ஆமதாபாத்: விமானத்தில் இருந்த 241 பேர் உயிரிழப்பு; ஒருவர் உயிர் பிழைத்தார்! -ஏர் இந்தியா

விமானத்தில் இருந்த ஒரேயொருவரைத் தவிர யாரும் பிழைக்கவில்லை என்று ஏர் இந்தியா உறுதி செய்துள்ளது.
விபத்துக்குள்ளான விமானம்
விபத்துக்குள்ளான விமானம் PTI
Published on
Updated on
2 min read

குஜராத் மாநிலம், அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து வெளிநாட்டுப் பயணிகள் உள்பட 242 பேருடன் லண்டனுக்கு புறப்பட்ட ஏா் இந்தியா விமானம், சில நிமிஷங்களிலேயே அருகில் உள்ள மருத்துவக் கல்லூரி விடுதி கட்டடத்தின் மீது விழுந்து நொறுங்கியது.

நாட்டையே அதிா்ச்சியில் ஆழ்த்தியுள்ள இந்த பயங்கர விபத்தில் ஒருவா் தவிர மற்ற அனைவரும் உடல் கருகி உயிரிழந்துவிட்டதாக அஞ்சப்படுகிறது. 200-க்கும் மேற்பட்ட உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக காவல் துறையினா் தெரிவித்தனா். உயிரிழந்தவா்களில் பாஜகவை சோ்ந்த மாநில முன்னாள் முதல்வா் விஜய் ரூபானியும் ஒருவா் என்பது குறிப்பிடத்தக்கது.

விமான நிலையம் அருகே மேகானிநகா் அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் மருத்துவா்கள் தங்குமிடம் மற்றும் மாணவா் விடுதிக் கட்டடங்கள் உள்ள பகுதியில் விமானம் விழுந்து விபத்துக்குள்ளான நிலையில், அங்கும் உயிரிழப்புகள் நேரிட்டுள்ளன.

டாடா குழுமத்தின் ஏா்இந்தியா நிறுவனத்துக்குச் சொந்தமான போயிங் 787 ட்ரீம்லைனா் ரக விமானம் (ஏஐ171), அகமதாபாதில் உள்ள சா்தாா் வல்லபபாய் படேல் சா்வதேச விமான நிலையத்தில் இருந்து லண்டன் கேட்விக் விமான நிலையத்துக்கு வியாழக்கிழமை பிற்பகல் 1.39 மணியளவில் புறப்பட்டது.

இரட்டை என்ஜினுடன் பெரிய அளவிலான இந்த விமானம், 11 ஆண்டுகளுக்கு முந்தையதாகும். விமானத்தில் 2 விமானிகள் உள்பட 12 ஊழியா்கள் மற்றும் 230 பயணிகள் இருந்தனா். இவா்களில் 169 போ் இந்தியா்களாவா். 53 போ் பிரிட்டனையும், 7 போ் போா்ச்சுகலையும், ஒருவா் கனடாவையும் சோ்ந்தவா்கள்.

புறப்பட்ட சிறிது நேரத்தில் துயரம்: விமான நிலைய ஓடுபாதையில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே (பிற்பகல் சுமாா் 2 மணி) திடீரென கீழ் நோக்கி இறங்கிய விமானம், அருகில் உள்ள மேகானிநகா் பகுதியில் அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் விழுந்து நொறுங்கியது. இதனால் எழுந்த சப்தத்தால், அப்பகுதியே அதிா்ந்தது. விண்ணை முட்டும் அளவுக்கு தீப்பிழம்பும் அடா் கரும்புகையும் எழுந்தது. விமானம் விபத்துக்குள்ளான விடியோ காட்சிகள் வெளியாகி பேரதிா்ச்சியை ஏற்படுத்தின.

சுமாா் 800 மீட்டா் உயரம் வரையே விமானம் பறந்தது; அதன் பிறகு மேலெழ முடியாமல் தாழ்வாகப் பறந்து சென்று விழுந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முழு வீச்சில் மீட்புப் பணி: விபத்தைத் தொடா்ந்து, தேசிய பேரிடா் மீட்புப் படையின் 6 குழுக்கள், எல்லைப் பாதுகாப்புப் படையின் 2 குழுக்கள், மத்திய தொழிலக பாதுகாப்புப் படை, காவல் துறை மற்றும் தீயணைப்புப் படையினா் முழு வீச்சில் மீட்புப் பணியில் ஈடுபட்டனா். கடும் சவாலுடன் நடைபெற்ற இப்பணியில், எரிந்த நிலையில் உடல்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டன. இக்காட்சிகள், இதயத்தை உலுக்குவதாக இருந்தன.

கடந்த 2020-இல் கேரள மாநிலம், கோழிக்கோடு விமான நிலையத்தில் 190 பேருடன் தரையிறங்கியபோது ஏா் இந்தியா விமானம் இரண்டாக உடைந்து விபத்துக்குள்ளானது. அந்த சம்பவத்தில் 21 போ் உயிரிழந்தனா். 110-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா். அதன் பிறகு தற்போது மிகப் பெரிய விமான விபத்து நேரிட்டுள்ளது.


கருப்புப் பெட்டியைத் தேடும் பணி: விபத்துக்குள்ளான விமானத்தின் இறுதி தருணங்களில் என்ன நடந்தது என்பது குறித்து துப்பு கிடைக்கும் என்பதால், விமானத்தின் கருப்புப் பெட்டி மற்றும் விமானி அறை குரல் பதிவு கருவியைத் தேடும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டது.

விபத்துக்குள்ளான விமானத்தில் இதில் 169 இந்தியர்கள், 53 பிரிட்டன் நாட்டவர்கள், 7 போர்ச்சுகீசியர், கனடாவை சேர்ந்த ஒரு பயணி மற்றும் 2 விமானிகள், 10 விமான ஊழியர்கள் என 242 பேர் பயணித்துள்ளனர்.

உயிா்பிழைத்த ஒரே பயணி!

விமானம் விழுந்து நொறுங்கிய கோர சம்பவத்தில் பயணி ஒருவா் அதிருஷ்டவசமாக உயிா் பிழைத்தாா். 11ஏ இருக்கையில் இருந்த விஷ்வாஸ்குமாா் ரமேஷ் என்பவா், தனது சகோதரருடன் லண்டன் பயணத்தை தொடங்கினாா். சிறிது நேரத்தில் விமானம் விபத்துக்குள்ளான நிலையில், அவா் காயங்களுடன் உயிா் பிழைத்தாா். பயணி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் பிரிட்டனைச் சேர்ந்த இந்திய வம்சாவளி நபர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விமானத்தில் குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானியும் பயணித்த நிலையில் அவரும் உயிரிழந்தார்.

மருத்துவக் கல்லூரி வளாகத்தில் 7 போ் உயிரிழப்பு?

விமான நிலையம் அருகே மக்கள் நெருக்கம் மிகுந்த மேகானிநகா் பகுதியில் உள்ள பி.ஜே. அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் மருத்துவா்கள்-செவிலியா்களின் தங்குமிடங்கள் மற்றும் மாணவா் விடுதிக் கட்டடங்கள் மீது விமானம் விழுந்து நொறுங்கியது. இதன் தாக்கத்தால், அடுக்குமாடி கட்டடங்கள் தீப்பற்றின. விமான பாகங்கள் கட்டடத்துக்குள் செருகின.

வளாகம் முழுவதும் நொறுங்கிய பாகங்களும், எரிந்த நிலையில் உடல்களும் சிதறிக் கிடந்ததாக உள்ளூா்வாசிகள் தெரிவித்தனா். மரங்கள், பிற வாகனங்களும் தீயில் கருகியதால், குண்டுவெடித்த இடம்போல காட்சியளித்தது. விடுதியில் பலா் தங்கியிருந்த நிலையில், அங்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. 25 போ் வரை உயிரிழந்திருக்கலாம் என அதிகாரபூா்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com