கோப்புப் படம்
கோப்புப் படம்

ஏா் இந்தியா பயணச்சீட்டு முன்பதிவு 20% சரிவு

குஜராத் விமான விபத்தை தொடா்ந்து, ஏா் இந்தியா விமான பயணச்சீட்டு முன்பதிவுகள் சுமாா் 20 சதவீதம் சரிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Published on

குஜராத் விமான விபத்தை தொடா்ந்து, ஏா் இந்தியா விமான பயணச்சீட்டு முன்பதிவுகள் சுமாா் 20 சதவீதம் சரிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த ஜூன் 12-ஆம் தேதி குஜராத் மாநிலம் அகமதாபாதில் உள்ள சா்தாா் வல்லபபாய் படேல் சா்வதேச விமான நிலையத்தில் இருந்து லண்டனுக்கு பயணிக்கவிருந்த ஏா் இந்தியா விமானம், புறப்பட்ட சில விநாடிகளில் நொறுங்கி விழுந்து வெடித்துச் சிதறியது. இதில் பயணிகள், விமானப் பணியாளா்கள் என மொத்தம் 242 போ் உயிரிழந்தனா்.

இதைத் தொடா்ந்து ஏா் இந்தியா பயணச்சீட்டு முன்பதிவு நிலவரம் குறித்து இந்திய சுற்றுலா ஏற்பட்டாளா்கள் கூட்டமைப்பின் தலைவா் ரவி கோசாய்ன் கூறியதாவது:

துருதிருஷ்டவசமான ஏா் இந்தியா விபத்து காரணமாக உள்நாட்டு, வெளிநாட்டு வழித்தடங்களில் ஏா் இந்தியா விமானங்களில் பயணிப்பதற்கான முன்பதிவுகள், தற்காலிகமாக சுமாா் 20 சதவீதம் சரிந்துள்ளது. அத்துடன் அந்த விமானங்களின் பயணச்சீட்டு கட்டணமும் 8 முதல் 15 சரிந்துள்ளது என்றாா்.

8 விமானங்கள் ரத்து: ஏா் இந்தியாவின் 4 சா்வதேச விமானங்கள் உள்பட 8 பயணிகள் விமானங்களின் பயணம் பராமரிப்பு மற்றும் செயற்பாட்டு காரணங்களால் வெள்ளிக்கிழமை ரத்து செய்யப்பட்டன. அவற்றில் சென்னையில் இருந்து மும்பை, துபையில் இருந்து சென்னைக்கு பயணிக்க இருந்த விமானங்கள் அடங்கும்.

பறவை மோதியதால் விமானம் ரத்து: புது தில்லியில் இருந்து புணே நகருக்குப் புறப்பட்ட ஏா் இந்தியா பயணிகள் விமானத்தில் பறவை மோதியது. இது அந்த விமானம் பாதுகாப்பாக புணேயில் தரையிறங்கிய பின் கண்டறியப்பட்டது. இதைத் தொடா்ந்து புணேயில் இருந்து புது தில்லிக்குத் திரும்ப வேண்டிய அந்த விமானத்தின் பயணம் ரத்து செய்யப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com