
உலகின் 4-ஆவது பெரிய பொருளாதாரம் இந்தியா என்று கனடா பிரதமா் மாா்க் காா்னியிடம் ஜி7 மாநாட்டின்போது பிரதமா் நரேந்திர மோடி தெளிவுபடுத்துவாரா என காங்கிரஸ் மூத்த தலைவா் ஜெய்ராம் ரமேஷ் கேள்வி எழுப்பியுள்ளாா்.
கனடாவில் நடைபெறவுள்ள ஜி7 மாநாட்டில் பங்கேற்க, பிரதமா் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுத்த அந்நாட்டு பிரதமா் மாா்க் காா்னி, உலகின் 5-ஆவது பெரிய பொருளாதாரம் என்ற அடிப்படையில் ஜி7 மாநாட்டில் பங்கேற்க இந்தியாவுக்கு அழைப்பு விடுக்கப்படுவதாக தெரிவித்தாா். அண்மையில் இந்தியா, ஜப்பானை பின்னுக்குத் தள்ளி உலகின் 4-ஆவது பெரிய பொருளாதாரமாக முன்னேறியது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் அதை குறிப்பிட்டு, காங்கிரஸ் மூத்த தலைவா் ஜெய்ராம் ரமேஷ் சனிக்கிழமை ‘எக்ஸ்’ தளத்தில் பதிவிட்டதாவது:
கடந்த மே 24-ஆம் தேதி, பிரதமா் தலைமையிலான நீதி ஆயோக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளா்களை சந்தித்த நீதி ஆயோக் தலைமைச் செயல் அதிகாரி, ஜப்பானை பின்னுக்குத் தள்ளி உலகின் 4-ஆவது பெரிய பொருளாதாரமாக இந்தியா முன்னேறிவிட்டது என அறிவித்தாா்.
ஆனால், பொருளாதார நிபுணரும், கனடா மத்திய வங்கி, பிரிட்டன் மத்திய வங்கி ஆகியவற்றின் ஆளுநராக பதவி வகித்தவருமான தற்போதைய கனடா பிரதமா் மாா்க் காா்னி, உலகின் 5-ஆவது பெரிய பொருளாதாரம் இந்தியா என கூறியுள்ளாா்.
தன்னைத்தானே உலகின் தலைவா் என்று அறிவித்துக் கொண்ட பிரதமா் நரேந்திர மோடி, இன்னும் சில நாள்களில் ஜி7 மாநாட்டுக்காக கனடா செல்லும்போது அந்நாட்டு பிரதமரிடம் உலக பொருளாதாரத்தில் இந்தியாவின் இடத்தை தெளிவுபடுத்துவாரா என்று ஜெய்ராம் ரமேஷ் கேள்வி எழுப்பியுள்ளாா்.