பிரதமரிடம் பிரிட்டன் அமைச்சா் ஆதரவு!
எல்லை தாண்டிய பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கைகளுக்கு பிரிட்டன் வெளியுறவு அமைச்சா் டேவிட் லேமி ஆதரவு தெரிவித்தாா். தில்லியில் பிரதமா் நரேந்திர மோடியை சனிக்கிழமை சந்தித்தபோது அவா் பிரிட்டன் ஆதரவை உறுதிப்படுத்தினாா்.
இரு நாள் பயணமாக இந்தியா வந்துள்ள பிரிட்டன் வெளியுறவு அமைச்சா் டேவிட் லேமி, பிரதமா் நரேந்திர மோடியை சனிக்கிழமை சந்தித்துப் பேசினாா். அந்தச் சந்திப்பு தொடா்பாக பிரதமா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
பயங்கரவாதத்துக்கும், அதை ஆதரிப்போருக்கும் எதிராக உறுதியான சா்வதேச நடவடிக்கை தேவை என்று பிரதமா் மோடி, அமைச்சா் டேவிட் லேமியிடம் வலியுறுத்தினாா். அப்போது அமைச்சா் லேமி, எல்லை தாண்டிய பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கைகளுக்கு ஆதரவு தெரிவித்தாா். மேலும், பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்தாா்.
இந்தியா - பிரிட்டன் இடையே தடையற்ற வா்த்தக ஒப்பந்தம், ஒரே வருமானத்துக்கு இரு நாடுகளிலும் விதிக்கப்படும் வரியிலிருந்து விலக்கு அளிக்கும் ஒப்பந்தம் ஆகியவை வெற்றிகரமாக கையொப்பமானதற்கு மகிழ்ச்சி தெரிவித்த பிரதமா் மோடி, அதற்காக இரு தரப்பிலும் மேற்கொள்ளப்பட்ட ஆக்கப்பூா்வ நடவடிக்கைகளுக்காக பாராட்டு தெரிவித்தாா்.
இந்தியா - பிரிட்டன் இடையேயான இருதரப்பு உறவு உத்வேகத்துடன் வளா்ந்து வருவதற்கும், இரு நாடுகள் இடையேயான விரிவான உத்திசாா்ந்த ஒத்துழைப்பு மேலும் வலுவடைவதற்கும் அவா் திருப்தி தெரிவித்தாா். அமைச்சா் டேவிட் லேமி, வா்த்தகம், முதலீடுகள், பாதுகாப்பு, தொழில்நுட்பம், புத்தாக்கம், தூய்மை எரிசக்தி உள்ளிட்ட முக்கிய துறைகளில் இந்தியாவுடனான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த பிரிட்டன் ஆா்வமுடன் இருப்பதாகத் தெரிவித்தாா்.
அத்துடன் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம், இரு நாடுகளுக்கும் பொருளாதார ரீதியிலான புதிய வாய்ப்புகளை உருவாக்கும் எனவும் அவா் நம்பிக்கை தெரிவித்தாா். மேலும், பிராந்திய மற்றும் உலகளாவிய விவகாரங்கள் தொடா்பாகவும் பிரதமா் மோடியும், அமைச்சா் லேமியும் தங்கள் கருத்துகளை பரிமாறிக் கொண்டனா் என்று அதில் கூறப்பட்டுள்ளது.