மத்தியஸ்தம் செய்ததாகப் பேச வேண்டாம்! - டிரம்ப்பிடம் மோடி கறார்

பாகிஸ்தான் போர் நிறுத்தத்தில் அமெரிக்காவுக்கு எந்தப் பங்கும் இல்லை என அதிபர் டிரம்ப்பிடம் பிரதமர் மோடி பேசியது பற்றி...
US President Trump with Prime Minister Modi.
பிரதமர் மோடியுடன் அமெரிக்க அதிபர் டிரம்ப். படம் | ens
Published on
Updated on
1 min read

இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போர் நிறுத்தத்தில் அமெரிக்கா எந்தப் பங்கும் வகிக்கவில்லை என அமெரிக்க அதிபர் டிரம்ப்பிடம் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி வாயிலாகப் பேசியதாக மத்திய வெளியுறவுத் துறை செயலர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்திருக்கிறார்.

இஸ்ரேல் - ஈரான் மோதல் அதிகரித்து வரும் நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப், கனடாவிலிருந்து நேற்று(ஜூன் 17) அமெரிக்காவிற்கு அவசர அவசரமாக புறப்பட்டுச் சென்றார். இதனால், ஜி7 மாநாட்டில் பிரதமர் மோடி மற்றும் டிரம்ப்பின் சந்திப்பு நடைபெறவில்லை.

இந்த நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் பிரதமர் நரேந்திர மோடி 35 நிமிட தொலைபேசியில் பேசியுள்ளார். இந்த உரையாடலில், இந்தியாவின் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்ந்து நடைபெற்று வருவதாக மத்திய வெளியுறவுத் துறை செயலர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்துள்ளார்.

இந்த உரையாடல் குறித்து வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரி செய்தியாளர்களுக்கு விளக்கமளித்தார்.

அப்போது அவர் பேசுகையில், “அதிபர் டிரம்ப்பும் பிரதமர் மோடியும் இன்று சுமார் 35 நிமிடங்கள் பேசினர். உரையாடலின் போது, ​​பாகிஸ்தானின் தாக்குதலுக்கு, இந்தியா ஏவுகணைகள் மூலம் பதிலடி கொடுக்கும் என்றும், ஆபரேஷன் சிந்தூர் இன்னும் நடந்து கொண்டிருக்கிறது என்றும் அவர் கூறினார்.

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது வர்த்தக ரீதியான எந்த மத்தியஸ்தமும் நடைபெறவில்லை. பாகிஸ்தான் கேட்டுக் கொண்டதாலே மோதல் கைவிடப்பட்டது. இந்தப் போர் நிறுத்தத்தில் அமெரிக்காவுக்கு எந்தப் பங்கும் இல்லை என்று பிரதமர் மோடி திட்டவட்டமாக கூறியதாகத்” தெரிவித்துள்ளார்.

முன்னதாக, கடந்த மே 7 ஆம் தேதி பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய ஆயுதப் படைகள் நடத்திய ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலில் பயங்கரவாதிகள், ராணுவ அதிகாரிகள் உள்பட 140-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து போர் நிறுத்தம் செய்ய இரு நாடுகளும் ஒப்புக்கொண்டனர். இந்த ஒப்பந்தத்துக்கு நான் தான் காரணம் என அமெரிக்க அதிபர் டிரம்ப் பல்வேறு இடங்களில் தெரிவித்து வந்தார். இதற்கு முடிவுகட்டும் விதமாக பிரதமர் மோடி தற்போது அதிபர் டிரம்ப்பிடம் இதுபற்றி விவாதித்துள்ளார்.

வெள்ளை மாளிகையில் இன்று (ஜூன் 18) நடைபெறும் மதிய உணவு விருந்து நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் டிரம்ப் பாகிஸ்தானின் ராணுவத் தளபதி அசிம் முனீரைச் சந்திக்கவுள்ளார். இந்தச் சந்திப்பிற்கு முன்னர் இந்த உரையாடல் நிகழ்ந்துள்ளது.

இந்த உரையாடலின் போது, ​​கனடாவிலிருந்து திரும்பியவுடன் பிரதமர் மோடியை அமெரிக்காவிற்கு வர முடியுமா? என்று அதிபர் டிரம்ப் கேட்டதாகவும், பிரதமர் மோடி அந்த அழைப்பை நிராகரித்துவிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதைத் தொடர்ந்து வரவிருக்கும் குவாட் உச்சி மாநாட்டிற்காக இந்தியாவுக்கு வருமாறு டிரம்பை பிரதமர் மோடி அழைத்தார். பங்கேற்பதை அவர் உறுதிப்படுத்தவில்லை என்றாலும், டிரம்ப் அழைப்பை ஏற்றுக்கொண்டார் என்றே கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Open in App
Dinamani
www.dinamani.com