
சில சமயங்களில் அமைதியாக இருக்க வேண்டும் என்று பாஜகவினருக்கு மத்திய அமைச்சர் அமித் ஷா அறிவுரை வழங்கினார்.
பாஜக அமைச்சர் விஜய் ஷாவின் பேச்சு சர்ச்சையான நிலையில், கட்சியினர் பேசும்போது கவனமுடன் பேச வேண்டும் என்று மத்திய அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார்.
மத்தியப் பிரதேச மாநிலம், நர்மதாபுரம் மாவட்டத்தில் பாஜக பயிற்சி முகாமில் மத்திய அமைச்சர்கள் அமித் ஷாவும் பூபேந்திர யாதவும் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் அமித் ஷா பேசுகையில், தவறுகள் நடக்கின்றன; ஆனால், மீண்டும் அவ்வாறான தவறுகள் ஏற்படக்கூடாது. ஒருவர் எவ்வளவுதான் மூத்தவராகவோ அனுபவம் வாய்ந்தவராகவோ இருந்தாலும், அவர்கள் எப்போதும் ஒரு மாணவராகவும் இருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
அமித் ஷாவின் கருத்தை விளக்கிய மாநில அமைச்சர் கரண் வர்மா, தவறுகள் யாருக்கு வேண்டுமானாலும் நடக்கலாம். ஆனால், மீண்டும் மீண்டும் செய்வது ஏற்றுக்கொள்ள முடியாதது என்று தெளிவுபடுத்தினார்.
இவர்களைத் தொடர்ந்து, மத்திய அமைச்சர் பூபேந்திர யாதவ் பேசுகையில், அரசியலில் பேச்சு கட்டுப்பாடு என்பது மிக முக்கியமான நல்லொழுக்கமாகும். அரசியலில் ஒவ்வொரு வார்த்தையும் பெரிதாக ஆக்கப்படும்.
அரசியல் தலைவர்கள், பொதுவெளியில் பேசும் முன்பாக, நன்றாக சிந்தித்துவிட்டு பேச வேண்டும். அவர்களின் பதவியின் கண்ணியத்தை பேணும்வகையில் பேச வேண்டும்.
அரசியலில் 90 சதவிகித எதிர்மறை நிகழ்வானது, எதிர்வினையாற்றுவதில் இருந்துதான் வருகிறது. ஆகையால், சில நேரங்களில் அமைதியாக இருப்பதே புத்திசாலித்தனம்.
அதிகப்படியான எதிர்வினை, பேச்சு கட்டுப்பாடு இல்லாமல் இருப்பது, ஒரு கட்சியின் நற்பெயரை கடுமையாக சேதப்படுத்தும் என்று தெரிவித்தார்.
பாகிஸ்தான் மீதான ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் நடவடிக்கையானது ராணுவத்தைச் சேர்ந்த கர்னல் சோஃபியா குரேஷி, விமானப்படையைச் சேர்ந்த விங் கமாண்டர் வியோமிகா சிங் ஆகிய பெண் அதிகாரிகள் தலைமையில் நடைபெற்றதற்கு பலரும் பாராட்டு தெரிவித்த நிலையில், கா்னல் சோஃபியா குரேஷி குறித்து மத்தியப் பிரதேச பாஜக அமைச்சா் குன்வர் விஜய் ஷா பேசியது சர்ச்சையாகியது.
'பஹல்காமில் நமது சகோதரிகளின் குங்குமத்தை அழித்தவா்களை அவா்களின்(பயங்கரவாதிகளின்) சகோதரியை வைத்தே பிரதமா் மோடி ஒழித்துவிட்டார்’ என்று விஜய் ஷா கூறியிருந்தார்.
கா்னல் சோஃபியா குரேஷி இஸ்லாமிய மதத்தைச் சோ்ந்தவா் என்பதால் அவரை பயங்கரவாதிகளின் சகோதரி எனச் சித்திரிக்கும் வகையில் அமைச்சா் பேசியதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன.
இதையும் படிக்க: சொல்லப் போனால்... சொந்த மண்ணிலேயே அன்னியரைப் போல...
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.