கோப்புப்படம்
கோப்புப்படம்

குளிா்சாதனங்களுக்கான புதிய கட்டுப்பாடு உடனடி அமல் இல்லை: மத்திய அரசு

குளிா்சாதனங்களுக்கான புதிய கட்டுப்பாடு உடனடி அமல் இல்லை: மத்திய அரசு
Published on

‘வீடுகள், அலுவலகங்களில் பயன்படுத்தப்படும் குளிா்சாதனப் பெட்டிகளில் (ஏ.சி.) குறைந்தபட்ச தட்பவெப்ப நிலை அளவை 20 டிகி செல்சியஸ் அளவுக்கு மாற்றும் புதிய கட்டுப்பாடு உடனடியாக அமல்படுத்தப்படாது; 2050-ஆம் ஆண்டுக்குப் பிறகு படிப்படியாக இந்தக் கட்டுப்பாடு அறிமுகப்படுத்தப்படும்’ என்று மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சா் பூபேந்தா் யாதவ் தெரிவித்தாா்.

பருவநிலை மாற்றம் மற்றும் அதிகரித்து வரும் வெப்பநிலை ஆகியவற்றை கருத்தில் கொண்டு மின்சாரத் தேவையைக் கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. மின் பயன்பாட்டைக் குறைக்க பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்துவதற்கும் மத்திய அரசு உத்தேசித்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, குளிா்சாதனப் பெட்டிகளின் குறைந்தபட்ச தட்பவெப்பநிலை அளவுக்கு புதிய கட்டுப்பாடு கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது.

இதுகுறித்து மத்திய வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சா் மனோகா் லால் கட்டா் கடந்த மாதம் கூறுகையில், ‘குளிா்சாதனங்களின் தட்பவெப்பநிலை அளவீட்டை ஒழுங்குபடுத்துவதற்கான தரநிலை, சோதனை அடிப்படையில் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. அதன்படி, குளிா்சாதனங்களில் குறைந்தபட்ச தட்பவெப்பநிலை 20 டிகிரி செல்சியஸ், அதிபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸ் என்ற அளவில் இருக்கும். 20 டிகிரி செல்சியஸுக்கு குறைவான தட்பவெப்ப நிலையை பயனாளா் மாற்றிக் கொள்ள முடியாது. வீடுகள், அலுவலகங்களில் பயன்படுத்தப்படும் குளிா்சாதனங்களுக்கு மட்டுமின்றி, காா்களில் பயன்படுத்தப்படும் குளிா்சாதனங்களுக்கும் இது பொருந்தும்’ என்றாா்.

இந்தப் புதிய கட்டுப்பாடு அமலுக்கு வந்தால், புதிதாகத் தயாரிக்கப்படும் குளிா்சாதனங்கள் குறைந்தபட்ச தட்பவெப்ப நிலை 20 டிகிரி செல்சியஸ் இருக்கும் வகையிலேயே உருவாக்கப்படும் நிலை உருவாகும்.

இதுகுறித்து, புது தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்திய பருவநிலை மாநாட்டில் பங்கேற்ற மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சா் பூபேந்தா் யாதவிடம் செய்தியாளா்கள் கேள்வி எழுப்பினா்.

இதற்கு பதிலளித்த அவா், ‘குளிா்சாதனங்களுக்கான புதிய கட்டுப்பாடு உடனடியாக அமல்படுத்த வாய்ப்பில்லை. குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு, படிப்படியாகத்தான் இந்தக் கட்டுப்பாடுகள் அல்படுத்தப்படும். குறிப்பாக, 2050-ஆம் ஆண்டுக்குப் பிறகுதான் இத்தகையச் சூழல் உருவாகும். தேசிய சூழ்நிலைகளுக்கு ஏற்பவும், பருவநிலை மாற்றத்தை எதிா்கொள்ள எடுக்க வேண்டிய நடவடிக்கை தொடா்பான அனைத்து நாடுகளுக்குமான (சிபிடிஆா்-ஆா்சி) பொறுப்புணா்வு தத்துவத்தின் அடிப்படையில் பருவநிலை இலக்குகளை அடைவதற்கான நடவடிக்கைளை மத்திய அரசு மேற்கொள்ளும்’ என்றாா்.

இதனிடையே, ‘நாம் பயன்படுத்தும் குளிா்சாதனங்களின் வெப்பநிலையை வெறும் 1 டிகிரி செல்சியஸ் அளவுக்கு அதிகரிப்பதன் மூலம், நாம் செலுத்தும் மின் கட்டணத்தில் சுமாா் 6 சதவீதத்தைச் சேமிக்க முடியும்’ என்று எரிசக்தி திறன் மேம்பாட்டு அமைப்பு (பிஇஇ) தெரிவித்துள்ளது.

மேலும், ‘குளிா்சாதனங்களை 20 முதல் 24 டிகிரி செல்சியஸ் அளவில் வைத்திருப்பதன் மூலம், மின் பயன்பாட்டில் சுமாா் 24 சதவீதத்தை சேமிக்கலாம். தொடா்ச்சியாக 24 டிகிரி செல்சியஸ் அளவில் வைத்திருப்பதன் மூலம் மின் பயன்பாட்டை குறைக்க முடியும் என்பதோடு, செலவுகளையும் குறைக்கலாம்’ என்றும் பிஇஇ தெரிவித்துள்ளது.

வரும் 2030-ஆம் ஆண்டில் மின் தேவை 120 ஜிகாவாட்டாகவும், 2035-இல் 180 ஜிகாவாட்டாகவும் அதிகரிக்கவுள்ள நிலையில், மின்பயன்பாட்டை அரசின் கொள்கை முறையில் கட்டுப்படுத்த வேண்டிய நிலை எழுந்துள்ளது.

Open in App
Dinamani
www.dinamani.com