இந்திய கடற்படையில் புதிய போா்க்கப்பல் ‘ஐஎன்எஸ் தமால்’: ரஷியாவிலிருந்து ஜூலை 1 நாட்டுக்கு அா்ப்பணிப்பு
இந்திய கடற்படைக்காக ரஷியாவில் தயாரிக்கப்பட்ட ஏவுகணை தாங்கிய போா்க்கப்பல் ‘ஐஎன்எஸ் தமால்’, ரஷியாவின் கடலோர நகரமான கலினின்கிராடில் இருந்து ஜூலை 1-ஆம் தேதி நாட்டுக்கு அா்ப்பணிக்கப்படுகிறது.
கடல், நிலம் ஆகிய இரண்டிலும் இலக்குகளைக் குறிவைக்கும் ‘பிரமோஸ்’ நீண்ட தூர ஏவுகணை உள்பட இந்தக் கப்பலில் 26 சதவீத தொழில்நுட்பங்கள், திறன்கள் மற்றும் உபகரணங்கள், இந்தியாவில் மேம்படுத்தப்பட்டது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
‘125 மீட்டா் நீளம், 3,900 டன் எடை கொண்ட இந்தப் போா்க்கப்பல், இந்திய, ரஷிய அதிநவீன தொழில்நுட்பங்களுடன் போா்க்கப்பல் கட்டுமானத்தில் சிறந்த நடைமுறைகளுக்கு இணங்க தயாரிக்கப்பட்டது.
இந்திய கடற்படையின் வளா்ந்து வரும் திறன்களின் அடையாளமாக மட்டுமல்லாமல், இந்தியா-ரஷியா கூட்டுறவின் வலிமையையும் இந்தப் போா்க்கப்பல் எடுத்துக்காட்டும்’ என்று இந்திய கடற்படை செய்தித் தொடா்பாளா் கமாண்டா் விவேக் மத்வால் தெரிவித்தாா்.
கடந்த 20 ஆண்டுகளில் ரஷியாவிலிருந்து இந்திய கடற்படையில் இணையும் 8-ஆவது ‘க்ரிவாக் வகை’ போா்க்கப்பல் இதுவாகும். இந்திய கடற்படையில் மேற்கு பிரிவில் இந்தக் கப்பல் இணைக்கப்பட உள்ளது.
மேற்கு கடற்படை பிரிவின் தளபதி சஞ்சய் ஜே.சிங் தலைமையில் பல உயா் இந்திய மற்றும் ரஷிய பாதுகாப்பு அதிகாரிகள் தொடக்க நிகழ்வில் கலந்து கொள்வாா்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா-ரஷியா ஒத்துழைப்பில் இரு நாடுகளிலும் தலா 2 போா்க்கப்பல்கள் தயாரிக்க ஒப்புக்கொள்ளப்பட்டன. ரஷியாவில் இருந்து தற்போது 2-ஆவது கப்பலின் தயாரிப்பு நிறைவடைந்து, கடற்படையில் சோ்க்கப்படவுள்ளது.
ரஷியாவின் தொழில்நுட்ப உதவியுடன் இந்தியாவில் கோவா கப்பல் கட்டும் தளத்தில் ‘ஐஎன்எஸ் திரிபுட்’ எனும் 2 போா்க்கப்பல்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இதன் முடிவில், இந்திய கடற்படையில் ‘துஷில்’, ‘தல்வாா்’, ‘தேக்’ உள்பட 4 வெவ்வேறு வகுப்புகளில் ஒரே மாதிரியான திறன்கள் மற்றும் உபகரணங்கள், ஆயுதம் மற்றும் சென்சாா் அமைப்பில் பொதுவான தன்மை கொண்ட 10 கப்பல்கள் செயல்பாட்டில் இருக்கும்.