
பிரதமர் நரேந்திர மோடி எதிர்க்கட்சிகளைக் குறைத்து மதிப்பிட்டால் மக்கள் பொறுத்துக்கொள்ளமாட்டார்கள் என்று காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார்.
கார்கே ராய்ச்சூரில் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார், அத்துடன் ராய்ச்சூர் பல்கலைக்கழகத்தின் பெயர் சூட்டும் விழாவிற்கும் தலைமை தாங்கினார். அவருடன் முதல்வர் சித்தராமையா, காங்கிரஸ் அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் உடனிருந்தனர்.
கர்நாடகத்தில் பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய கார்கே,
நாடு கடினமான கட்டத்தைக் கடந்து வருவதாகவும், சமீபத்தில் நடந்த பஹல்காம் தாக்குதல் அதற்கு சான்று.
நாட்டைப் பாதுகாக்க முழு நாடும் ஆயுதப் படைகளும் ஒற்றுமையாகச் செயல்பட்டாலும், சில தனிநபர்கள் தனிப்பட்ட முறையில் பெருமையைச் சேர்க்க முயன்றதாக அவர் குற்றம் சாட்டினார்.
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் குறித்து அனைத்துக் கட்சி கூட்டத்தை முதலில் கோரியது காங்கிரஸ் தான். அனைத்துக் கட்சி கூட்டங்கள் இரண்டு முறை நடத்தப்பட்டபோதிலும் பிரதமர் கலந்து கொள்ளவில்லை. அவர் ஏன் கலந்து கொள்ளவில்லை என்று நான் அவரிடம் கேட்க விரும்புகிறேன் என்றார்.
கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான தலைவர்கள் கூட்டத்தில் கலந்துகொள்ள முக்கியமான பணிகளை விட்டுச் சென்ற பிரதமர் மோடிக்கு அனைத்துக்கட்சி கூட்டத்தில் கலந்துகொள்ள விருப்பமில்லை. மாறாக பிகார் தேர்தலுக்கான பிரசாரத்தில் அவர் மும்முரமாக இருந்தார்.
அதன் அர்த்தம் என்ன? நாடும் வீரர்களும் ஒருபக்கம் சண்டையிட்டுக் கொண்டிருந்தபோது, பிரதமர் மறுபுறம் பிரசாரம் செய்யத் தேர்ந்தெடுத்தார். இது பொருத்தமற்றது. அத்தகைய அணுகுமுறை நல்லதல்ல.
எதிர்க்கட்சியை நீங்கள் குறைத்து மதிப்பிட முயன்றால், தலைவர்கள், மக்கள் குறிப்பாக இந்த நாட்டின் இளைஞர்கள் அதைப் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள் என்று அவர் எச்சரித்தார்.
அமெரிக்கா பழிவாங்கும் வரிகளை விதிப்பதைத் தடுக்க பிரதமர் தவறியதற்காகவும் கார்கே சாடினார்.
ஈரான் எப்போதும் இந்தியாவை ஆதரித்து வருகிறது, ஏனெனில் நாடு எரிபொருள் தேவையில் 50 சதவீதத்தை அங்கிருந்து இறக்குமதி செய்கிறது. இப்போது ஈரானுக்கும் - இஸ்ரேலுக்கும் இடையே ஆயுத மோதல் நடந்து வருகிறது. நாம் அதைத் தடுக்க முயற்சிகளை மேற்கொண்டிருக்க வேண்டும்.
மோடியின் ஒரே உரத்த முழக்கம் அவர் "விஸ்வ குரு" ஆகப் போகிறார் என்பதுதான். நீங்கள் விஸ்வ குருவாக இருந்தாலும் சரி, வீட்டில் குருவாக இருந்தாலும் சரி, மக்கள் விரும்புவது பெட்ரோல், டீசல், உணவு, உடைகள் மற்றும் தலைக்கு மேல் கூரை இவைகளுக்காக அவர் பாடுபட்டேயாக வேண்டும்.
கல்வி காவிமயமாக்கப்படுவதாகவும், இன்று பல்கலைக்கழகங்கள், மொரார்ஜி தேசாய் குடியிருப்புப் பள்ளிகள் மற்றும் கேந்திரிய வித்யாலயாக்களில் ஆர்எஸ்எஸ் பாடத்திட்டம் கற்பிக்கப்படுகிறது. அனைத்து இடங்களிலும், ஆர்எஸ்எஸ் மக்கள் தங்கள் குழந்தைகளுக்குப் பதவிகளைப் பெறுகிறார்கள், மற்றவர்கள் பிழைப்புக்காகப் போராடுகிறார்கள் என்றும் காங்கிரஸ் தலைவர் குற்றம் சாட்டினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.