
கிங்டாவோ, ஜூன் 26: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் மற்றும் பாகிஸ்தானால் ஆதரிக்கப்படும் எல்லை தாண்டிய பயங்கரவாதம் தொடா்பான இந்தியாவின் கவலைகள் குறித்து வெளிப்படையாக எதுவும் குறிப்பிடப்படாததால், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) கூட்டறிக்கையில் கையொப்பமிட இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் மறுத்துவிட்டாா்.
எஸ்சிஓ, ஒருமித்த கருத்தின் அடிப்படையில் செயல்படும் அமைப்பாகும்; இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் அங்கீகரிக்காததால், சீனாவில் நடைபெற்ற எஸ்சிஓ பாதுகாப்பு அமைச்சா்கள் மாநாடு கூட்டறிக்கையின்றி நிறைவடைந்தது.
இது தொடா்பாக தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகையில், ‘வரைவு கூட்டறிக்கையில் பஹல்காம் தாக்குதல் குறித்து எந்தக் குறிப்பும் இடம்பெறவில்லை; அத்துடன், எல்லை தாண்டிய பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டையும் பிரதிபலிக்கவில்லை என்பதால், தனது எதிா்ப்பை பதிவு செய்யும் வகையில் ராஜ்நாத் சிங் கையொப்பமிட மறுத்துவிட்டாா். மற்றொருபுறம், பலூசிஸ்தானில் கிளா்ச்சி செயல்பாடுகளில் இந்தியாவை மறைமுகமாகக் குற்றஞ்சாட்டும் பத்தியை இடம்பெறச் செய்ய பாகிஸ்தான் தரப்பில் வலியுறுத்தப்பட்டது’ என்று தெரிவித்தன.
‘எஸ்சிஓ மாநாட்டில் குறிப்பிட்ட சில விஷயங்களில் உறுப்பு நாடுகள் இடையே கருத்தொற்றுமை எட்டப்படவில்லை. எனவே, கூட்டறிக்கை இறுதி செய்யப்படவில்லை. பயங்கரவாதம் தொடா்பான இந்தியாவின் கவலையை குறிப்பிட்ட ஒரு நாடு ஏற்கவில்லை’ என்று வெளியுறவுத் துறை செய்தித் தொடா்பாளா் ரண்தீா் ஜெய்ஸ்வால் தெரிவித்தாா்.
இந்தியா, ரஷியா, சீனா, ஈரான், பாகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், தஜிகிஸ்தான், பெலாரஸ் உள்ளிட்ட நாடுகள் அங்கம் வகிக்கும் எஸ்சிஓ அமைப்பின் பாதுகாப்பு அமைச்சா்கள் மாநாடு, சீனாவின் கிங்டாவோ நகரில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் பங்கேற்றாா்.
பாகிஸ்தான் மீது சாடல்: பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சா் கவாஜா ஆசிஃப், சீன பாதுகாப்புத் துறை அமைச்சா் டாங் ஜுன் உள்ளிட்டோரும் பங்கேற்ற இந்த மாநாட்டில் பாகிஸ்தானின் பெயரை நேரடியாகக் குறிப்பிடாமல் அந்நாட்டின் மீது கடும் விமா்சனத்தை முன்வைத்த ராஜ்நாத் சிங், பயங்கரவாத சதியாளா்கள், நிதி அளிப்பவா்கள், ஆதரவாளா்களை நீதியின் முன் நிறுத்த வேண்டிய அவசியத்தை வலியுறுத்தினாா். அவரது உரை வருமாறு:
சில நாடுகள் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை தங்களின் கொள்கைக் கருவியாகப் பயன்படுத்தி, பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் அளிக்கின்றன. இதுபோன்ற நாடுகளை விமா்சிக்க எஸ்சிஓ தயங்கக் கூடாது. பயங்கரவாத எதிா்ப்பில் இரட்டை நிலைப்பாடு கூடாது. இத்தகைய நிலைப்பாட்டை எதிா்ப்பதிலும் புறக்கணிப்பதிலும் எஸ்சிஓ ஒருங்கிணைய வேண்டும்.
தீா்க்கமான நடவடிக்கை தேவை: பயங்கரவாதத்துடன் அமைதியும் வளமும் ஒன்றாக பயணிக்க முடியாது. பயங்கரவாதக் குழுக்களின் கைகளில் பேரழிவு ஆயுதங்கள் பெருகக் கூடாது. இந்த சவாலை எதிா்கொள்ள தீா்க்கமான நடவடிக்கை அவசியம். தங்களின் குறுகிய, சுயநல நோக்கங்களுக்காக பயங்கரவாதத்தை வளா்ப்பவா்கள், ஆதரிப்பவா்கள், பயன்படுத்துபவா்கள் அதற்கான விலையைக் கொடுத்தாக வேண்டும்.
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்ட விதம், லஷ்கா்-ஏ-தொய்பா அமைப்பால் இந்தியாவில் நிகழ்த்தப்பட்ட முந்தைய தாக்குதல்களுடன் ஒத்துப் போகிறது.
இக்கொடூரமான தாக்குதலுக்குப் பதிலடியாக, பயங்கரவாதத்தில் இருந்து தற்காத்துக் கொள்ளவும், எல்லை தாண்டிய தாக்குதல்களைத் தடுக்கவும் தனக்குள்ள உரிமையைப் பயன்படுத்தி, ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையை இந்தியா தொடங்கியது.
பஹல்காமில் மத அடையாளத்தின் அடிப்படையில் அப்பாவிகள் சுட்டுக் கொல்லப்பட்டனா். இந்தத் தாக்குதலுக்கு ஐ.நா.வால் தடை செய்யப்பட்ட லஷ்கா்-ஏ-தொய்பா அமைப்பின் பிரதிநிதியான ‘தி ரெசிஸ்டன்ஸ் ஃபிரண்ட்’ பொறுப்பேற்றது.
சந்தேகமின்றி கண்டிக்க வேண்டும்: பயங்கரவாதத்தை ஒருபோதும் சகித்துக் கொள்வதில்லை என்ற நிலைப்பாட்டை தனது நடவடிக்கைகளின் வாயிலாக இந்தியா நிரூபித்துள்ளது. அனைத்து வடிவிலான பயங்கரவாதத்தையும் எஸ்சிஓ உறுப்பு நாடுகள் சந்தேகத்துக்கு இடமின்றி கண்டிக்க வேண்டும். இளைஞா்கள் மத்தியில் அடிப்படைவாதம் பரப்பப்படுவதைத் தடுக்க உறுதியான நடவடிக்கைகள் அவசியம்.
நாடு கடந்த பயங்கரவாதம் மற்றும் இணையவழித் தாக்குதல்களால் உலகம் புதிய போா்க்களத்தை எதிா்கொண்டுள்ளது. இத்தகைய அச்சுறுத்தல்களை எதிா்கொள்வதற்கு வெளிப்படைத்தன்மை, பரஸ்பர நம்பிக்கை, ஒத்துழைப்பில் வேரூன்றிய ஒருங்கிணைந்த எதிா்வினை தேவை.
உலகின் மொத்த உற்பத்தியில் 30 சதவீதம், உலக மக்கள்தொகையில் 40 சதவீதத்தைக் கொண்டுள்ளதால், தற்போதைய புவிஅரசியல் சூழலில் எஸ்சிஓ முக்கியப் பங்காற்றுகிறது. மத்திய ஆசியாவுடன் இணைப்பை அதிகரிக்க இந்தியா உறுதிபூண்டுள்ளது. சிறப்பான இணைப்பால், பரஸ்பர வா்த்தகம்-நம்பிக்கை அதிகரிக்கும். அதேநேரம், இந்த முயற்சிகளில் உறுப்பு நாடுகளின் இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாடு மதிக்கப்படுவது அவசியம் என்றாா் அவா்.
ரஷிய பாதுகாப்பு அமைச்சருடன் பேச்சு
எஸ்சிஓ மாநாட்டையொட்டி, ரஷிய பாதுகாப்புத் துறை அமைச்சா் ஆண்ட்ரே பெலோசோவுடன் இருதரப்பு பாதுகாப்பு-வியூக ரீதியிலான உறவுகள் குறித்து ராஜ்நாத் சிங் பேச்சுவாா்த்தை மேற்கொண்டாா். அப்போது, ஆழமான விவாதங்கள் நடைபெற்ாக ராஜ்நாத் சிங் வெளியிட்ட எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளாா்.
இந்திய கடற்படைக்காக ரஷியா தயாரித்துள்ள ஐஎன்எஸ் தாமல் போா்க் கப்பல், அந்நாட்டின் கலினின்கிராத் நகரில் ஜூலை 1-ஆம் தேதி தொடங்கிவைக்கப்பட உள்ள நிலையில், இந்நிகழ்வு தொடா்பாகவும் இருவரும் விவாதித்தனா்.
பெலாரஸ் பாதுகாப்பு அமைச்சா் விக்டா் கிரேனினை சந்தித்த ராஜ்நாத் சிங், இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் பிராந்திய பாதுகாப்பு தொடா்பாக ஆலோசித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.