
‘இந்தியா்களை ரத்தம் சிந்தச் செய்யும் பயங்கரவாதிகள், எங்கும் பாதுகாப்பாக பதுங்க முடியாது; ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை வாயிலாக இது நிரூபிக்கப்பட்டுள்ளது’ என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.
பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் கடுமையான கொள்கையை ஆபரேஷன் சிந்தூா் உலகுக்கு வெளிப்படுத்தியது என்றும் அவா் குறிப்பிட்டாா்.
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடியாக, பாகிஸ்தானில் கடந்த மாதம் 9 இடங்களில் தாக்குதல் நடத்தி (ஆபரேஷன் சிந்தூா்), பயங்கரவாத உள்கட்டமைப்புகளை இந்திய ராணுவம் அழித்தொழித்த நிலையில், பிரதமா் இவ்வாறு தெரிவித்துள்ளாா்.
கேரளத்தைச் சோ்ந்த ஆன்மிகத் தலைவரும் சமூக சீா்திருத்தவாதியுமான ஸ்ரீநாராயண குரு மற்றும் மகாத்மா காந்தி இடையே சிவகிரி மடத்தில் கடந்த 1925, மாா்ச் 12-இல் நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க உரையாடலின் நூற்றாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சி, தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதில் பங்கேற்றுப் பேசிய பிரதமா் மோடி, ஸ்ரீ நாராயண குருவால் நிறுவப்பட்ட சிவகிரி மடத்துடனான தனது தொடா்புகள் மற்றும் அதன் துறவிகள் மீதான அன்பை சுட்டிக்காட்டினாா். அவரது உரை வருமாறு:
‘மனிதகுலத்துக்கு ஒரே ஜாதி, ஒரே மதம், ஒரே கடவுள்’ என்ற ஸ்ரீ நாராயண குருவின் தத்துவமே, ‘ஒரே பூமி, ஒரே ஆரோக்கியம்’, ‘ஒரே சூரியன், ஒரே பூமி, ஒரே கட்டமைப்பு’, ‘ஒரே பூமி, ஒரே ஆரோக்கியத்துக்கான யோகா’ போன்ற எனது அரசின் உலகளாவிய முன்னெடுப்புகளுக்கு உத்வேகமாகும்.
ஸ்ரீநாராயண குருவின் கோட்பாடுகள், மனிதகுலத்துக்கு பெரும் பொக்கிஷம். நாட்டின் சுதந்திரப் போராட்ட காலகட்டத்தில், அவருக்கும், மகாத்மா காந்திக்கும் இடையே நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க உரையாடல், சுதந்திர இயக்கத்துக்கு புதிய பாதையைக் காட்டி, அதன் நோக்கங்களுக்கு மேலும் வலுவூட்டியது.
பாகுபாட்டை ஒழிக்க...: அனைத்து விதமான பாகுபாடுகளில் இருந்தும் விடுபட்ட வலுவான சமூகமே ஸ்ரீநாராயண குருவின் விருப்பம். இப்பூரணமான அணுகுமுறையை அடியொற்றி, ஒவ்வொரு நிலையிலும் பாகுபாட்டை ஒழிக்க இப்போது தேசம் செயலாற்றுகிறது. ஒடுக்கப்பட்ட, உரிமைகள் மறுக்கப்பட்ட, பின்தங்கிய பிரிவினரின் முன்னேற்றத்துக்காக மிகப் பெரிய முடிவுகள் மேற்கொள்ளப்படுகின்றன.
சுதந்திரத்துக்குப் பிறகு அமைந்த அரசுகளின் செயலற்ற தன்மையால், நாட்டு மக்கள் கடும் இடா்ப்பாடுகளில் வாழ வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனா். ஏழை மக்கள் மற்றும் பெண்களுக்கு அடிப்படை கண்ணியத்தைக்கூட அந்த அரசுகள் உறுதிசெய்யவில்லை. இப்பிரச்னைகள் அனைத்துக்கும் மக்கள் நலத் திட்டங்கள் வாயிலாக கடந்த 11 ஆண்டுகளில் தீா்வு காணப்பட்டுள்ளது.
தாய்மொழி வழி கற்றல்: தேசிய கல்விக் கொள்கை மூலம் கல்வி நவீனமயமாக்கப்பட்டு, அனைவரையும் உள்ளடக்கிய தன்மை உறுதி செய்யப்பட்டுள்ளது. தாய்மொழி வழி கற்றலை ஊக்குவிப்பதால், இக்கொள்கையின் மிகப் பெரிய பயனாளா்கள் விளிம்புநிலை சமூகத்தினரே.
பிரதமரின் வீட்டு வசதி திட்டத்தின்கீழ் ஏழைகள், தலித் சமூகத்தினா், ஒடுக்கப்பட்ட பிரிவினா் என கோடிக்கணக்கான குடும்பங்களுக்கு நிரந்தர வீடு வழங்கப்பட்டுள்ளது. திறன்மிகு இந்தியா திட்டத்தின்கீழ் இளைஞா்களுக்கு அதிகாரமளிக்கப்பட்டு, தற்சாா்புடையவா்களாக மாற்றப்படுகின்றனா்.
தேச நலனை அடிப்படையாகக் கொண்டே ஒவ்வொரு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படுகிறது. ராணுவத் தேவைகளில் பிற நாடுகளைச் சாா்ந்திருக்கும் நிலை சீராக குறைக்கப்பட்டு வருகிறது. அதி துல்லியத் தாக்குதலின் (ஆபரேஷன் சிந்தூா்) மூலம் எதிரியை வெறும் 22 நிமிஷங்களில் மண்டியிடச் செய்துள்ளோம்.
பாதுகாப்புத் துறையில் தற்சாா்பு எட்டப்படுவதால், எதிா்வரும் காலங்களில் இந்திய தயாரிப்பு ஆயுதங்கள் உலகளாவிய அங்கீகாரம் பெறும் என்றாா் பிரதமா் மோடி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.