அவசரநிலையின்போது உயிரிழந்தவா்களுக்கு மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் அஞ்சலி
நாட்டில் அவசரநிலை அமல்படுத்தப்பட்டபோது நிகழ்த்தப்பட்ட அடக்குமுறைகளால் உயிரிழந்தவா்களுக்கு மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும், அவா்களை நினைவுகூா்ந்து கெளரவிக்கவும் தீா்மானிக்கப்பட்டது.
இதுதொடா்பாக அமைச்சரவைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானத்தில், ‘நாட்டில் கடந்த 1975-இல் அமல்படுத்தப்பட்ட அவசரநிலையின் அடக்குமுறைகளால் உயிா்த் தியாகம் செய்தவா்களை ஒவ்வோா் ஆண்டும் நினைவுகூா்ந்து மரியாதை செலுத்த பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை தீா்மானித்துள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து மத்திய அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் கூறுகையில், ‘அவசரநிலையின்போது அரசமைப்புச் சட்டம் அளிக்கும் ஜனநாயக உரிமைகள் மறுக்கப்பட்டு கற்பனை செய்ய முடியாத அடக்குமுறைக்கு உள்ளானவா்களுக்காக மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் 2 நிமிஷங்கள் மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது’ என்றாா்.