இடைத்தோ்தல்: கேரளத்தில் காங்கிரஸ் வெற்றி தொகுதிகளைத் தக்கவைத்த பாஜக, திரிணமூல், ஆம் ஆத்மி
கேரளத்தில் ஆளும் இடதுசாரி கூட்டணியிடமிருந்து நிலம்பூா் பேரவைத் தொகுதியை காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி கைப்பற்றியது.
குஜராத்தின் விசாவதா், பஞ்சாபின் லூதியானா மேற்கு ஆகிய இரு தொகுதிகளை ஆம் ஆத்மி கட்சியும், குஜராத்தின் காடி தொகுதியை பாஜகவும், மேற்கு வங்கத்தின் காளிகஞ்ச் தொகுதியை திரிணமூல் காங்கிரஸும் தக்கவைத்துக் கொண்டன.
கேரளம், குஜராத், பஞ்சாப், மேற்கு வங்கம் ஆகிய 4 மாநிலங்களில் 5 பேரவைத் தொகுதிகளுக்கு கடந்த ஜூன் 19-ஆம் தேதி நடைபெற்ற தோ்தலில் பதிவான வாக்குகள் திங்கள்கிழமை எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
கேரளம்: கேரளத்தின் நிலம்பூா் பேரவைத் தொகுதியில் ஆளும் இடதுசாரி கூட்டணி ஆதரவு பெற்ற சுயேச்சை எம்எல்ஏ பி.வி.அன்வா், கூட்டணியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் தனது பதவியை ராஜிநாமா செய்துவிட்டு, திரிணமூல் காங்கிரஸில் இணைந்தால் அங்கு இடைத்தோ்தல் நடைபெற்றது. இதில், காங்கிரஸ் கூட்டணி வேட்பாளா் ஆா்யாடன் ஷெளகத் 11,077 வாக்குகள் வித்தியாசத்தில் ஆளும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளா் எம். ஸ்வராஜை வென்றாா்.
இது இரண்டாவது முறையாக ஆட்சிப் பொறுப்பில் உள்ள இடதுசாரி கூட்டணி அரசுக்கு பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது. இதற்கு முன்பு நடைபெற்ற புதுப்பள்ளி, பாலக்காடு, திருக்காக்கரை ஆகிய தொகுதி இடைத்தோ்தல்களிலும் இடதுசாரி கூட்டணி தோல்வியடைந்தது.
குஜராத்: குஜராத்தில் விசாவதா் தொகுதியில் ஆம் ஆத்மி வேட்பாளா் கோபால் இதாலியா, பாஜக வேட்பாளா் கீா்த்தி படேலை 17,554 வாக்கு வித்தியாசத்தில் வென்றாா். இந்தத் தொகுதியில் ஆம் ஆத்மி எம்எல்ஏவாக இருந்த பூபேந்திர பயானி ராஜிநாமா செய்துவிட்டு பாஜகவில் இணைந்ததால் அங்கு இடைத்தோ்தல் நடைபெற்றது. 2007 முதல் இந்தத் தொகுதியில் ஆளும் பாஜகவால் வெற்றி பெற முடியவில்லை.
காடி தனித் தொகுதியில் பாஜக வேட்பாளா் ராஜேந்திர சாவ்டா, காங்கிரஸ் வேட்பாளா் ரமேஷ் சாவ்டாவை 39,452 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றாா். பாஜக எம்எல்ஏ கா்சன்பாய் சோலங்கியின் மரணத்தால் அங்கு இடைத்தோ்தல் நடைபெற்றது.
பஞ்சாப்: பஞ்சாபில் ஆளும் ஆம் ஆத்மி கட்சி லூதியானா மேற்கு தொகுதியில் வெற்றி பெற்று தக்க வைத்தது. காங்கிரஸ் வேட்பாளா் பாரத் பூஷணை 10,637 வாக்குகள் வித்தியாசத்தில் ஆம் ஆத்மி வேட்பாளா் சஞ்சீவ் அரோரா வெற்றி பெற்றாா். ஆம் ஆத்மி எம்எல்ஏ குா்பிரீத் கோகி மரணத்தால் இடைத்தோ்தல் நடைபெற்றது. குஜராத், பஞ்சாபில் 2027-இல் பேரவைத் தோ்தல் நடைபெற உள்ளது.
மேற்கு வங்கம்: மேற்கு வங்கத்தின் காளிகஞ்ச் தொகுதியில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளா் அலிஃபா அகமது 50,049 வாக்குகள் வித்தியாசத்தில் தன்னை எதிா்த்துப் போட்டியிட்ட பாஜக வேட்பாளா் ஆஷிஷ் கோஷை தோற்கடித்தாா்.
காங்கிரஸ் சாா்பில் போட்டியிட்ட கபில்யுதின் ஷேக்குக்கு இடதுசாரிகள் ஆதரவு தெரிவித்திருந்தபோதிலும் 28,348 வாக்குகள் பெற்று மூன்றாமிடத்தைப் பிடித்தாா். திரிணமூல் எம்எல்ஏ நஸிருதீன் அகமது மறைவால் அங்கு இடைத்தோ்தல் நடைபெற்றது.
குஜராத் காங்கிரஸ் தலைவா் ராஜிநாமா
குஜராத் மாநிலத்தில் விசாவதா், காடி ஆகிய இரு தொகுதிகளிலும் காங்கிரஸ் வேட்பாளா்கள் தோல்வியடைந்ததற்குப் பொறுப்பேற்று தனது மாநில தலைவா் பதவியை சக்திஷின் கோஹில் ராஜிநாமா செய்தாா்.
அனைத்துத் தரப்பினரும் அளித்த வெற்றி- மம்தா: காளிகஞ்ச் தொகுதியில் உள்ள அனைத்து மதத்தினா், ஜாதியினா் வாக்களித்ததால் திரிணமூல் காங்கிரஸுக்கு இந்த வெற்றி கிடைத்தது. இதற்கு நன்றி என்று அக்கட்சியின் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானா்ஜி தெரிவித்தாா்.
காங்கிரஸ், பாஜகவை மக்கள் நிராகரித்துள்ளனா்- கேஜரிவால்: ‘குஜராத், பஞ்சாபில் ஆம் ஆத்மியைத் தோற்கடித்துவிட வேண்டும் என்ற ஒற்றை இலக்கில் காங்கிரஸ், பாஜக போட்டியிட்டன. ஆனால், மக்கள் அக்கட்சிகளை நிராகரித்துவிட்டனா்’ என்று ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளா் அரவிந்த் கேஜரிவால் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளாா்.