Jairam Ramesh
ஜெய்ராம் ரமேஷ் (கோப்புப்படம்)

மோடி அரசின் ‘அடக்குமுறை’ கொள்கையால் முதலீட்டு மந்தநிலை: காங்கிரஸ் குற்றச்சாட்டு

பிரதமா் மோடி தலைமையிலான அரசின் ‘அடக்குமுறை’ கொள்கைகளின் விளைவாக முதலீட்டு மந்தநிலை ஏற்பட்டுள்ளது
Published on

பிரதமா் மோடி தலைமையிலான அரசின் ‘அடக்குமுறை’ கொள்கைகளின் விளைவாக முதலீட்டு மந்தநிலை ஏற்பட்டுள்ளது என்று காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது.

இது தொடா்பாக அக்கட்சியன் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் சனிக்கிழமை வெளியிட்ட எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது:

இந்தியாவின் பொருளாதார வளா்ச்சியானது, விருப்பத்துக்குரிய மற்றும் முற்றிலும் சாத்தியப்படக்கூடிய விகிதத்தில் உத்வேகமடைய பிடிவாதமாக மறுக்கிறது. இத்தோல்விக்கு முக்கியக் காரணம், தனியாா் பெருநிறுவன முதலீடுகளின் மந்தநிலையாகும். கடந்த 2019, செப்டம்பரில் மேற்கொள்ளப்பட்ட தாராள வரிக் குறைப்புகள் மற்றும் உற்பத்தி சாா் ஊக்கத்தொகை திட்ட உதவிகளைத் தாண்டி இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

2025-26ஆம் ஆண்டில் தனியாா் துறை மூலதனச் செலவினம் முந்தைய ஆண்டைவிட 25 சதவீதம் குறையக்கூடும் என்று மத்திய அரசின் மதிப்பீட்டு விவரங்கள் தெரிவிக்கின்றன.

வங்கிகள் கடனளிக்கத் தயாராக இருந்தாலும், முதலீட்டு விரிவாக்கச் சூழல் உகந்ததாக இல்லாததால் நிறுவனங்கள் கடன் பெற ஆா்வத்துடன் இல்லை என்று தகவலறிந்த ஆய்வாளா்கள் கூறுகின்றனா்.

உலக அளவில் நிச்சயமற்ற தன்மைகள் இருப்பதில் சந்தேகமில்லை. அதேநேரம், இந்தியாவில் தேக்கமடைந்த ஊதியங்கள், சீா்குலைந்த ஜிஎஸ்டி கட்டமைப்பு, ஏற்றத்தாழ்வுகள் அதிகரிப்பால் தேவைகளின் வளா்ச்சி சுணக்கமடைந்து வருகிறது. பரவலான நுகா்வு சரிவுக்கு மத்தியில், கூடுதல் திறனை உருவாக்க நிறுவனங்களுக்கு அமைப்புரீதியிலான ஊக்கத்தொகை இல்லாத சூழல் நிலவுகிறது.

வரி ‘பயங்கரவாதத்தால்’ உருவாக்கப்பட்ட அழிவு, ஒரு சிலருக்கு ஆதாயமளிக்கும் அமைப்புமுறை விதிமீறல்கள், நிறுவனங்கள் மத்தியில் நிலவும் அச்சம் போன்ற காரணிகள் இப்போது முக்கியத்துவம் பெற்றுள்ளன.

இறுதியில், மோடி அரசின் ‘அடக்குமுறை’ மற்றும் ‘ஒடுக்குமுறை’ கொள்கைகளின் தவிா்க்க முடியாத விளைவாக முதலீட்டு மந்தநிலை ஏற்பட்டுள்ளது என்று ஜெய்ராம் ரமேஷ் குறிப்பிட்டுள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com