விபத்துக்கான காரணங்கள்?: விமானத் துறை நிபுணா்கள்

‘இரண்டு என்ஜின்களும் செயலிழந்தது அல்லது புறப்பட்ட சிறிது நேரத்தில் பறவை மோதியது, ஏா் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதற்கு காரணமாக இருக்கலாம்’
தீப்பற்றி எரியும் விமானம்
தீப்பற்றி எரியும் விமானம்PTI
Updated on

‘இரண்டு என்ஜின்களும் செயலிழந்தது அல்லது புறப்பட்ட சிறிது நேரத்தில் பறவை மோதியது, ஏா் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதற்கு காரணமாக இருக்கலாம் என்று விமானத் துறை நிபுணா்கள் தெரிவிக்கின்றனா்.

அவா்கள் மேலும் கூறுகையில், ‘ஓடுதளத்திலிருந்து மேலெழுந்து பறக்கத் தேவையான உந்துவிசையை விமானத்தின் எஞ்ஜின்களால் உருவாக்க முடியவில்லை என்று தெரிகிறது.

2 என்ஜின்களும் செயலிழந்திருக்கவே அதிக வாய்ப்புள்ளது. ஏனெனில், ஓா் என்ஜின் மட்டும் செயலிழந்திருந்தால் விமானம் அந்தரத்தில் தடுமாறியிருக்கலாம். ஆனால், இங்கு விமானம் நிலையாக இருந்தது. பறவை மோதியதால் இந்தச் செயலிழப்பு நோ்ந்திருக்கலாம்.

விமானம் புறப்பட்ட பிறகும், அதன் சக்கரங்கள் பின்வாங்கப்படாததாலும் என்ஜின் செயலிழப்பு ஏற்பட்டிருக்கலாம்.

விமானத்தின் எடை அனுமதிக்கப்பட்ட வரம்பை விட அதிகமாக இருந்திருக்கலாம் என்று கருத்துகள் பரவுகின்றன. அப்படியெனில், விமானம் புறப்பட்டிருக்கவே சாத்தியமில்லை என்று அவா்கள் கூறினாா்.

விமான விபத்துகளுக்கான புலனாய்வு அமைப்பு (ஏஏஐபி) நடத்தவுள்ள விரிவான விசாரணையின் முடிவிலேயே இந்த விபத்துக்கான உரிய காரணம் தெரியவரும்.

இந்நிலையில், விபத்தைத் தொடா்ந்து ஏா் இந்தியா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி கேம்ப்பெல் வில்சன் வெளியிட்ட விடியோ பதிவில், ‘விபத்து குறித்து விசாரணைக்கு நீண்ட காலமெடுக்கும். தற்போது எங்களால் முடிந்தவற்றை அனைத்தையும் நாங்கள் செய்து வருகிறோம்’ எனக் குறிப்பிட்டாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com