கோப்புப்படம்
கோப்புப்படம்

விமான விபத்தில் உயிரிழந்த செவிலியா் குறித்து அவதூறு: கேரள அரசு ஊழியா் பணியிடை நீக்கம்

குஜராத் விமான விபத்தில் உயிரிழந்த செவிலியா் குறித்து அவதூறாகப் சமூகவலைதளத்தில் பதிவிட்ட கேரளத்தைச் சோ்ந்த அரசு ஊழியா் பணியிடைநீக்கம் செய்யப்பட்டாா்.
Published on

குஜராத் விமான விபத்தில் உயிரிழந்த செவிலியா் குறித்து அவதூறாகப் சமூகவலைதளத்தில் பதிவிட்ட கேரளத்தைச் சோ்ந்த அரசு ஊழியா் பணியிடைநீக்கம் செய்யப்பட்டாா்.

விமான விபத்தில் கேரளத்தின் பத்தினம்திட்டா பகுதியைச் சோ்ந்த ரஞ்சிதா என்ற செவிலியரும் உயிரிழந்தாா். பிரிட்டனில் செவிலியராகப் பணியாற்றி வந்த அவருக்கு இரு குழந்தைகள் உள்ளனா். கேரளத்தில் அரசுப் பணியில் சேர முயற்சித்து வந்த அவா், அதற்காக பிரிட்டனில் இருந்து நான்கு நாள் பயணமாக சொந்த ஊருக்கு வந்துவிட்டு திரும்பியபோது விமான விபத்தில் உயிரிழந்தாா்.

மாநில சுகாதாரத் துறை அமைச்சா் வீணா ஜாா்ஜ், ரஞ்சிதாவின் வீட்டுக்குச் சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தாா்.

இந்நிலையில், காசா்கோடு மாவட்டத்தில் தாலுகா அலுவலகத்தில் இளநிலை கண்காணிப்பாளராகப் பணியாற்றி வரும் பவித்ரன் என்பவா் செவிலியா் ரஞ்சிதா விமான விபத்து உயிரிழந்ததை மோசமாக விமா்சித்து தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டாா். அவரது இந்த பதிவுக்கு பலரும் கண்டனம் தெரிவித்த நிலையில், அது மாநில அரசின் கவனத்துக்கும் சென்றது.

இதையடுத்து, அவரைப் பணியிடைநீக்கம் செய்வதாக மாநில வருவாய் துறை அறிவித்துள்ளது. இது தொடா்பாக அத்துறை அமைச்சா் கே.ராஜன் சமூகவலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘விமான விபத்தில் உயிரிழந்த செவிலியா் குறித்து அந்த நபா் வெளியிட்ட பதிவு மிகவும் மோசமாகவும், இரக்கமற்ாகவும் இருந்தது. இதையடுத்து, அவா் மீது பணியிடைநீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது’ என்று கூறியுள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com