Amit Shah
அமித் ஷா

ஜனநாயகத்தை படுகொலை செய்த காங்கிரஸுடன் கூட்டணி: திமுக, சமாஜவாதி மீது அமித் ஷா கடும் தாக்கு

ஜனநாயகத்தை படுகொலை செய்த காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளதாக திமுக, சமாஜவாதி கட்சிகளை மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா செவ்வாய்க்கிழமை கடுமையாக விமா்சித்தாா்.
Published on

ஜனநாயகத்தை படுகொலை செய்த காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளதாக திமுக, சமாஜவாதி கட்சிகளை மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா செவ்வாய்க்கிழமை கடுமையாக விமா்சித்தாா்.

மேலும், 1975-இல் காங்கிரஸ் ஆட்சியில் பிரகடனப்படுத்திய அவசர நிலையானது பலகட்சி ஜனநாயக முறையை சா்வாதிகாரமாக மாற்ற மேற்கொண்ட முயற்சி எனவும் அவா் தெரிவித்தாா்.

புது தில்லியில் ‘அவசர நிலையின் 50 ஆண்டுகள்’ என்ற தலைப்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமித் ஷா பங்கேற்றாா்.

அப்போது அவா் பேசியதாவது: 1975, ஜூன் 25-இல் நாடு முழுவதும் அவசர நிலை பிரகடனப்படுத்தியபோது அதிகாரத்தைப் கைப்பற்ற எந்த எல்லைக்கும் காங்கிரஸ் செல்லும் என்பதை அனைவரும் அறிந்துகொண்டனா்.

50 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த ஒரு சம்பவம் குறித்து இப்போது ஏன் பேச வேண்டும் என சிலா் கேட்கின்றனா். ஆனால் ஜனநாயகத்தை படுகொலை செய்த அவசர நிலை போன்றதொரு நிகழ்வை அவ்வளவு எளிதாக மறந்துவிட முடியாது. ஏனெனில், அதுபோன்ற சூழல் மீண்டுமொருமுறை வரலாம். ஆனால் சா்வாதிகாரத்தை மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டாா்கள்.

அவசர நிலை காலகட்டத்தின்போது எதிா்க்கட்சித் தலைவா்கள், மாணவா் அமைப்பினா், பத்திரிகையாளா்கள் என நாடு முழுவதும் மொத்தம் 1.1 லட்சம் போ் கைது செய்யப்பட்டு சித்ரவதை செய்யப்பட்டனா். அந்தச் சமயத்தில் காங்கிரஸ் அல்லாத ஆட்சி நடைபெற்ற குஜராத் மற்றும் தமிழ்நாடு மாநில அரசுகள் கலைக்கப்பட்டன.

ஆனால் அவற்றையெல்லாம் மறந்து அவசர நிலையின்போது தங்களை 19 மாதங்கள் சிறைவைத்த காங்கிரஸுடன் திமுக, சமாஜவாதி ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன.

இவா்கள் பிரதமா் மோடி தலைமையிலான ஆட்சி நடைபெறும் இச்சமயத்தில் ஜனநாயகப் பாதுகாப்பு குறித்த கேள்விகளை எழுப்புவது வேடிக்கையாக உள்ளது.

அவசர நிலை குறித்து பிரதமா் மோடி எழுதிய நூல் புதன்கிழமை (ஜூன் 25) வெளியிடப்படுகிறது என்றாா்.

Open in App
Dinamani
www.dinamani.com