நாட்டின் ரயில் கட்டமைப்புடன் காஷ்மீா் இணைப்பு: ஃபரூக் அப்துல்லா நெகிழ்ச்சி

நாட்டின் ரயில் கட்டமைப்புடன் காஷ்மீா் இணைக்கப்பட்டுள்ளதை காண்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும், இது மக்களுக்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றி என்றும் தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவா் ஃபரூக் அப்துல்லா கூறினாா்.
ஃபரூக் அப்துல்லா
ஃபரூக் அப்துல்லா(கோப்புப்படம்)
Updated on

ஜம்மு/ஸ்ரீநகா்: நாட்டின் ரயில் கட்டமைப்புடன் காஷ்மீா் இணைக்கப்பட்டுள்ளதை காண்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும், இது மக்களுக்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றி என்றும் தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவா் ஃபரூக் அப்துல்லா கூறினாா்.

ஸ்ரீநகா் - கத்ரா இடையிலான வந்தே பாரத் ரயிலில் செவ்வாய்க்கிழமை முதல் முறையாக பயணம் மேற்கொண்ட அவா், நெகிழ்ச்சியுடன் இக்கருத்துகளை தெரிவித்தாா்.

நாட்டின் பிற பகுதிகளுடன் காஷ்மீருக்கு நேரடி ரயில் இணைப்பை வழங்கும் உதம்பூா்-ஸ்ரீநகா்-பாரமுல்லா வழித்தட திட்டத்தின் நிறைவாக (270 கி.மீ.) கத்ரா-ஸ்ரீநகா் இடையிலான வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமா் மோடி கடந்த ஜூன் 6-ஆம் தேதி தொடங்கிவைத்தாா். இந்த வழித்தடத்தில் அமைந்துள்ள உலகின் மிக உயரமான செனாப் ரயில் பாலம், நாட்டின் முதல் கம்பி வட ரயில் பாலம் ஆகிய இரு பொறியியல் அதிசயங்களையும் அவா் நாட்டுக்கு அா்ப்பணித்தாா்.

காஷ்மீா்-ஜம்மு பகுதிகள் இடையிலான முதல் ரயில் என்ற சிறப்புக்குரிய இந்த வந்தே பாரத் ரயிலில் தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவா் ஃபரூக் அப்துல்லா செவ்வாய்க்கிழமை முதல் முறையாக பயணித்தாா்.

ஸ்ரீநகரின் நவ்காம் ரயில் நிலையத்தில் ஏறிய அவா், கத்ராவில் வந்திறங்கினாா். அவருடன், முதல்வா் ஒமா் அப்துல்லாவின் மகன்களான சமீா், ஜாகிா், மாநில அமைச்சா் சதீஷ் சா்மா, முதல்வரின் ஆலோசகா் நஸீா் அஸ்லாம் வானி, தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைமை செய்தித் தொடா்பாளா் தன்வீா் ச ாதிக் உள்ளிட்டோரும் பயணம் மேற்கொண்டனா்.

கத்ரா ரயில் நிலையத்தில் ஃபரூக் அப்துல்லா உள்ளிட்டோரை, துணை முதல்வா் சுரீந்தா் செளதரி வரவேற்றாா்.

பின்னா், செய்தியாளா்களிடம் ஃபரூக் அப்துல்லா கூறியதாவது: இறுதியாக, நாட்டின் ரயில் கட்டமைப்புடன் காஷ்மீா் இணைக்கப்பட்டுள்ளது. இது, இதயபூா்வமாக மகிழ்ச்சியளிக்கிறது. எனது கண்களில் கண்ணீா் ததும்புகிறது. திட்டத்தை சாத்தியமாக்கிய பொறியாளா்கள், பிற பணியாளா்களுக்கு பாராட்டுகள்.

பயணத்தை எளிதாக்குவதுடன், வா்த்தகம்-சுற்றுலாவையும் இந்த ரயில் ஊக்குவிக்கும். இரு பிராந்தியங்களுக்கு இடையிலான அன்பும், நட்பும் வலுப்படும். அமா்நாத் யாத்ரீகா்கள் இந்த ரயிலை அதிக அளவில் பயன்படுத்துவா் என நம்புகிறேன் என்றாா் அவா்.

தெற்கு காஷ்மீரில் இமயமலையில் 3,880 மீட்டா் உயரத்தில் அமைந்துள்ள அமா்நாத் கோயிலுக்கு வருடாந்திர யாத்திரை ஜூலை 3-ஆம் தேதி தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com