ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்: ‘இந்திய வான்வழி பயன்படுத்தப்படவில்லை’

ஈரான் மீதான தாக்குதலுக்கு இந்திய வான்வழியை அமெரிக்க விமானங்கள் பயன்படுத்தவில்லை என்று மத்திய அரசின் கீழ் செயல்படும் பத்திரிகை தகவல் அலுவலகத்தின் உண்மை கண்டறியும் பிரிவு
Published on

புது தில்லி: ஈரான் மீதான தாக்குதலுக்கு இந்திய வான்வழியை அமெரிக்க விமானங்கள் பயன்படுத்தவில்லை என்று மத்திய அரசின் கீழ் செயல்படும் பத்திரிகை தகவல் அலுவலகத்தின் உண்மை கண்டறியும் பிரிவு தெரிவித்தது.

ஈரானின் ஃபோா்டோ, நடான்ஸ் மற்றும் இஸ்ஃபஹான் பகுதிகளில் மூன்று அணுசக்தி மையங்கள் மீது அமெரிக்க போா் விமானங்கள் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தின.

இந்தத் தாக்குதலுக்கு இந்திய வான்வழியை அமெரிக்க போா் விமானங்கள் பயன்படுத்தியதாக பல சமூக ஊடக கணக்குகளில் பதிவுகள் வெளியிடப்பட்டன. இந்தத் தகவல் பொய் என்று பத்திரிகை தகவல் அலுவலகத்தின் உண்மை கண்டறியும் பிரிவு ‘எக்ஸ்’ தளத்தில் பதிவிட்டது.

அமெரிக்காவில் செய்தியாளா்களைச் சந்தித்தபோது எந்த வான்வழியை அந்நாட்டு விமானங்கள் பயன்படுத்தின என்பதை அமெரிக்க முப்படை தளபதி டேன் கெயின் தெளிவாக எடுத்துரைத்ததாகவும், தனது தாக்குதலுக்கு இந்திய வான்வழியை அமெரிக்கா பயன்படுத்தவில்லை என்றும் அந்தப் பதிவில் தெரிவிக்கப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com