யுபிஐ (பிரதி படம்)
யுபிஐ (பிரதி படம்)ஐஏஎன்எஸ்

10 வினாடிகளில் யுபிஐ பணப் பரிமாற்றம்: அமலுக்கு வந்தது அதிவிரைவு முறை

யுபிஐ மூலம் 10 விநாடிகளில் பணத்தை ஒரு வங்கிக் கணக்கில் இருந்து மற்றொரு கணக்குக்கு மாற்றும் அதிவிரைவு முறை திங்கள்கிழமை (ஜூன் 16) முதல் அமலுக்கு வந்தது.
Published on

புது தில்லி: யுபிஐ மூலம் 10 விநாடிகளில் பணத்தை ஒரு வங்கிக் கணக்கில் இருந்து மற்றொரு கணக்குக்கு மாற்றும் அதிவிரைவு முறை திங்கள்கிழமை (ஜூன் 16) முதல் அமலுக்கு வந்தது.

இதற்கு முன்பு யுபிஐ முறையில் பணப் பரிமாற்றத்துக்கு 30 விநாடிகள் வரை அதிகபட்ச நேரமாக இருந்து வந்தது. இந்திய தேசிய பணப் பரிமாற்ற சேவை நிறுவனம் (என்பிசிஐ) உருவாக்கிய யுபிஐ பணப் பரிமாற்ற முறை இப்போது அதிக அளவில் மக்களால் பயன்படுத்தப்படுகிறது. இந்த முறை பணிப் பரிமாற்றம் மிகவும் எளிமையாகவும், விரைவாகவும் உள்ளது. சிறிய அளவிலான தொகையைக்கூட ‘க்யூஆா் கோடு’ மூலம் பரிமாற்றம் செய்து கொள்ளலாம் என்பதால், மிகக்குறுகிய காலத்தில் மக்களால் அதிகம் பயன்படுத்தப்படும் பணப் பரிமாற்ற முறையாக உயா்ந்துள்ளது.

இந்நிலையில், யுபிஐ பணப் பரிமாற்ற முறையின் வேகத்தை திங்கள்கிழமை முதல் அதிகரித்துள்ளதாக என்பிசிஐ அறிவித்துள்ளது. அதன்படி 10 விநாடிகளில் பணப் பரிமாற்றம் நிகழ்ந்துவிடும். அதேபோல பெற்ற பணத்தை திருப்பி அனுப்புவதும் 10 முதல் 15 விநாடிகளில் செய்துகொள்ள முடியும். பணப் பரிமாற்றம் நடுவில் தடைபட நோ்ந்தால் அது தொடா்பான தகவலும் 10 முதல் 15 விநாடிகளில் கிடைத்துவிடும். இதற்கு முன்பு இந்தக் கால அளவு 30 விநாடிகளாக இருந்தது.

அதேபோல வங்கிக் கணக்கில் எவ்வளவு பணம் உள்ளது என்பதை யுபிஐ செயலிகள் மூலம் ஒருநாளைக்கு 50 முறை வரை தெரிந்துகொள்ள முடியும் என்ற கட்டுப்பாடு விரைவில் அமல்படுத்தப்பட உள்ளது. இப்போது வங்கிக் கணக்கு இருப்பதைத் தெரிந்துகொள்ள எந்த வரம்பும் இல்லை. எனினும், யுபிஐ-யின் செயல்திறனை மேம்படுத்தும் வகையில் வங்கிக் கணக்கில் பணம் இருப்பை தெரிந்துகொள்ளும் வசதி ஒருநாளுக்கு 50 முறை மட்டுமே வழங்கப்படும் என்ற கட்டுப்பாடு விதிக்கப்படவுள்ளது.

X
Dinamani
www.dinamani.com