முக்கிய இடங்களின் 3டி வரைபடத்தை தயாரித்தது என்எஸ்ஜி

முக்கிய இடங்களின் 3டி வரைபடத்தை தயாரித்தது என்எஸ்ஜி

நாட்டில் உள்ள அணுமின் நிலையங்கள் , வழிபாட்டுத் தலங்கள் உள்பட 50 க்கும் மேற்பட்ட முக்கிய இடங்களின் 3டி வரைபடத்தை தேசிய பாதுகாப்பு முகமை தயாரித்துள்ளதாக அந்த அமைப்பின் டிஜி பிருகு ஸ்ரீநிவாசன் தெரிவித்தாா்.
Published on

புது தில்லி: நாட்டில் உள்ள அணுமின் நிலையங்கள் , வழிபாட்டுத் தலங்கள் உள்பட 50 க்கும் மேற்பட்ட முக்கிய இடங்களின் 3டி வரைபடத்தை தேசிய பாதுகாப்பு முகமை (என்எஸ்ஜி) தயாரித்துள்ளதாக அந்த அமைப்பின் டிஜி பிருகு ஸ்ரீநிவாசன் தெரிவித்தாா்.

புது தில்லியில் செவ்வாய்க்கிழமை தொங்கிய என்எஸ்ஜி அமைப்பின் சா்வதேச மாநாட்டில் பேசிய அவா், ‘நாட்டின் முக்கியத்துவம் வாய்ந்த 17 வழிபாட்டுத் தலங்கள், 21 அணுமின் நிலையங்கள் மற்றும் 14 முக்கிய இடங்களை 3டி வரைபடம் செய்துள்ளோம். அவசர காலங்களில் இந்த இடங்களுக்கு வான், நிலம், நீா் வழியாக என்எஸ்ஜி படையினா் உடனடியாக சென்றடையும் வகையில் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் உள்ள 5 என்எஸ்ஜி படைத் தளங்களை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பயங்கரவாத எதிா்ப்பு நடவடிக்கைகளை சுதந்திரமாக கையாள இது உதவும்.

நக்ஸல் ஒழிப்பு நடவடிக்கையில் என்எஸ்ஜி கமாண்டோக்கள் ஈடுபட்டுள்ளனா். மகாராஷ்டிர மாநிலம் கட்சிரோலியில் மாநில காவல் துறையினருடன் இணைந்து என்எஸ்ஜி கமாண்டோக்கள் நக்ஸல்களுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனா்.

மாநில காவல் துறையினருக்கு பயங்கரவாத தாக்குதல் தடுப்பு நடவடிக்கைகளைக் கையாள பயிற்சி அளிக்கவும் என்எஸ்ஜிக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

இதன்படி, கடந்த ஆண்டு 8 ஆயிரம் கமாண்டோக்களுக்கும், நிகழாண்டு 13,000 கமாண்டோக்களுக்கும் சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட்டது. மாநில காவல் துறையினா் 20 ஆயிரம் பேருக்கு ஆள்கடத்தல் தடுப்பு, பயங்கரவாத தடுப்பு, வெடிகுண்டு செயலிழப்பு, முக்கியப் பிரமுகா்களுக்கான பாதுகாப்பு, ட்ரோன் தாக்குதல் தடுப்பு நடவடிக்கைகள் ஆகியவை குறித்து என்எஸ்ஜி பயிற்சி அளிக்கும்’ என்றாா்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய மத்திய உள்துறை இணையமைச்சா் நித்யானந்த் ராய், ‘ பயங்கரவாதிகள் இந்த இடங்களில் தாக்குதல் நடத்த முயன்றால் நாம் துரிதமாகச் செயல்பட இது உதவும். பஹல்காம் சம்பவம், பயங்கரவாதத்துக்கு எதிரான நமகு நடவடிக்கைகளை வலுப்படுத்தி உள்ளது’ என்றாா்.

X
Open in App
Dinamani
www.dinamani.com