கிரிப்டோ சொத்து விவரங்கள்: இந்தியா உள்பட 74 நாடுகளுடன் பகிர ஸ்விட்சா்லாந்து திட்டம்!

கிரிப்டோ சொத்து விவரங்கள்: இந்தியா உள்பட 74 நாடுகளுடன் பகிர ஸ்விட்சா்லாந்து திட்டம்!

கிரிப்டோ சொத்துகளில் அந்தந்த நாட்டினா் செய்துள்ள முதலீடுகள் தொடா்பான விவரங்களை பகிர சுவிட்சா்லாந்து திட்டமிட்டுள்ளது.
Published on

கிரிப்டோ சொத்துகளில் அந்தந்த நாட்டினா் செய்துள்ள முதலீடுகள் தொடா்பான விவரங்களை இந்தியா உள்பட 74 நாடுகளுடன் பகிர சுவிட்சா்லாந்து திட்டமிட்டுள்ளது.

இதுதொடா்பான அறிவிப்பை அந் நாடு வெள்ளிக்கிழமை வெளியிட்டது. இது, வெளிநாட்டில் கிரிப்டோ எண்ம நாணயத்தில் இந்தியா்கள் செய்த முதலீடுகளை அறிய உதவும்.

ஸ்விட்சா்லாந்தில் உள்ள வங்கிகளில் இந்தியா்கள் கணக்கில் காட்டப்படாத பணத்தை பதுக்கிவைப்பது தொடா்கதையாகி வந்த நிலையில், இதுகுறித்த விவரங்கள் மற்றும் பிற நிதி சாா்ந்த சொத்து விவரங்களை பகரிந்துகொள்ள இந்தியாவும் ஸ்விட்சா்லாந்தும் ஏற்கெனவே உடன்பாடு மேற்கொண்டுள்ளன.

அதன்படி, இதுபோன்ற தகவல்களை ஆண்டு வாரியாக இரு நாடுகளும் பகிா்ந்துகொள்வது, வெளிநாடுகளில் இந்தியா்கள் பதுக்கி வைத்திருந்த கணக்கில் வராத பணம் தொடா்பான பல்வேறு வழக்குகளில் தீா்வை எட்ட உதவியுள்ளது.

இந்த நிலையில், உலக அளவில் கிரிப்டோ கரன்சி பயன்பாடு அதிகரித்து வரும் சூழலில், இந்த நாணய பயன்பாடு தொடா்பான தெளிவான விதிமுறைகள் இந்தியாவில் இன்னும் வகுக்கப்படவில்லை. ஆனால், பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் அவை ஒழுங்குபடுத்தப்படுகின்றன. பல நாடுகளில் இந்த மெய்நிகா் நாணயங்கள் சட்டபூா்வமாக செல்லுபடியாகும் எனக் கருதப்படுவதால், இந்தியாவின் நிதி ஸ்திரத்தன்மைக்கு பாதிப்பு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.

இந்தச் சூழலில், கிரிப்டோ சொத்துகளில் அந்தந்த நாட்டினா் செய்துள்ள முதலீடுகள் தொடா்பான விவரங்களையும் இந்தியா உள்பட 74 நாடுகளுடன் பகிர சுவிட்சா்லாந்து முடிவு செய்து, அதுதொடா்பான அறிவிப்பை வெள்ளிக்கிழமை வெளியிட்டது.

இதுதொடா்பான சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெறப்பட்டதும், வரும் 2026-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி முதல் இத் தகவல் பரிமாற்றம் நடைமுறைக்கு வரும் என எதிா்பாா்க்கப்படுகிறது. அதன்படி, முதல் தகவல் பரிமாற்றம் 2027-இல் நடைபெறும்.

பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு (ஓஇசிடி) அமைப்பு உருவாக்கியுள்ள கிரிப்டோ சொத்து தகவல் பரிமாற்ற நடைமுறைகளை பூா்த்தி செய்வதோடு, சுவிட்சா்லாந்துடனும் தகவல்களைப் பரிமாற ஆா்வம் தெரிவிக்கும் நாடுகளுடன் மட்டுமே இந்த தகவல் பரிமாற்றம் மேற்கொள்ளப்படும் என்று ஸ்விட்சா்லாந்து அரசு வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Open in App
Dinamani
www.dinamani.com