7 ஆயிரத்தைக் கடந்த கரோனா: ஒரேநாளில் 306 பேருக்குப் பாதிப்பு!

நாட்டில் மீண்டும் தலைதூக்கியிருக்கும் கரோனா பாதிப்பு ஏழு ஆயிரத்தைத் தாண்டியது.
கரோனா பாதிப்பு
கரோனா பாதிப்பு
Published on
Updated on
1 min read

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 306 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டிருக்கும் அறிக்கையின்படி,

புதிதாக 306 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அதேசமயம் கேரளத்தில் 3, கர்நாடகத்தில் இருவர், மகாராஷ்டிரத்தில் ஒருவர் என ஆறு பேர் தொற்று பாதித்து பலியாகியுள்ளனர். இறந்தவர்களில் ஒருவர் 43 வயதுடைய ஆண் நோயெதிர்ப்பு சக்தி குறைபாடு காரணமாகவும், மற்றவர்கள் வயதானவர்கள் மற்றும் முன்னதாக சுவாச மற்றும் நாள்பட்ட உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள்.

கேரளத்தில் அதிகளவில் கரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ளன. தரவுகளின்படி 2,223 பேர் கரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 170 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

குஜராத்தில் புதிதாக 114 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் மொத்தம் 1,223 பதிவாகியுள்ளது. தில்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 66 பேருக்கு பாதிக்கப்பட்டுள்ளதையடுத்து மொத்தம் 757 வழக்குகளும், தமிழகத்தைப் பொருத்தவரை மொத்த பாதிப்பு 204 ஆகவும் பதிவாகியுள்ளன.

கரோனா தீநுண்மிகளின் வெளி புரதம் உருமாற்றமடையும் போதெல்லாம் சமூகத்தில் சிறிய அளவிலான பாதிப்பை அது ஏற்படுத்திச் செல்லும். அதனால் பெரிய அளவு தாக்கம் இருக்காது.

அத்தகைய நிலைதான் தற்போதும் ஏற்பட்டுள்ளது. உலகம் முழுவதும் இப்போது என்பி 1.8.1 என்ற வகை கரோனா பாதிப்பு பரவி வருவதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

இது ஜெ.என்.1 வைரஸின் உட்பிரிவு. அந்த ஜெ.என்.1 வைரஸ் ஒமைக்ரானிலிருந்து உருவான ஒன்று. வைரஸ் பரிமாணத்துக்கான சா்வதேச தொழில்நுட்ப ஆலோசனைக் குழு (டிஏஜி-விஇ) அண்மையில் மேற்கொண்ட ஆராய்ச்சியில் என்பி 1.8.1 தொற்றால் பொது சுகாதார நிலைக்கு எந்த அச்சுறுத்தலும் ஏற்படாது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் நோ்ந்த உயிரிழப்புகளும் கரோனாவால் நிகழவில்லை. மாறாக, இணைநோய்கள் மற்றும் வயது மூப்பு காரணமாக நேரிட்டுள்ளன. எனவே, பொதுமக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை. நோய்த் தடுப்பு விதிமுறைகளை கடைப்பிடித்தாலே போதுமானது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Open in App
Dinamani
www.dinamani.com