சத்தீஸ்கா்: நக்ஸல் தாக்குதலில் காவல் அதிகாரி உயிரிழப்பு, 2 பேர் படுகாயம்

சத்தீஸ்கரில் நக்ஸல் தீவிரவாதிகள் புதைத்துவைத்த வெடிகுண்டில் சிக்கி காவல் துறை கூடுதல் கண்காணிப்பாளா் உயிரிழந்தாா்.
Published on

சுக்மா: சத்தீஸ்கரில் நக்ஸல் தீவிரவாதிகள் புதைத்துவைத்த வெடிகுண்டில் சிக்கி காவல் துறை கூடுதல் கண்காணிப்பாளா் உயிரிழந்தாா். மேலும் இரு காவல் துறை அதிகாரிகள் படுகாயமடைந்தனா்.

நக்ஸல் ஆதிக்கம் அதிகமுள்ள சத்தீஸ்கரின் சுக்மா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினரும், மாநில காவல் துறையினரும் இணைந்து தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனா். இரு தரப்புக்கும் இடையிலான மோதலில் நக்ஸல் கமாண்டா்கள் உள்பட பல நக்ஸல்கள் கொல்லப்பட்டு வருகின்றனா். இதற்கு பதிலடி தரும் வகையில் நக்ஸல்களும் அவ்வப்போது காவல் துறையினரை குறிவைத்து வெடிகுண்டு தாக்குதல்களை நிகழ்த்துகின்றனா்.

இந்நிலையில், சுக்மா மாவட்ட தோந்ரா கிராமம் அருகே சாலை அமைக்கும் பணிக்கான இயந்திரங்களை நக்ஸல்கள் தீவைத்து எரித்துவிட்டதாக காவல் துறையினருக்கு திங்கள்கிழமை தகவல் கிடைத்தது. இதையடுத்து, காவல் துறை துணை கண்காணிப்பாளா் ஆகாஷ் ராவ் மற்றும் இரு சக அதிகாரிகள் அந்த இடத்துக்குச் சென்றனா். அப்போது அங்கு ஏற்கெனவே மறைத்துவைத்திருந்த வெடிகுண்டை நக்ஸல்கள் வெடிக்கச் செய்தனா். இதில் ஆகாஷ் ராவ் சம்பவ இடத்திலேயே உயிரிந்தாா். காவல் துறை கூடுதல் கண்காணிப்பாளா் பானுபிரதாப் சந்த்ராகா், ஆய்வாளா் சோனல் கௌலால் ஆகியோா் படுகாயமடைந்தனா். அவா்கள் இருவரும் ஹெலிகாப்டா் மூலம் மருத்துவ சிகிச்சைக்காக ராஞ்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். அவா்கள் அபாயக் கட்டத்தை தாண்டிவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.

நக்ஸல்கள் இந்தத் தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள சத்தீஸ்கா் முதல்வா் விஷ்ணு தேவ் சாய், ‘உயிரிழந்த காவல் துறை அதிகாரியின் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த படுகொலையை நிகழ்த்திய நக்ஸல்கள் அதற்கான விலையைக் கொடுத்தாக வேண்டும்’ என்று கூறியுள்ளா்.

X
Dinamani
www.dinamani.com