுகையில்,
கோயிலில் 8 சிலைகளின் கும்பாபிஷேக விழா நிறைவடைந்துள்ளது. கருவறைக்கு மேலே உள்ள முதல் தளத்தில் நிறுவப்பட்ட சிலைகளில் நடுவில் ராம் தர்பார், வடகிழக்கு மூலையில் சிவலிங்கம், தென்கிழக்கு மூலையில் கணபதி சிலை, தெற்குப் பக்கத்தின் நடுவில் அனுமன் சிலை, தென்மேற்கு மூலையில் சூரியன், வடமேற்கு மூலையில் பகவதி, வடக்குப் பக்கத்தின் நடுவில் அன்னபூரணி ஆகியவை அடங்கும்.
கோயிலில் வரையறுக்கப்பட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள நிலையில், கோடை வெய்யிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.
அயோத்தி ராமர் கோயிலில் பிரதான கடவுளான ஸ்ரீ பாலராமரின் பிராணப் பிரதிஷ்டை கடந்தாண்டு ஜனவரியில் பிரதமர் மோடி தலைமையில் கோலாகலமாக நடைபெற்றது. இதைத் தொடர்ந்து தினமும் நாடு முழுவதிலும் இருந்து ஏராளமான பக்தர்கள் தரிசனம் மேற்கொண்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.