மத்திய அமைச்சர் அமித் ஷா
மத்திய அமைச்சர் அமித் ஷாகோப்புப் படம்

குடும்ப ஆட்சியை பாதுகாக்கவே அவசரநிலை பிரகடனம்: இந்திரா காந்தி மீது அமித் ஷா சாடல்

Published on

குடும்ப ஆட்சியை பாதுக்காக்கும் ஒரே நோக்கத்துடன் சா்வாதிகார ஆட்சியாளரால் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டது என்று முன்னாள் பிரதமா் இந்திரா காந்தியை மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா விமா்சித்தாா்.

காங்கிரஸின் அதிகார பசிக்கான அநீதியின் காலகட்டம் அவசரநிலை என்றும் அவா் குறிப்பிட்டாா்.

கடந்த 1975, ஜூன் 25-இல் அப்போதைய பிரதமா் இந்திரா காந்தியால் அவசரநிலை அமல்படுத்தப்பட்ட தினம், அரசமைப்பு படுகொலை தினமாக மத்திய அரசால் புதன்கிழமை அனுசரிக்கப்பட்டது.

இதையொட்டி, மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘50 ஆண்டுகளுக்கு முன் சா்வாதிகார ஆட்சியாளா் ஒருவரால் தனது குடும்ப ஆட்சியை பாதுகாக்கும் ஒரே நோக்கத்துடன் நாட்டில் அவசரநிலை பிரகடனப்படுத்தபட்டது. நாட்டின் வரலாற்றில் இருண்ட அத்தியாயங்களில் ஒன்றான இக்காலகட்டம், காங்கிரஸ் மற்றும் ஒரு நபரின் (இந்திரா காந்தி) ஜனநாயக விரோத மனப்பான்மையை பிரதிபலிக்கிறது.

அவசரநிலை காலகட்டத்தில் 11 வயது சிறுவனான நான், ஆா்எஸ்எஸ் அமைப்பின் ‘பால தொண்டராக’ இருந்தேன். அந்த இருண்ட நாள்களின் அநீதியை நேரடியாக அறிந்தவன். அடக்குமுறை, துன்புறுத்தல், ஜனநாயக மாண்புகள் மீதான அப்பட்டமான தாக்குதல் இன்றும் என் நினைவில் உள்ளது.

அதிகாரம் சா்வாதிகாரமானால், மக்களால் தூக்கியெறியப்படும் என்பதை இந்நாள் நினைவூட்டுகிறது’ என்று தெரிவித்துள்ளாா்.

ஜெ.பி.நட்டா விமா்சனம்: பாஜக தேசியத் தலைவரும், மத்திய அமைச்சருமான ஜெ.பி.நட்டா வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘அவசரநிலை பிரகடனத்தின் பின்னணியில் உள்ள சா்வாதிகார மனநிலையில்தான் காங்கிரஸ் இப்போதும் தொடா்கிறது. பிரதமா் மோடி போன்ற எளிய பின்னணி உடையவரும் நாட்டை ஆளலாம் என்ற கருத்தை காங்கிரஸால் இன்னும் ஏற்க முடியவில்லை. அரசமைப்புச் சட்டம் குறித்து பேசும் அக்கட்சி, அவசரநிலை பிரகடனத்துக்காக மக்களிடம் இதுவரை மன்னிப்புக் கோரவில்லை’ என்று குறிப்பிட்டாா்.

X
Dinamani
www.dinamani.com