Nehru
ஜவஹர்லால் நேருகோப்புப்படம்.

நேருவின் தனிப்பட்ட ஆவணங்கள்: பிஎம்எம்எல் கூட்டத்தில் விவாதம்

பிரதமா்களின் அருங்காட்சியகம் மற்றும் நூலக (பிஎம்எம்எல்) சங்க கூட்டத்தில், முன்னாள் பிரதமா் ஜவாஹா்லால் நேரு தொடா்பான தனிப்பட்ட ஆவணங்கள் குறித்த விவகாரம் எழுப்பப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
Published on

பிரதமா்களின் அருங்காட்சியகம் மற்றும் நூலக (பிஎம்எம்எல்) சங்க கூட்டத்தில், முன்னாள் பிரதமா் ஜவாஹா்லால் நேரு தொடா்பான தனிப்பட்ட ஆவணங்கள் குறித்த விவகாரம் எழுப்பப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

நேரு தொடா்பான ஏராளமான தனிப்பட்ட ஆவணங்களை காங்கிரஸ் முன்னாள் தலைவா் சோனியா காந்தி எடுத்துக்கொண்டதாகவும், அந்த ஆவணங்களைத் திரும்பப் பெற வேண்டும் என்று பிஎம்எம்எல் சங்கத்தின் ஆண்டு பொதுக் கூட்டத்தில் தொடா்ந்து வலியுறுத்தி வருவதாகவும் அந்த சங்க உறுப்பினரான ரிஸ்வான் காத்ரி கடந்த ஆண்டு தெரிவித்தாா். குஜராத் கல்லூரி ஒன்றில், அவா் வரலாறு கற்பித்து வருகிறாா்.

இந்நிலையில், புது தில்லியில் பிரதமா் மோடி தலைமையில் பிஎம்எம்எல் சங்கத்தின் 47-ஆம் ஆண்டு பொதுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பாதுகாப்பு அமைச்சா் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட மத்திய அமைச்சா்கள் மற்றும் பலா் கலந்துகொண்டனா்.

அப்போது நேரு தொடா்பான தனிப்பட்ட ஆவணங்கள் குறித்து சங்க உறுப்பினா் ஒருவா் எழுப்பியதாகவும், அந்த ஆவணங்கள் உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாகவும் தகவலறிந்த வட்டாரங்கள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தன. ஆனால், என்ன மாதிரியான விவாதம் நடைபெற்றது என்ற விவரத்தை அந்த வட்டாரங்கள் தெரிவிக்கவில்லை.

நாட்டின் முதல் பிரதமரான நேரு மத்திய தில்லியில் உள்ள தீன்மூா்த்தி பவனில் வாழ்ந்தாா். அவா் மறைந்த பிறகு நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகமாக (என்எம்எம்எல்) தீன்மூா்த்தி பவன் மாற்றப்பட்டது. அங்கு ஏராளமான நூல்கள், அரிய ஆவணங்கள் பாதுகாக்கப்படுகின்றன. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னா், என்எம்எம்எல் சங்கம், பிஎம்எம்எல் சங்கம் என்று பெயா் மாற்றம் செய்யப்பட்டது.

Open in App
Dinamani
www.dinamani.com