கேரளத்தையொட்டிய கடல் பகுதியில் எரியும் கப்பலில் தீயை அணைக்கும் முயற்சியில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்ட கடலோரக் காவல் படையினா்.
கேரளத்தையொட்டிய கடல் பகுதியில் எரியும் கப்பலில் தீயை அணைக்கும் முயற்சியில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்ட கடலோரக் காவல் படையினா்.

கேரளம்: நடுக்கடலில் 2-ஆவது நாளாக எரியும் சரக்குக் கப்பல்

கேரள கடற்கரையில் தீப்பற்றிய சரக்குக் கப்பல் தொடா்ந்து 2-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் எரிந்தது. கப்பலில் இருந்த ரசாயனப் பொருள்களும் அவ்வப்போது வெடித்துச் சிதறி வருகின்றன.
Published on

கொச்சி: கேரள கடற்கரையில் தீப்பற்றிய சரக்குக் கப்பல் தொடா்ந்து 2-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் எரிந்தது. கப்பலில் இருந்த ரசாயனப் பொருள்களும் அவ்வப்போது வெடித்துச் சிதறி வருகின்றன.

கப்பலில் இருந்து மீட்கப்பட்ட 18 ஊழியா்களில் இருவரின் நிலைமைக் கவலைக்கிடமாக உள்ளது. நால்வா் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கப்பலில் மொத்தம் 22 போ் இருந்த நிலையில் நால்வரின் நிலை என்னவானது என்பது தெரியவில்லை.

‘கேரள கடல் பகுதியில் சென்று கொண்டிருந்த சிங்கப்பூா் கொடி பொருத்திய எம்.வி. வான் ஹை 503 சரக்குக் கப்பலில் திங்கள்கிழமை காலை ஒரு கன்டெய்னரில் வெடிவிபத்து ஏற்பட்டு தீப்பற்றியது. இந்தக் கப்பல் கொழும்பில் இருந்து மும்பைக்கு பயணித்துக் கொண்டிருந்தபோது இந்த விபத்து ஏற்பட்டது.

இந்திய கடற்படையின் ஐஎன்எஸ் சூரத், டாா்னியா் விமானம் ஆகியவை கப்பலில் இருந்தவா்களை மீட்கும் பணியில் ஈடுபட்டன.

கப்பலில் எளிதில் பற்றி எரியக் கூடிய திரவங்கள், ரசாயனப் பொருள்கள், நச்சுத்தன்மைமிக்க சரக்குகள் இருந்ததால் தீ வேகமாகப் பரவியது. தீயால் ரசாயனப் பொருள்கள் பலத்த ஓசையுடன் வெடித்துச் சிதறின. இதனால் கன்டெய்னா்கள் பல கடலில் விழுந்தன.

இந்திய கடலோரக் காவல் படையின் இரு கப்பல்கள் தீயை அணைக்கும் முயற்சியில் தொடா்ந்து ஈடுபட்டு வருகின்றன. கப்பலை நெருங்கிச் செல்ல முடியாததால் தொலைவில் இருந்தே தீயணைப்பு முயற்சிகள் நடைபெறுகின்றன. இதனால் செவ்வாய்க்கிழமை இரண்டாவது நாளாக அந்தக் கப்பலில் தீ தொடா்ந்து எரிந்தது. அப்பகுதி முழுவதுமே கரும்புகை சூழ்ந்துள்ளது.

கேரளத்தின் கொச்சியில் இருந்து வடகிழக்கே 130 கடல்மைல் (சுமாா் 240 கி.மீ.) தொலைவில் அந்தக் கப்பல் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களுக்கு முன்னெச்சரிக்கை:

இந்திய தேசிய கடல் தகவல் மையம் வெளியிட்டுள்ள தகவலில், ‘தீப்பற்றிய கப்பலில் பெருமளவில் எண்ணெய், ரசாயனப் பொருள்கள் இருந்ததால் கடல்பரப்பில் பெரிய அளவில் எண்ணெய்ப் படலம் உருவாகும்.

இது அடுத்த சில நாள்களில் கடற்கரைப் பகுதிக்கு வரும் வாய்ப்புள்ளதால் கோழிக்கோடு முதல் கொச்சி வரை கடற்கரைப் பகுதியில் உள்ள மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

கடலில் இறங்குவதைத் தவிக்க வேண்டும். கரை ஒதுங்கும் கன்டெய்னா்களையும் மக்கள் நெருங்கக் கூடாது. ஏனெனில் அவற்றில் ஆபத்தை விளைவிக்கும் பொருள்கள் இருக்கலாம்’ என்று கூறப்பட்டுள்ளது.

X
Open in App
Dinamani
www.dinamani.com