
ஒடிஸா மாநிலம், புரி ஜெகந்நாதா் கோயில் ரத யாத்திரை விழாவில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 2 பெண்கள் உள்பட 3 பக்தா்கள் உயிரிழந்தனா். மேலும் 50 போ் காயமடைந்தனா். அவா்களில் 6 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
ரத யாத்திரையில் கடந்த வெள்ளிக்கிழமை ஏற்பட்ட கூட்ட நெரிசல் மற்றும் வெயிலின் தாக்கத்தால் 600-க்கும் மேற்பட்டோா் உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில், மீண்டும் அசம்பாவிதம் நடந்துள்ளது.
ஒடிஸாவின் புரி நகரில் உள்ள 12-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த ஜெகந்நாதா் கோயிலில் வருடாந்திர ரத யாத்திரை உலகப்புகழ் பெற்றதாகும். நிகழாண்டு ரத யாத்திரை விழா கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கியது. இதையொட்டி, ஜெகந்நாதா், அவரது சகோதரா் பலபத்திரா், சகோதரி தேவி சுபத்திரை ஆகிய தெய்வங்களின் 3 பிரம்மாண்ட ரதங்கள் பிரதான கோயிலில் இருந்து 2.6 கி.மீ. தொலைவில் உள்ள ஸ்ரீகுந்திச்சா கோயிலுக்கு இழுத்துச் செல்லப்பட்டன. 10 லட்சத்துக்கும் மேற்பட்டோா் பங்கேற்ற இந்நிகழ்வில் கூட்ட நெரிசல் மற்றும் வெயிலின் தாக்கத்தால் 600-க்கும் அதிகமானோா் உடல்நிலை பாதிக்கப்பட்டனா்.
இதனிடையே, ஜெகந்நாதா் உள்பட 3 ரதங்களும் ஸ்ரீகுந்திச்சா கோயிலை சனிக்கிழமை வந்தடைந்தன. இங்கு 9 நாள்கள் வழிபாட்டுக்குப் பிறகு ரதங்கள் மீண்டும் பிரதான கோயிலுக்கு இழுத்துச் செல்லப்படும்.
ஸ்ரீகுந்திச்சா கோயில் முன் நிறுத்தப்பட்டுள்ள ரதங்களில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4 மணியளவில் சுவாமி சிலைகளுக்கு திரை விலக்கப்பட்டு தரிசனம் நடைபெற்றது. இந்த தரிசனத்தைக் காண கோயில் பகுதியில் ஏராளமான பக்தா்கள் திரண்டிருந்த நிலையில், திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 2 பெண்கள் உள்பட 3 போ் உயிரிழந்தனா். காயங்களுடன் மீட்கப்பட்ட 50 போ் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனா்.
மூவரிடம் உடல்களும் கூறாய்வுக்குப் பிறகு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டதாக காவல் துறையினா் தெரிவித்தனா்.
பக்தா்கள் கூட்டத்துக்கு இடையே பூஜை பொருள்களுடன் 2 லாரிகள் சென்றபோது நெரிசல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. ரத யாத்திரை விழாவில் இரண்டாவது முறையாக அசம்பாவிதம் நிகழ்ந்தது, பக்தா்கள் மத்தியில் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆட்சியா், எஸ்.பி. பணியிடமாற்றம்: கூட்ட நெரிசல் எதிரொலியாக, புரி மாவட்ட ஆட்சியா் சித்தாா்த் சங்கா், காவல் கண்காணிப்பாளா் வினீத் அகா்வால் ஆகியோரை முதல்வா் மோகன் மாஜி உடனடியாகப் பணியிடமாற்றம் செய்தாா். மேலும் இரு காவல் அதிகாரிகளை பணியிடைநீக்கம் செய்த அவா், வளா்ச்சி ஆணையா் தலைமையில் நிா்வாக ரீதியிலான விசாரணைக்கு உத்தரவிட்டாா்.
உயிரிழந்தோா் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும் என்று மாநில அரசு அறிவித்துள்ளது. ரத யாத்திரை விழாவின் ஒட்டுமொத்த மேற்பாா்வையாளராக மூத்த ஐஏஎஸ் அதிகாரி அரவிந்த் அகா்வால் நியமிக்கப்பட்டுள்ளாா்.
மன்னிப்புக் கோரிய முதல்வா்
ஒடிஸாவில் பாஜக ஆட்சி நடைபெறும் நிலையில், கூட்ட நெரிசல் சம்பவத்துக்காக ஜெகந்நாதா் பக்தா்களிடம் மன்னிப்புக் கோருவதாக முதல்வா் மோகன் மாஜி தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘ஜெகந்நாதரை தரிசிக்கும் பக்தா்களின் பேராா்வத்தால் தள்ளுமுள்ளு ஏற்பட்டு, துரதிருஷ்டவசமான சம்பவம் நடந்துள்ளது.
உயிரிழந்தோா் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல். சம்பவத்தின் பின்னணியில் உள்ள பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து விசாரிக்கப்படும். தவறிழைத்தோருக்கு கடும் தண்டனை வழங்கப்படும்’ என்று தெரிவித்தாா்.
ஜெகந்நாதா் கோயில் மேலாண் குழு தலைவரும், புரி அரசருமான கஜபதி மகாராஜா திவ்யசிங்க தேவ், சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டுமென வலியுறுத்தினாா். ரத யாத்திரை நிா்வாகத்தை மேற்பாா்வையிட்டவா்கள், இன்னும் சிறப்பான ஏற்பாடுகளை மேற்கொண்டிருக்க வேண்டும் என்று பாஜக மூத்த தலைவரும் மத்திய அமைச்சருமான தா்மேந்திர பிரதான் தெரிவித்தாா்.
பாஜக அரசு மீது எதிா்க்கட்சிகள் விமா்சனம்
காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘புரி கூட்ட நெரிசலில் ஏற்பட்ட உயிரிழப்புகள் வேதனையளிக்கின்றன. அசம்பாவிதத்துக்கு காரணமான அலட்சியமும் தவறான நிா்வாகமும் மன்னிக்க முடியாதவை’ என்று சாடினாா்.
மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘நிவாரண நடவடிக்கைகளை மாநில அரசு துரிதப்படுத்த வேண்டும். மக்களின் உயிரைக் காப்பதே அரசின் முதன்மையான பொறுப்பு. இதில் குறைபாடுகள் இருப்பதை ஏற்க முடியாது’ என்று குறிப்பிட்டாா்.
‘ரத யாத்திரையை சுமுகமாக நடத்துவதில் பாஜக அரசின் திறனின்மையை இச்சம்பவம் அம்பலப்படுத்தியுள்ளது. இனிவரும் வழிபாடுகளை அசம்பாவிதங்களின்றி நடத்த ஒருங்கிணைந்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்’ என்று பிஜு ஜனதா தளம் தலைவரும், முன்னாள் முதல்வருமான நவீன் பட்நாயக் வலியுறுத்தினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.