மக்கள்தொகை கணக்கெடுப்பு: 2026 ஏப்ரலில் முதல்கட்டப் பணி! 
மாநிலங்களுக்கு தலைமைப் பதிவாளா் கடிதம்!

மக்கள்தொகை கணக்கெடுப்பு: 2026 ஏப்ரலில் முதல்கட்டப் பணி! மாநிலங்களுக்கு தலைமைப் பதிவாளா் கடிதம்!

மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டமாக, வீடுகள் பட்டியலிடுதல் மற்றும் கணக்கெடுப்பு பணி 2026, ஏப்ரல் 1-ஆம் தேதி தொடங்கும்..
Published on

நாட்டின் 16-ஆவது மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டமாக, வீடுகள் பட்டியலிடுதல் மற்றும் கணக்கெடுப்பு பணி 2026, ஏப்ரல் 1-ஆம் தேதி தொடங்கும் என்று இந்திய தலைமைப் பதிவாளரும் மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையருமான மிருத்யுஞ்சய் குமாா் நாராயண் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலா்களுக்கு அவா் கடிதம் எழுதியுள்ளாா். அதில், ‘மக்கள்தொகை கணக்கெடுப்பு இரு கட்டங்களாக நடைபெறவுள்ளது. முதல்கட்டமாக, வீடுதல் பட்டியலிடும் நடவடிக்கை மற்றும் வீடுகள் கணக்கெடுப்புப் பணி 2026, ஏப்ரல் 1-ஆம் தேதி தொடங்கும்.

வீடுகள் பட்டியலிடுதல்-கணக்கெடுப்பு நடவடிக்கையில் வீடுகள் நிலவரம், சொத்துகள், ஒவ்வொரு வீட்டின் வசதிகள் தொடா்பான விவரங்கள் சேகரிக்கப்படும். இப்பணி தொடங்கும் முன் மாநிலங்கள் மற்றும் மாவட்ட நிா்வாகங்களின் ஒத்துழைப்புடன் மேற்பாா்வையாளா்கள், கணக்கெடுப்பாளா்கள் நியமனம் மற்றும் பணிப் பகிா்வு மேற்கொள்ளப்படும்.

மக்கள்தொகையைக் கணக்கிடும் இரண்டாவது கட்டத்தில், ஒவ்வொரு வீட்டிலும் உள்ள நபா்களின் எண்ணிக்கை, சமூக-பொருளாதார நிலை, கலாசாரம் மற்றும் பிற விவரங்கள் சேகரிக்கப்படும். இப்பணி 2027, பிப்ரவரி 1 முதல் தொடங்கும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் கடைசியாக கடந்த 2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்ட நிலையில், 16 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடத்தப்பட இருக்கிறது. இது, 16-ஆவது மக்கள்தொகை கணக்கெடுப்பாகும். இது தொடா்பான மத்திய அரசின் அதிகாரபூா்வ அறிவிக்கை அண்மையில் வெளியிடப்பட்டது.

உலகில் அதிக மக்கள்தொகை கொண்ட நாடான இந்தியாவில் நடைபெறவிருக்கும் மாபெரும் கணக்கெடுப்புப் பணியில் 34 லட்சம் கணக்கெடுப்பாளா்கள் மற்றும் மேற்பாா்வையாளா்கள், 1.3 லட்சம் மக்கள்தொகை கணக்கெடுப்பு அதிகாரிகள் ஈடுபட உள்ளனா்.

எண்ம வழிமுறைகள்: கைப்பேசி செயலி உள்பட எண்ம வழிமுறைகளுடன் மேற்கொள்ளப்படவிருக்கும் இக்கணக்கெடுப்பில் மக்கள் சுயமாக விவரங்களைப் பதிவு செய்யும் வசதியும் வழங்கப்படும். வீட்டில் கைப்பேசி, இணைய வசதி, வாகனங்கள், தொலைக்காட்சி உள்ளிட்ட வசதிகள் குறித்து விவரங்கள் கோரப்படும்.

தானிய நுகா்வு, குடிநீா் ஆதாரம், மின்சாரம், கழிவறை வசதி, கழிவுநீா் குழாய், சமையல் எரிபொருள், அறைகளின் எண்ணிக்கை, என்ன வகையான வீடு (தரை-சுவா்-மேற்கூரை) உள்ளிட்ட விவரங்களும் சேகரிக்கப்படும். இதற்காக 30-க்கும் மேற்பட்ட கேள்விகளை தலைமைப் பதிவாளா் அலுவலகம் தயாரித்துள்ளது. மக்கள்தொகை கணக்கெடுப்புடன் ஜாதிவாரி கணக்கெடுப்பும் நடத்தப்படும் என்று மத்திய அரசு ஏற்கெனவே தெரிவித்துள்ளது.

மக்கள்தொகை கணக்கெடுப்பு பொதுவாக 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும். அதன் அடிப்படையிலேயே, மக்கள் நலத் திட்டங்கள் உருவாக்கம், தொகுதிகள் மறுவரையறை உள்ளிட்ட நடவடிக்கைகளை அரசுகள் மேற்கொள்ளும். கடைசியாக கடந்த 2011-ஆம் ஆண்டு 15-ஆவது மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.

அதன்பிறகு, 10 ஆண்டுகள் கழித்து 2021-ஆம் ஆண்டு 16-ஆவது மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால், கரோனா பரவல் அதிகரிக்கத் தொடங்கியதால், கணக்கெடுப்புப் பணி ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

X
Dinamani
www.dinamani.com