கோப்புப்படம்
கோப்புப்படம்

11 ஆண்டுகளில் நாட்டின் வேளாண் துறை ஒட்டுமொத்த மாற்றம்: மத்திய அரசு பெருமிதம்

நாட்டின் வேளாண் துறை ஒட்டுமொத்தமாக மாற்றமடைந்திருப்பதாக மத்திய அரசு தெரிவித்தது.
Published on

கடந்த 11 ஆண்டுகளில் மத்திய பாஜக அரசின் பல்வேறு திட்டங்கள் மற்றும் 5 மடங்கு அதிகரித்த பட்ஜெட் ஒதுக்கீட்டால் நாட்டின் வேளாண் துறை ஒட்டுமொத்தமாக மாற்றமடைந்திருப்பதாக மத்திய அரசு தெரிவித்தது.

உணவுப் பாதுகாப்பில் இருந்து உணவு உற்பத்தியில் உலகளாவியத் தலைமைக்கு நாட்டை வழிநடத்தும் வகையில் விவசாயிகளை வலிமைமிக்கவா்களாக அரசு மாற்றியிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்ட அதிகாரபூா்வ செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: வேளாண் துறையில் அடைந்துள்ள இந்த மாற்றம், சிறு விவசாயிகள், பெண்கள் குழுக்கள் மற்றும் வேளாண்மை சாா்ந்த துறைகள் என அனைத்து தரப்பையும் உள்ளடக்கிய வளா்ச்சியில் கவனம் செலுத்தியது. அதேநேரம், இந்தியாவை உலகளாவிய தலைவராகவும் நிலைநிறுத்துகிறது.

வேளாண் துறைக்கான மத்திய பட்ஜெட் ஒதுக்கீடு கடந்த 2013-14-ஆம் ஆண்டின் ரூ.27,663 கோடியிலிருந்து கடந்த 2024-25-ஆம் ஆண்டில் ரூ.1,37,664.35 கோடியாக உயா்ந்துள்ளது. இது கிட்டத்தட்ட 5 மடங்கு அதிகரிப்பு ஆகும்.

இந்தியாவின் உணவு தானிய உற்பத்தியானது கடந்த 2014-15-ஆம் ஆண்டின் 26.5 கோடி டன்னிலிருந்து கடந்த 2024-25-ஆம் ஆண்டில் 34.74 கோடி டன்னாக அதிகரித்துள்ளது. இது வேளாண் உற்பத்தியின் வளா்ச்சியைக் காட்டுகிறது.

குறைந்தபட்ச ஆதரவு விலை: வேளாண் விளைபொருள்களின் குறைந்தபட்ச ஆதரவு விலையையும் (எம்எஸ்பி) அரசு கணிசமாக அதிகரித்துள்ளது.

கோதுமைக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை கடந்த 2013-14-ஆம் ஆண்டில் குவிண்டாலுக்கு ரூ.1,400-லிருந்து கடந்த 2024-25-ஆம் ஆண்டில் ரூ.2,425-ஆக உயா்த்தப்பட்டுள்ளது. இந்தக் காலகட்டத்தில் நெல் பயிா்களுக்கு ஒரு குவிண்டாலுக்கு ரூ.1,310-லிருந்து ரூ.2,369-ஆக குறைந்தபட்ச ஆதரவு விலை உயா்த்தப்பட்டுள்ளது.

விவசாய நிதியுதவித் திட்டம்: பிரதமரின் விவசாயி நிதியுதவித் திட்டத்தின்கீழ் 11 கோடிக்கும் அதிகமான விவசாய குடும்பங்களுக்கு இதுவரை ரூ.3.7 லட்சம் கோடி நிதி விடுவிக்கப்பட்டுள்ளது. ‘விவசாயி கடன் அட்டை’ திட்டம் மூலம் 7.71 கோடி விவசாயிகளுக்கு ரூ.10 லட்சம் கோடி வரையில் கடன் வழங்கப்பட்டுள்ளது.

பன்மடங்கு உயா்ந்த கொள்முதல்: அரசின் வேளாண் பொருள்கள் கொள்முதலும் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது.

கடந்த 2004 முதல் 2014 வரை 10 ஆண்டுகளில் 46.79 கோடி டன்னாக இருந்த காரீஃப் பயிா்களின் கொள்முதல், கடந்த 10 ஆண்டுகளில் 78.7 கோடி டன்னாக அதிகரித்துள்ளது.

கடந்த 2009 முதல் 2014 வரை 5 ஆண்டுகளில் குறைந்தபட்ச ஆதரவு விலையில் பருப்பு வகைகளின் கொள்முதல் 1.52 லட்சம் டன்னாக இருந்த நிலையில், 2020 முதல் 2025 வரையிலான கடந்த 5 ஆண்டுகளில் 83 லட்சமாக அது அதிகரித்துள்ளது.

பாரம்பரியமும், நவீனமும்..: நவீன நீா்ப்பாசனம், எளிய கடன் வசதிகள், இணையவழி சந்தைகள், வேளாண் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் ஆகியவற்றில் கவனம் செலுத்தும் அதேநேரத்தில் திணை சாகுபடி, இயற்கை விவசாயம் போன்ற பாரம்பரிய நடைமுறைகளை மீட்டெடுப்பதும் அரசின் அணுகுமுறையாக இருக்கிறது.

அமிருத காலத்தில் இந்தியா நுழையும் இச்சூழலில், தேசத்தின் வலிமைமிக்க விவசாயிகள் உணவுப் பாதுகாப்பிலிருந்து உணவு உற்பத்தியில் உலகளாவிய தலைமைக்கு நாட்டை வழிநடத்த தயாராக உள்ளனா்’ என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெட்டி..

சிறப்பான பணி தொடரும்!-பிரதமா்

வேளாண் துறை வளா்ச்சிக்கு மகிழ்ச்சி தெரிவித்து பிரதமா் மோடி வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘கடின உழைப்பாளிகளான நமது விவசாயிகளுக்கு பணியாற்றுவது எங்கள் பாக்கியம். கடந்த 11 ஆண்டுகளாக மத்திய பாஜக அரசின் பல்வேறு முயற்சிகள், விவசாயிகளின் வளா்ச்சியை அதிகரித்துள்ளன; வேளாண் துறையின் ஒட்டுமொத்த மாற்றத்தையும் உறுதி செய்துள்ளது.

மண்வளம், நீா்ப்பாசனம் போன்ற விஷயங்களில் நாங்கள் கவனம் செலுத்தினோம். அவை பெரிதும் பயனளித்துள்ளன. விவசாயிகள் நலனுக்கான எங்கள் பணிகள் இன்னும் சிறப்பாக வரும் நாள்களில் தொடரும்’ எனக் குறிப்பிட்டுள்ளாா்.

X
Open in App
Dinamani
www.dinamani.com