கர்நாடக முதல்வருக்கு எதிரான மாற்று நில முறைகேடு வழக்கு: ரூ.100 கோடி சொத்துகள் முடக்கம்

கர்நாடக முதல்வர் சித்தராமையா தொடர்பான மாற்று நில முறைகேடு வழக்கில், ரூ.100 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது.
கர்நாடக முதல்வா் சித்தராமையா
கர்நாடக முதல்வா் சித்தராமையா(கோப்புப் படம்)
Published on
Updated on
2 min read

புது தில்லி: கர்நாடக முதல்வர் சித்தராமையா தொடர்பான மாற்று நில முறைகேடு வழக்கில், ரூ.100 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது.

வீட்டுவசதி கூட்டுறவு சங்கம், மைசூரு நகர்ப்புற வளர்ச்சி ஆணைய அதிகாரிகள் உள்ளிட்ட செல்வாக்குமிக்க நபர்களுடன் தொடர்புள்ள வேறு சிலரின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ள அந்தச் சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது.

தற்போது முடக்கப்பட்டுள்ள ரூ.100 கோடி மதிப்பிலான சொத்துகளையும் சேர்த்து, இதுவரை இந்த வழக்கில் சுமார் ரூ.400 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத் துறை தெரிவித்தது.

கர்நாடகத்தில் மைசூரு நகர்ப்புற வளர்ச்சி ஆணையம் சார்பில் முதல்வர் சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு சொந்தமான 3 ஏக்கருக்கும் மேலான நிலத்தைக் கையகப்படுத்தி, அதற்கு மாற்று நிலம் ஒதுக்கியதில் முறைகேடு நடந்ததாக சமூக ஆர்வலர் ஸ்நேகமயி கிருஷ்ணா அளித்த புகாரின்பேரில், லோக் ஆயுக்த போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இந்தப் புகார் தொடர்பாக லோக் ஆயுக்த போலீஸார் 11,000 பக்கங்கள் கொண்ட இறுதி விசாரணை அறிக்கையை பெங்களூரில் உள்ள எம்.பி., எம்எல்ஏக்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.

அந்த அறிக்கையில், "மாற்று நில முறைகேடு வழக்கில் ஆதாரங்கள் எதுவும் இல்லாததால் முதல்வர் சித்தராமையா, அவரது மனைவி பார்வதி உள்ளிட்டோர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை. எனவே, இந்த வழக்கு நடவடிக்கை எடுக்க உகந்தது அல்ல' என்று குறிப்பிடப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக அமலாக்கத் துறை செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டதாவது:

லோக் ஆயுக்த போலீஸார் பதிவு செய்த வழக்கை அடிப்படையாகக் கொண்டு, மாற்று நில முறைகேடு தொடர்பாக அமலாக்கத் துறை விசாரணையைத் தொடங்கியது.

இந்த வழக்கு தொடர்பாக பண முறைகேடு தடுப்புச் சட்டப் பிரிவுகளின் கீழ், ரூ.100 கோடி மதிப்பிலான 92 அசையா சொத்துகளை (மைசூரு நகர்ப்புற வளர்ச்சி ஆணைய இடங்கள்) அமலாக்கத் துறையின் பெங்களூரு மண்டல அலுவலகம் திங்கள்கிழமை முடக்கியது.

வீட்டுவசதி கூட்டுறவு சங்கம், மைசூரு நகர்ப்புற வளர்ச்சி ஆணைய அதிகாரிகள் உள்ளிட்ட செல்வாக்குமிக்க நபர்களுடன் தொடர்புள்ள வேறு சிலரின் பெயரில் அந்தச் சொத்துகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

தகுதியற்ற நபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு மாற்று நிலம் ஒதுக்கியதற்கு ரொக்கம், வங்கிப் பரிவர்த்தனை, அசையும் மற்றும் அசையா சொத்துகளாக லஞ்சம் பெறப்பட்டதற்கான ஆதாரங்கள் திரட்டப்பட்டுள்ளன.

அரசு உத்தரவுகளுக்கு மாறாக போலி மற்றும் அரைகுறை ஆவணங்கள் மூலமாகவும், நில ஒதுக்கீட்டுக்கான கடிதங்களில் முன்தேதியிட்டு முறைகேடு செய்தும் தகுதியற்ற பயனாளிகளுக்கு முறைகேடாக நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது.

நிலம் ஒதுக்கப்பட்டதில் பலன் அடைந்தவர்கள் மூலம், முறைகேட்டில் முக்கியப் பங்காற்றிய அதிகாரிகளுக்கு பிரதிபலனாக பணம் அனுப்பப்பட்டுள்ளது. அந்தப் பணம் அதிகாரிகளின் உறவினர்கள், உதவியாளர்களின் வங்கிக் கணக்குகள் மற்றும் வீட்டுவசதி கூட்டுறவு சங்கம் மூலம் அனுப்பப்பட்டுள்ளது.

முறைகேடாக ஒதுக்கப்பட்ட நிலங்களில் சிலவற்றை மைசூரு நகர்ப்புற வளர்ச்சி ஆணைய அதிகாரிகளின் உறவினர்கள் பெயரில் வாங்க அந்தப் பணம் பயன்படுத்தப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Open in App
Dinamani
www.dinamani.com