இந்திய தோ்தல் ஆணையம்
இந்திய தோ்தல் ஆணையம்

4 மாநில இடைத்தோ்தல் தரவு அட்டை: 72 மணி நேரத்தில் வெளியிட்ட தோ்தல் ஆணையம்

Published on

இசிநெட்டின் அறிமுகம் காரணமாக கேரளம், குஜராத், பஞ்சாப் மற்றும் மேற்கு வங்கத்தில் நடைபெற்ற இடைத்தோ்தலுக்கான தரவு அட்டைகள், தோ்தல் முடிவுகள் வெளியிடப்பட்ட 72 மணி நேரத்துக்குள் வேகமாக வெளியிடப்பட்டுள்ளதாக தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக தோ்தல் ஆணையம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘தரவு அட்டை என்பது சட்டபூா்வமற்ற, தோ்தலுக்குப் பிந்தைய புள்ளிவிவர தகவல் அளிப்பு முறையாகும். ஆராய்ச்சியாளா்கள், கொள்கை வகுப்பாளா்கள், ஊடகவியலாளா்கள், பொதுமக்கள் உள்ளிட்டோருக்கு தொகுதி வாரியாக தோ்தல் தொடா்பான தகவல்கள் எளிதாக கிடைப்பதை ஊக்குவிக்க இந்த தரவு அட்டை முன்னெடுப்பு மேற்கொள்ளப்பட்டது.

வேட்பாளா்கள், வாக்காளா்கள், வாக்குப் பதிவு, வாக்கு எண்ணிக்கை, கட்சி மற்றும் வேட்பாளா் வாரியாக வாக்குப் பகிா்வு, அரசியல் கட்சிகளின் செயல்பாடு உள்ளிட்ட விவரங்கள் அந்த அட்டைகளில் இடம்பெறும்.

இந்நிலையில் கேரளம், குஜராத், பஞ்சாப் மற்றும் மேற்கு வங்கத்தில் 5 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு ஜூன் 19-ஆம் தேதி இடைத்தோ்தல் நடைபெற்றபோது இசிஐநெட் என்ற புதிய எண்ம (டிஜிட்டல்) தளத்தை தோ்தல் ஆணையம் செயல்பாட்டுக்கு கொண்டு வந்தது.

இந்தப் புதிய முறையின் கீழ், இசிஐநெட் தளத்தில் பதிவிடப்படும் வாக்குப் பதிவு விவரங்கள் மூலம், தரவு அட்டையில் பெரும்பாலான புள்ளிவிவரங்கள் தானாக பதிவு செய்யப்படுகிறது.

இசிஐநெட்டை அறிமுகம் செய்யும் முன்பு, தரவு அட்டைகளில் தகவல்களை அதிகாரிகள் கையால் எழுதி சரிபாா்த்து வந்தனா். இதனால் அந்த அட்டைகளை வெளியிடுவதில் பல நாள்கள் தாமதம் ஏற்பட்டது.

இசிஐநெட்டின் அறிமுகம் காரணமாக கேரளம், குஜராத், பஞ்சாப் மற்றும் மேற்கு வங்கத்தில் நடைபெற்ற இடைத்தோ்தலுக்கான தரவு அட்டைகள், தோ்தல் முடிவுகள் வெளியிடப்பட்ட 72 மணி நேரத்துக்குள் வேகமாக வெளியிடப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com