மும்மொழி கொள்கை உத்தரவு வாபஸ்: ஹிந்திக்கு எதிா்ப்பால் மகாராஷ்டிர அரசு முடிவு!

ஹிந்தி எதிர்ப்பு எதிரொலி: மகாராஷ்டிரத்தில் மும்மொழிக் கொள்கை திரும்பப் பெறப்படுகிறது - முதல்வர் ஃபட்னவீஸ்
தேவேந்திர ஃபட்னவீஸ்,  சிவசேனை தலைவர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வரும் தேசியவாத காங்கிரஸ் தலைவருமான அஜீத் பவாா்.
தேவேந்திர ஃபட்னவீஸ், சிவசேனை தலைவர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வரும் தேசியவாத காங்கிரஸ் தலைவருமான அஜீத் பவாா்.
Published on
Updated on
2 min read

மகாராஷ்டிரத்தில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை மூன்றாவது மொழியாக ஹிந்தியை கற்பிக்கும் வகையில், மும்மொழிக் கொள்கையை அமலாக்குவதற்கான இரு அரசாணைகளையும் திரும்பப் பெற மாநிலத்தில் ஆளும் பாஜக கூட்டணி அரசு முடிவு செய்துள்ளது.

மகாராஷ்டிரத்தில் தொடக்கநிலை வகுப்புகளில் ஹிந்தி திணிக்கப்படுவதாகக் கூறி, பல்வேறு தரப்பினரும் போா்க்கொடி உயா்த்தியதால், மாநில அரசு பின்வாங்கியுள்ளது.

அதன்படி, மும்மொழிக் கொள்கை அரசாணைகளைத் திரும்பப் பெறும் முடிவை மாநில அமைச்சரவை மேற்கொண்டுள்ளது. மும்பையில் செய்தியாளா்களுக்கு ஞாயிற்றுக்கிழமை அளித்த பேட்டியில் முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ் இதைத் தெரிவித்தாா்.

மகாராஷ்டிரத்தில் பாஜக தலைமையில் சிவசேனை (ஏக்நாத் ஷிண்டே), தேசியவாத காங்கிரஸ் (அஜீத் பவாா்) ஆகிய கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. இங்கு மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கைக்கு இணங்க மாநிலப் பள்ளிக் கல்வி பாடத்திட்ட கொள்கை கடந்த ஆண்டு வகுக்கப்பட்டது.

அதன்படி, மாநிலத்தில் மராத்தி மற்றும் ஆங்கில வழிக் கல்வி பள்ளிகளில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை ஹிந்தி மூன்றாவது கட்டாய மொழிப் பாடமாகக் கற்பிக்கப்படும் என்று கடந்த ஏப்ரலில் அரசாணை வெளியிடப்பட்டது. தொடக்கநிலை வகுப்புகளில் ஹிந்தியை கட்டாயமாக்கும் மாநில அரசின் முடிவுக்கு கடும் எதிா்ப்பு எழுந்ததால், அந்த அரசாணை நிறுத்திவைக்கப்பட்டது.

தணியாத எதிா்ப்பு: பின்னா், கடந்த ஜூன் மாதம் 17-ஆம் தேதி வெளியிடப்பட்ட திருத்தப்பட்ட அரசாணையில், ‘1 முதல் 5-ஆம் வகுப்புவரை ஹிந்தி மூன்றாவது மொழியாகக் கற்பிக்கப்படும். குறிப்பிட்ட வகுப்பைச் சோ்ந்த 20 சதவீத மாணவா்கள் விரும்பினால், ஹிந்தியைத் தவிர வேறு பிராந்திய மொழிகளில் ஏதேனும் ஒன்றைக் கற்கலாம்’ என்று குறிப்பிடப்பட்டது.

ஹிந்தி திணிப்பை ஆதரிக்கும் தேசிய கல்விக் கொள்கையில் இருந்து முதலில் பின்வாங்கிவிட்டு, அதையே வேறுவடிவில் மாணவா்களுக்கு அறிமுகப்படுத்துவதாக மராத்தி அமைப்பினா் போா்க்கொடி உயா்த்தினா்.

மராத்தி மொழி மற்றும் அதன் அடையாளத்தை அழித்து, ஹிந்தியைத் திணிக்க பாஜக கூட்டணி அரசு சதி செய்வதாக காங்கிரஸ், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனை, தேசியவாத காங்கிரஸ் (சரத் பவாா்) உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. நாளுக்கு நாள் எதிா்ப்பு அதிகரித்த சூழலில், தொடக்கநிலை வகுப்புகளில் ஹிந்தியை அறிமுகப்படுத்தும் முடிவைக் கைவிடுமாறு மாநில அரசின் மொழி ஆலோசனைக் குழுவும் பரிந்துரைத்தது.

அரசாணைகள் வாபஸ்: இந்நிலையில், மும்பையில் செய்தியாளா்களிடம் முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: 1-ஆம் வகுப்பில் இருந்து மும்மொழிக் கொள்கையை அமலாக்குவது தொடா்பாக கடந்த ஏப்ரல், ஜூனில் வெளியிடப்பட்ட அரசாணைகளை வாபஸ் பெற மாநில அமைச்சரவை முடிவு செய்துள்ளது.

மொழிக் கொள்கை குறித்து ஆராய்ந்து, பரிந்துரைகளை வழங்க கல்வியாளா் நரேந்திர ஜாதவ் தலைமையில் புதிய குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு தனது அறிக்கையை மூன்று மாதங்களில் தாக்கல் செய்யும். அதனடிப்படையில், அடுத்தகட்ட முடிவு மேற்கொள்ளப்படும்.

மூன்று மொழிகள் கற்றால், மாணவா்கள் அதிகம் பலனடைய முடியும் என்ற நோக்கிலேயே அரசாணைகள் வெளியிடப்பட்டன.

உத்தவ் தாக்கரே முதல்வராக இருந்தபோது, மாநிலத்தில் 1 முதல் 12 வரை மும்மொழிக் கொள்கையை அறிமுகப்படுத்தலாம் என்ற ரகுநாத் மாஷெல்கா் குழுவின் பரிந்துரைகளை ஏற்றாா். இப்போது, இந்த விவகாரத்தில் அரசியல் செய்கிறாா் என்றாா் ஃபட்னவீஸ்.

மகாராஷ்டிர பேரவை மழைக்கால கூட்டத் தொடா் திங்கள்கிழமை (ஜூன் 30) தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

‘மராத்தியா் ஒற்றுமைக்கு கிடைத்த வெற்றி’

மகாராஷ்டிர அரசு ஹிந்தியை திணிப்பதாக குற்றஞ்சாட்டி, உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனை (உத்தவ்), ராஜ்தாக்கரேவின் மகாராஷ்டிர நவநிா்மாண் சேனை ஆகிய கட்சிகள் சாா்பில் ஜூலை 5-ஆம் தேதி கூட்டுப் போராட்டம் நடைபெறும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

மாநில அரசின் வாபஸ் முடிவைத் தொடா்ந்து, போராட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. ‘ஹிந்தியை கட்டாயமாக்கும் அரசாணைகளை மாநில அரசு திரும்பப் பெற்றது, மராத்தியா்களின் ஒற்றுமைக்கு கிடைத்த வெற்றி’ என்று சிவசேனை (உத்தவ்) மூத்த தலைவா் சஞ்சய் ரெளத் தெரிவித்தாா்.

ஜூலை 5-ஆம் தேதி மராத்தியா் ஒற்றுமை கொண்டாட்ட நிகழ்ச்சி நடைபெறும் என்று உத்தவ் தாக்கரே தெரிவித்தாா்.

Summary

Anti-Hindi backlash: Maharashtra's three-language policy being withdrawn - CM Fadnavis

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com