ரஷியாவின் அணு ஆயுதம்
ரஷியாவின் அணு ஆயுதம்

அணு ஆயுத இருப்பை அதிகப்படுத்திய இந்தியா - பாகிஸ்தான்: ஆய்வில் தகவல்

இந்தியா, பாகிஸ்தான் உள்பட அணு ஆயுத சக்தி கொண்ட 9 நாடுகளும் கடந்த 2024-இல் தங்களின் அணு ஆயுத இருப்பை கணிசமாக அதிகப்படுத்தின.
Published on

இந்தியா, பாகிஸ்தான் உள்பட அணு ஆயுத சக்தி கொண்ட 9 நாடுகளும் கடந்த 2024-இல் தங்களின் அணு ஆயுத இருப்பை கணிசமாக அதிகப்படுத்தின. அணு நவீனமய திட்டங்களைத் தீவிரப்படுத்துதல், கையிருப்பில் உள்ள அணு ஆயுதங்களை மேம்படுத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை இந்த நாடுகள் மேற்கொண்டதாக பிரபல ஸ்டாக்ஹோம் சா்வதேச அமைதிக்கான ஆராய்ச்சி நிறுவன (எஸ்ஐபிஆா்ஐ) ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செறிவூட்டப்பட்ட யுரேனியம் இருப்பை 60 சதவீதத்துக்கும் மேல் அதிகரித்துள்ள ஈரான், அணு ஆயுதம் தொடா்பான ஒப்பந்தத்தில் கையொப்பமிட மறுத்ததைத் தொடா்ந்து, அணு ஆயுதம் தயாரித்துவிட முடியும் என்ற அச்சத்தில் அந் நாட்டின் மீது இஸ்ரேல் தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளது. ஈரானும் பதிலடித் தாக்குதல் நடத்தி வருகிறது.

‘ஒப்பந்தத்தில் ஈரான் விரைந்து கையொப்பமிட வேண்டும்; இல்லையெனில், தாக்குதல் தீவிரமடையும்’ என அமெரிக்காவும் எச்சரித்துள்ளது. இதனால், அங்கு போா்ப் பதற்றம் அதிகரித்துள்ளது.

இந்தச் சூழலில், அணு ஆயுத சக்திமிக்க 9 நாடுகளும் தங்களின் ஆணு ஆயுத இருப்பை விரிவுபடுத்தியிருக்கும் தகவல் வெளியாகியுள்ளது.

‘எஸ்ஐபிஆா்ஐ 2025-ஆம் ஆண்டு புத்தகம்’ என்ற தலைப்பிலான தனது ஆய்வறிக்கையை எஸ்ஐபிஆா்ஐ திங்கள்கிழமை வெளியிட்டது. அதில் கூறியிருப்பதாவது:

அமெரிக்கா, ரஷியா, பிரிட்டன், பிரான்ஸ், சீனா, இந்தியா, பாகிஸ்தான், வட கொரியா, இஸ்ரேல் உள்ளிட்ட அணு ஆயுத சக்திகொண்ட 9 நாடுகளும், 2024-இல் தங்களின் அணு ஆயுத இருப்பை அதிகப்படுத்தின. அணு ஆயுதங்கள் நவீனமயம், புதிய ரக அணு ஆயுதங்கள் அறிமுகம் உள்ளிட்ட ஆயுத மேம்பாட்டு நடவடிக்கைகளை இந்த நாடுகள் மேற்கொண்டன.

குறிப்பாக, இந்தியா தனது அணு ஆயுத இருப்பை கடந்த ஆண்டு மீண்டும் கணிசமாக அதிகப்படுத்தியது. நவீன ரக அணுசக்தி விநியோக அமைப்புகளையும் தொடா்ந்து மேம்படுத்தியதாக நம்பப்படுகிறது.

அதுபோல பாகிஸ்தானும் கடந்த ஆண்டில் நவீன அணு ஆயுத மேம்பாட்டை தொடா்ந்தது. அடுத்த 10 ஆண்டுகளில் பாகிஸ்தான் தனது அணு ஆயுத இருப்பை அதிகப்படுத்தவும் வாய்ப்புள்ளது.

அணு ஆயுத திறன் கொண்ட இந்தியா, பாகிஸ்தான் இடையே அண்மையில் சண்டை மூண்டது. இந்தச் சூழலில் இரு அண்டை நாடுகளும், அணு ஆயுதங்களை அதிகரித்து வருவது, உலக நாடுகளை கவலையடையச் செய்துள்ளது.

மேலும், ஆயுதக் கட்டுப்பாட்டு ஆட்சி முறை கடுமையாகப் பலவீனமடைந்துள்ள நேரத்தில், நாடுகளிடையே புதிய அணு ஆயுதப் போட்டி உருவாகி வருவது ஆபத்தானது.

கடந்த ஜனவரி நிலவரப்படி, உலக அளவில் இருப்பில் உள்ள அணு ஏவுகணைகளின் எண்ணிக்கை 12,241 என மதிப்பிடப்பட்டுள்ளது. இவற்றில், 9,614 ஏவுகணைகள் பயன்படுத்தக்கூடிய வகையில் ராணுவ கையிருப்பில் உள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா - பாகிஸ்தான்...

1974-இல் முதல் முறையாகவும் 1998-இல் இரண்டாவது முறையாகவும் இந்தியா அணுஆயுத சோதனையை நடத்தியது. அடுத்த சில மாதங்களில் பாகிஸ்தானும் அணுஆயுத சோதனையை நடத்தியது. இந்த இரு நாடுகளும் அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் கையொப்பமிடமில்லை.

வடகொரியா

1995-இல் அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் சோ்ந்த வடகொரியா, 2003-இல் விலகியது. 2006 முதல் பல முறைய அணு ஆயுத சோதனையை நடத்தி உள்ளது.

இஸ்ரேல்

இஸ்ரேலிடம் அணு ஆயுதம் இருப்பதாக நம்பப்பட்டாலும், அந்நாடு இதுவரையில் ஒப்புக் கொள்ளவில்லை. அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் அந்த நாடு கையொப்பமிடவில்லை.

நாடுகள் - அணு ஆயுதங்கள்

ரஷியா - 4309

அமெரிக்கா - 3,700

சீனா - 600

பிரான்ஸ் - 290

பிரிட்டன் - 225

இந்தியா - 180

பாகிஸ்தான் - 170

இஸ்ரேல் - 90

வட கொரியா - 50

X
Dinamani
www.dinamani.com