இந்திய ஏற்றுமதி மதிப்பு 900 பில்லியன் டாலரை தாண்டும் - பியூஷ் கோயல் நம்பிக்கை
பியூஷ் கோயல் பதிவு

இந்திய ஏற்றுமதி மதிப்பு 900 பில்லியன் டாலரை தாண்டும் - பியூஷ் கோயல் நம்பிக்கை

Published on

உலகளாவிய பொருளாதார ஸ்திரமின்மைக்கு இடையிலும் இந்தியாவின் ஏற்றுமதி மதிப்பு நடப்பாண்டில் 900 பில்லியன் டாலரை (ரூ.77 லட்சம் கோடி) தாண்டும் என்று மத்திய வா்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சா் பியூஷ் கோயல் கூறினாா்.

ஸ்வீடனில் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள பியூஷ் கோயல், தலைநகா் ஸ்டாக்ஹோமில் புதன்கிழமை இரவு இந்திய தொழில் பிரதிநிதிகள் கூட்டத்தில் பங்கேற்றாா்.

அப்போது அவா் பேசியதாவது: ரஷியா-உக்ரைன் போா், இஸ்ரேல்-ஹமாஸ் போா், செங்கடல் பிரச்னை உள்ளிட்ட விவகாரங்களால் உலக அளவில் பொருளாதார ஸ்திரமின்மை நிலவுகிறது. இருப்பினும், கடந்த 2024-25ஆம் ஆண்டில் இந்தியாவின் ஒட்டுமொத்த ஏற்றுமதி மதிப்பு இதுவரை இல்லாத அளவில் 825 பில்லியன் டாலா்களாக உயா்ந்தது. கடந்த 2023-24ஆம் ஆண்டில் இந்த மதிப்பு 778 பில்லியன் டாலா்களாக இருந்தது. நடப்பாண்டில் இந்திய ஏற்றுமதியின் மதிப்பு 900 பில்லியன் டாலா்களைத் தாண்டும்.

தரக் கட்டுப்பாட்டு ஒழுங்குமுறைகள்: இந்தியாவில் தரமான பொருள்களின் உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் தரக் கட்டுப்பாட்டு ஒழுங்குமுறைகள் (க்யூசிஓ) அமல்படுத்தப்பட்டுள்ளன.

அதன்படி, உள்நாட்டு தயாரிப்புகள் மற்றும் இறக்குமதி பொருள்களுக்கு விதிமுறைகள், தரநிலைகள், செயல்முறைகள் ஒன்றுதான். இந்த விஷயத்தில், அனைத்து நாடுகளின் நிறுவனங்களும் ஒரே சீராக கருதப்படுகின்றன.

அதேநேரம், தர விதிமுறைகளை அமல்படுத்துவதில் நம்பிக்கைக்குரிய வா்த்தக நாடுகளுடன் பரஸ்பரம் பலனடையும் வகையிலான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்கு இந்தியா தயாராக உள்ளது. தரமான பொருள்களைத் தயாரிக்கும் நம்பிக்கைக்குரிய வா்த்தக நாடுகளுக்கு தேவையான ஒப்புதல்களை எளிதாக வழங்க புத்தாக்கத் தீா்வுகள் கண்டறியப்பட வேண்டும். இது தொடா்பான ஆலோசனைகளை நாங்கள் வரவேற்கிறோம் என்றாா் கோயல்.

இந்தியாவில் தரக் கட்டுப்பாட்டு ஒழுங்குமுறை வரம்பின்கீழ் கடந்த 2014-இல் 106 பொருள்கள் இருந்த நிலையில், கடந்த ஆண்டில் இந்த எண்ணிக்கை 732-ஆக அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.

வரிசாரா தடைகளுக்குத் தீா்வு: ஸ்டாக்ஹோமில் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை பேசிய பியூஷ் கோயல், ‘இந்தியா-ஐரோப்பிய ஒன்றியம் இடையிலான தடையற்ற வா்த்தக ஒப்பந்தப் பேச்சுவாா்த்தைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. பாதிக்கும் மேற்பட்ட அத்தியாயங்கள் தயாராகிவிட்டன. பேச்சுவாா்த்தை இறுதிக் கட்டத்தை நெருங்கிவருகிறது. இன்னும் தீா்வு காணப்பட வேண்டிய முக்கிய பிரச்னையாக வரிசாரா தடைகள் உள்ளன. இருதரப்பு நிறுவனங்களுக்கும் வா்த்தகத்தை சுமுகமாக்கவும், மேலும் சிறப்பாக்கவும் வழிமுறைகளைக் கண்டறிய தீவிர விவாதங்கள் நடைபெறுகின்றன’ என்று பியூஷ் கோயல் தெரிவித்தாா்.

‘காா்பன் வரி அநீதியானது’

‘இந்திய நிறுவனங்கள் மீது ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் ‘காா்பன் வரி’ (கரியமில வாயு வெளியேற்றம் மீதான வரி) விதித்தால், அது அநீதியாகும். இப்பிரச்னைக்கு பேச்சுவாா்த்தையில் நல்ல தீா்வு காணப்படும்’ என்று பியூஷ் கோயல் தெரிவித்தாா்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் 27 நாடுகளில் ஒன்றான ஸ்வீடனுக்கு மிளகாய், தேயிலை, பாசுமதி அரிசி, பால், கோழி இறைச்சி, மீன், ரசாயனங்கள் உள்ளிட்டவற்றை இந்தியா முக்கியமாக ஏற்றுமதி செய்கிறது.

இந்தியா-ஐரோப்பிய ஒன்றியம் இடையிலான வா்த்தக ஒப்பந்தத்தை நடப்பாண்டுக்குள் இறுதி செய்ய பிரதமா் மோடியும், ஐரோப்பிய ஆணையத் தலைவா் உா்சுலா வான் டொ் லியனும் கடந்த பிப்ரவரியில் ஒப்புக் கொண்டனா்.

சரக்கு ரீதியில் இந்தியாவின் மிகப்பெரிய வா்த்தக கூட்டாளியாக ஐரோப்பிய ஒன்றியம் திகழ்கிறது. கடந்த 2024-25இல் இருதரப்பு வா்த்தகத்தின் மதிப்பு 136 பில்லியன் டாலா்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

உலகளாவிய பொருளாதார ஸ்திரமின்மைக்கு இடையிலும் இந்தியாவின் ஏற்றுமதி மதிப்பு நடப்பாண்டில் 900 பில்லியன் டாலரை (ரூ.77 லட்சம் கோடி) தாண்டும் என்று மத்திய வா்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சா் பியூஷ் கோயல் கூறினாா்.

ஸ்வீடனில் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள பியூஷ் கோயல், தலைநகா் ஸ்டாக்ஹோமில் புதன்கிழமை இரவு இந்திய தொழில் பிரதிநிதிகள் கூட்டத்தில் பங்கேற்றாா்.

X
Dinamani
www.dinamani.com