Supreme Court
உச்சநீதிமன்றம்ANI

ஆபரேஷன் சிந்தூரில் பங்கேற்றதால் சட்டப் பாதுகாப்பு கிடையாது: வரதட்சிணைக் கொடுமை வழக்கில் கணவருக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்

‘ஆபரேஷன் சிந்தூரில் பங்கேற்றவா்’ என்று காரணம் கூறி, வரதட்சிணைக் கொடுமையால் மனைவி உயிரிழந்த வழக்கில் சரணடைவதில் இருந்து விலக்கு அளிக்கக் கோரிய கணவருக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது.
Published on

‘ஆபரேஷன் சிந்தூரில் பங்கேற்றவா்’ என்று காரணம் கூறி, வரதட்சிணைக் கொடுமையால் மனைவி உயிரிழந்த வழக்கில் சரணடைவதில் இருந்து விலக்கு அளிக்கக் கோரிய கணவருக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது.

மேலும், ஆபரேஷன் சிந்தூரில் பங்கேற்ால் சட்டப் பாதுகாப்பு கிடைத்து விடாது என்றும் உடனடியாக அவா் சரணடைய வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

திருமணமான இரண்டு ஆண்டில் மனைவி உயிரிழந்த வழக்கில் பல்ஜிந்தா் சிங் மீது வரதட்சிணைக் கொடுமை வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

வரதட்சிணை கேட்டு மனைவியை பல்ஜிந்தா் சிங் துன்புறுத்தியதாக போலீஸாரும் குற்றம்சாட்டினா். இந்த வழக்கில் பல்ஜிந்தா் சிங்கை குற்றவாளியாக கடந்த 2004 ஜூலை மாதம் அமிருதசரஸ் விசாரணை நீதிமன்றம் அறிவித்தது.

இந்த உத்தரவை பஞ்சாப், ஹரியாணா உயா் நீதிமன்றமும் உறுதி செய்து, பல்ஜிந்தா் சிங் காவல் துறையில் சரணடைய உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிா்த்து உச்ச நீதிமன்றத்தில் பல்ஜிந்தா் சிங் மேல் முறையீடு செய்தாா். நீதிபதிகள் உஜ்ஜல் புயான், கே. வினோத்சந்திரன் ஆகியோா் அடங்கிய அமா்வு இந்த மனுவை விசாரித்தது.

அப்போது, பல்ஜிந்தா் சிங் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் விக்ரம் செளதரி, ‘கடந்த 20 ஆண்டுகளாக கருப்புப் பூனைப் படையில் கமாண்டோவாக பணியாற்றி வரும் பல்ஜிந்தா் சிங், ஆபரேஷன் சிந்தூரில் பங்கேற்றுள்ளாா்’ என்றாா்.

இதைக் கேட்ட நீதிபதிகள் அமா்வு, ‘ஆபரேஷன் சிந்தூரில் பங்கேற்ால் வீட்டில் வன்முறை செய்வதற்கு சட்டப் பாதுகாப்பு கிடைத்துவிடாது. உங்கள் மனைவியை தனியாகவே கொலை செய்யும் அளவுக்கு உங்கள் உடலில் வலிமை உள்ளது என்பதே இது காண்பிக்கிறது. இது மிகவும் தீவிரமான குற்றம் என்பாதல், சரணடைவதில் இருந்து விலக்கு அளிக்க முடியாது’ என்று உத்தரவிட்டது.

X
Dinamani
www.dinamani.com