இந்திய பாதுகாப்பு அமைச்சகத்தில் பணிபுரிந்த பாகிஸ்தான் உளவாளி! 2 ஆண்டு கண்காணிப்பில் திடுக் தகவல்!

பாகிஸ்தானுக்கு உளவுபார்த்த இந்திய கடற்படை பிரிவு அதிகாரி விகாஸ் யாதவ் கைது
இந்திய பாதுகாப்பு அமைச்சகத்தில் பணிபுரிந்த பாகிஸ்தான் உளவாளி! 2 ஆண்டு கண்காணிப்பில் திடுக் தகவல்!
ENS
Published on
Updated on
1 min read

பாகிஸ்தானுக்கு உளவுபார்த்த இந்திய கடற்படை பிரிவு அதிகாரி விகாஸ் யாதவ் கைது செய்யப்பட்டார்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பஹல்காம் பகுதியில் பாகிஸ்தானின் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் படுகொலை செய்யப்பட்ட நிலையில், பாகிஸ்தான் மீது பல்வேறு நடவடிக்கைகளை இந்தியா மேற்கொண்டது. மேலும், பாகிஸ்தானுடன் தொடர்பில் இருப்பவர்களையும் மத்திய அரசு கண்காணித்து, கைது செய்து வருகிறது.

அந்த வகையில், பஹல்காம் தாக்குதலுக்கு முன்னதாகவே கண்காணிக்கப்பட்டு வந்த பாதுகாப்பு அமைச்சகத்தின் (Nau Sena Bhavan) கடற்படைப் பிரிவில் உயர் பிரிவு எழுத்தரான விகாஸ் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் பாகிஸ்தானுடன் நீண்ட காலமாகவே தொடர்பில் இருப்பதை அறிந்து, 2 ஆண்டுகளாகவே கண்காணிக்கப்பட்டு வந்தார்.

இவரது கைது குறித்து புலனாய்வு அதிகாரிகள் கூறுகையில், ஆன்லைன் கேமில் பிரியா ஷர்மா (போலியான பெயராகக்கூட இருக்கலாம்) என்ற பாகிஸ்தான் பெண்ணுடன் விகாஸ் யாதவுக்கு தொடர்பு ஏற்பட்டது. ஆன்லைன் கேமில் விகாஸ் அடிமையானதைக் கண்ட பிரியா, அவரை பாகிஸ்தானுக்கு உளவுபார்க்க பயன்படுத்திக் கொண்டார்.

அவருடன் வாட்ஸ்ஆப், டெலிகிராம் செயலிகளிலும் உரையாடியுள்ளார். விகாஸுக்கு கிரிப்டோகரன்சி மூலம் பிரியா பணமும் அளித்தது விசாரணையில் தெரிய வந்தது.

2022 ஆம் ஆண்டில் ராஜஸ்தானில் கைது செய்யப்பட்ட உளவாளி ரவி பிரகாஷ் மீனா தொடர்பான வழக்கில் இருந்துதான், விகாஸ் வழக்கும் தொடங்கியது.

பாதுகாப்பு அமைச்சகத்தின் நான்காம் நிலை ஊழியராக இருந்த ரவி பிரகாஷ், பாகிஸ்தானுக்கு வரைபடங்கள் போன்ற முக்கிய தகவல்களை வழங்கியதற்கு ஈடாக, அவருக்கு கிரிப்டோகரன்சி சேனல் பணம் அளிக்கப்பட்டது.

அதே கிரிப்டோகரன்சி சேனலில் விகாஸும் இருப்பது அறிந்து, அவரும் 2 ஆண்டுகளாக கண்காணிப்பு வளையத்துக்கு உட்படுத்தப்பட்டார்.

இதனையடுத்து, அவரை கைது செய்த புலனாய்வு அமைப்புகள், 4 நாள் காவல் அனுமதியையும் பெற்றுள்ளனர். விகாஸின் மொபைல் போன், தடயவியல் ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானுக்கு இந்திய கடற்படையின் முக்கிய ஆவணங்களை ஸ்கேன் செய்து, விகாஸ் அனுப்பியிருக்கலாம் என்றும், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போதும் முக்கிய தகவல்களை வழங்கியிருக்கலாம் என்றும் புலனாய்வு அமைப்புகள் சந்தேகிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com