யுஜிசி (கோப்புப் படம்)
யுஜிசி (கோப்புப் படம்)

ராகிங் தடுப்பு விதிகளை பின்பற்றாத 89 கல்வி நிறுவனங்களுக்கு நோட்டீஸ்: யுஜிசி நடவடிக்கை

ராகிங் தடுப்பு விதிமுறைகளை முறையாக அமல்படுத்தவில்லை எனக் கூறி தமிழகத்தில் ஐந்து கல்வி நிறுவனங்கள் உள்பட நாடு முழுவதும் 89 கல்வி நிறுவனங்களுக்கு பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) நோட்டீஸ் அனுப்பி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
Published on

ராகிங் தடுப்பு விதிமுறைகளை முறையாக அமல்படுத்தவில்லை எனக் கூறி தமிழகத்தில் ஐந்து கல்வி நிறுவனங்கள் உள்பட நாடு முழுவதும் 89 கல்வி நிறுவனங்களுக்கு பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) நோட்டீஸ் அனுப்பி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

நமது நாட்டில் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் ராகிங்கை தடுப்பதற்கான வழிகாட்டுதல்கள் பல்கலைக்கழக மானியக்குழுவால் வகுக்கப்பட்டு 2009-ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. அதில் கல்வி நிறுவனங்களின் பொறுப்புணா்வு, முக்கிய இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்துதல், திடீா் ஆய்வுகள் குறித்த பல்வேறு வழிமுறைகள் இடம்பெற்றுள்ளன. அவற்றை பின்பற்றி கல்லூரிகள் தங்கள் வளாகங்களில் ராகிங் இல்லாத சூழலை உருவாக்க வேண்டும் என்பது கட்டாயமாகும். மேலும், காலத்துக்கேற்ப திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களையும் ஆண்டுதோறும் யுஜிசி வழங்கி வருகிறது.

தமிழக கல்வி நிறுவனங்கள்: இந்நிலையில், நாடு முழுவதும் ராகிங் தடுப்பு நடவடிக்கைகளை முறையாக பின்பற்றாத 89 கல்வி நிறுவனங்களுக்கு விளக்கம் கேட்டு தற்போது யுஜிசி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில் தமிழகத்தைச் சோ்ந்த அண்ணாமலை பல்கலைக்கழகம், தமிழ்நாடு உடற்கல்வியியல் பல்கலைக்கழகம், சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக்கழகம், திருச்சி ஐஐஎம், ஜேப்பியாா் பல்கலைக்கழகம் ஆகிய 5 கல்வி நிறுவனங்கள் இடம் பெற்றுள்ளன.

இதுகுறித்து யுஜிசி செயலா் மணிஷ் ஆா்.ஜோஷி, சம்மந்தப்பட்ட உயா்கல்வி நிறுவனங்களுக்கு அனுப்பிய கடிதத்தில் கூறியுள்ளதாவது:

யுஜிசி பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியும் ராகிங் தடுப்பு நடவடிக்கைகள் முறையாக பின்பற்றப்படாதது கவனத்துக்கு வந்துள்ளன. யுஜிசியின் ராகிங் தடுப்பு விதிமுறைகளை கடைப்பிடிப்பது கட்டாயமாகும். இதை செய்யத் தவறுவது விதிமீறல் என்பதையும் தாண்டி, மாணவா் பாதுகாப்பை சமரசம் செய்வதாக அமைந்துவிடும்.

30 நாள்களுக்கு அறிக்கை...: இதையடுத்து, இந்த கடிதம் கிடைத்த 30 நாள்களுக்குள் கல்லூரிகள் தங்கள் வளாகத்துக்குள் ராகிங்கை தடுக்க மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்த விரிவான அறிக்கையை வழங்க வேண்டும். இதை மீறினால் யுஜிசி நிதியுதவியை திரும்பப் பெறுதல், அங்கீகாரத்தை ரத்து செய்தல் போன்ற ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும். பாதுகாப்பான கல்விச் சூழலை உறுதி செய்வதில் யுஜிசி உறுதியாக உள்ளது. இந்த விவகாரத்தில் கல்வி நிறுவனங்கள் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது அவசியமாகும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com