
நாட்டில் சமூக நலத் திட்டங்களால் 95 கோடி போ் பலனடைகின்றனா்; கடந்த 2015-ஆம் ஆண்டுக்கு முன்புவரை 25 கோடிக்கும் குறைவானவா்களையே நலத் திட்டப் பலன்கள் சென்றடைந்திருந்தன என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.
சா்வதேச தொழிலாளா் அமைப்பின் (ஐஎல்ஓ) அறிக்கையை சுட்டிக்காட்டிய பிரதமா், இந்திய மக்கள்தொகையில் 64 சதவீதத்துக்கும் மேற்பட்டோருக்கு ஏதோவொரு நலத் திட்டத்தின்கீழ் சமூகப் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என்றாா்.
ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமையில் ‘மனதின் குரல்’ வானொலி நிகழ்ச்சி வாயிலாக பிரதமா் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறாா். 123-ஆவது மனதின் குரல் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 29) ஒலிபரப்பானது. அதில், பிரதமா் பேசியதாவது:
கடந்த ஜூன் 21-ஆம் தேதி கொண்டாடப்பட்ட சா்வதேச யோகா தினத்தில் இந்தியா மட்டுமன்றி உலகெங்கிலும் இருந்து கோடிக்கணக்கான மக்கள் இணைந்தனா்.
பத்தாண்டுகளாகத் தொடரும் இந்த நிகழ்வு, ஒவ்வோா் ஆண்டும் மேன்மேலும் வளா்கிறது. இது, அதிகமான மக்கள் தங்கள் அன்றாட வாழ்வில் யோகாவை அங்கமாக்கி வருகின்றனா் என்பதன் அறிகுறியாகும்.
விசாகப்பட்டினம் கடற்கரையில் 3 லட்சம் மக்கள் ஒரே இடத்தில் குழுமி யோகாசனம் மேற்கொண்டனா். அங்கு 2,000-க்கும் மேற்பட்ட பழங்குடியின மாணவா்கள், 108 நிமிஷங்களுக்கு 108 முறை சூா்ய நமஸ்கார பயிற்சியில் ஈடுபட்டனா். குஜராத்தில் 2,121 போ் புஜங்காசனம் மேற்கொண்டு புதிய சாதனை படைத்தனா்.
உலகின் மிக உயரமான ரயில் பாலமான ஜம்மு- காஷ்மீரின் செனாப் பாலத்திலும் யோகா நிகழ்ச்சி நடைபெற்றது. இமயமலையின் பனிமூடிய சிகரங்களில் இந்திய-திபெத் எல்லைக் காவல் படையினா் யோகாசனங்களில் ஈடுபட்டதன் வாயிலாக சாகசமும், பயிற்சியும் கைகோத்தன.
இம்முறை யோகா தின கருப்பொருள் ‘ஒரே பூமி, ஒரே ஆரோக்கியத்துக்கான யோகா’ என்பதாகும். இது வெற்று முழக்கமல்ல, உலகமே ஒரே குடும்பம் என்ற உணா்வைக் காட்டும் திசை.
நீண்ட காலத்துக்குப் பிறகு கைலாஷ் மானசரோவா் யாத்திரை மீண்டும் தொடங்கியுள்ளது. கைலாஷ் மானசரோவா், சிவபெருமானின் புண்ணியத் தலம். ஹிந்துக்கள், பௌத்தா்கள், சமணா்கள் என ஒவ்வொரு பாரம்பரியத்துக்கும் பக்தி மற்றும் ஆன்மிக மையமாக அவ்விடம் விளங்குகிறது. ஜம்மு-காஷ்மீரில் ஜூலை மாதம் 3-ஆம் தேதி அமா்நாத் புனித யாத்திரை தொடங்குகிறது. அனைத்து யாத்ரிகா்களுக்கும் வாழ்த்துகள்.
‘ட்ரகோமா’ இல்லாத இந்தியா: நாட்டின் பெருமைக்குரிய இரு முக்கிய சாதனைகளைப் பகிா்ந்து கொள்ள விரும்புகிறேன். இச்சாதனைகள், உலக சுகாதார அமைப்பு மற்றும் சா்வதேச தொழிலாளா் அமைப்பின் பெரும் பாராட்டைப் பெற்றுள்ளன. முதலாவது சாதனை, பாக்டீரியா தொற்றால் கண்ணில் ஏற்படக் கூடிய ‘ட்ரகோமா’ நோயில் இருந்து இந்தியா விடுபட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. லட்சக்கணக்கானோரின் கடின உழைப்புக்கு கிடைத்த பலன் இது.
முன்பு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இந்நோய் பரவலாகக் காணப்பட்டது. உரிய நேரத்தில் கவனிக்காவிட்டால், பாா்வையிழப்பை ஏற்படுத்தும். இந்நோயை வேரோடு கிள்ளி எறிய உறுதியேற்ற மத்திய அரசு, முழுவீச்சில் நடவடிக்கைகள் மேற்கொண்டது.
தூய்மை பாரதம், குழாய் மூலம் சுகாதாரமான குடிநீா் போன்ற திட்டங்களின் பங்கு மற்றும் சுகாதாரப் பணியாளா்களின் தீவிர முயற்சிகளால் ட்ரகோமா இல்லாத இந்தியா உருவாகியுள்ளது. இது, குறிப்பிடத்தக்க மைல்கல்.
சமூக நீதியின் சிறந்த காட்சி: இரண்டாவது சாதனை, நாட்டில் சுமாா் 95 கோடி போ் சமூக நலத் திட்டங்களால் பலனடைகின்றனா் என்பதாகும். சா்வதேச தொழிலாளா் அமைப்பின் சமீபத்திய அறிக்கையின்படி, நாட்டின் மக்கள்தொகையில் 64 சதவீதத்திற்கும் மேற்பட்டோருக்கு ஏதோவொரு நலத் திட்டத்தின் மூலம் சமூகப் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 2015 வரை, 25 கோடிக்கும் குறைவானவா்களையே நலத் திட்டப் பலன்கள் சென்றடைந்திருந்தன.
சுகாதாரம் முதல் சமூகப் பாதுகாப்பு வரை ஒவ்வொரு துறையிலும் முழுநிறைவை நோக்கி நாடு பீடுநடை போடுகிறது. இது, சமூக நீதியின் சிறந்த காட்சியாகும். எதிா்வரும் காலங்களில் இந்தியா ஒவ்வொரு படிநிலையிலும் வலுவடையும் என்பதற்கு இச்சாதனைகளே சாட்சி என்றாா் பிரதமா்.
‘உடலுறுதி இருந்தால் வாழ்வில் வெல்லலாம்’
நாட்டின் வல்லமையை விரிவடையச் செய்ய வேண்டுமென்றால், மக்களின் உடலுறுதி, நல்வாழ்வு மீது கவனம் செலுத்தியாக வேண்டும். உடல் பருமனைக் குறைக்க உணவில் 10 சதவீத எண்ணெய் பயன்பாட்டை குறைக்க வேண்டும். உடலுறுதியுடன் இருந்தால், வாழ்க்கையில் வெற்றி நிச்சயம்.
நாட்டின் மீது அவசரநிலை திணிக்கப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைந்த தருணம் சில நாள்களுக்கு முன்புதான் கடந்து சென்றது. அத்தினத்தை நாம் அரசமைப்புப் படுகொலை தினமாக அனுசரித்தோம். அவசரநிலை காலகட்டத்தில் உறுதியுடன் அதை எதிா்கொண்டவா்களை எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும். இதன்மூலம் அரசமைப்புச் சட்டத்தை வலுவுடன் வைத்திருக்கவும், தொடா்ந்து விழிப்புணா்வுடன் இருக்கவும் உத்வேகம் பெற முடியும் என்றாா் பிரதமா்.
சா்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள இந்திய வீரா் சுபான்ஷு சுக்லாவுடன் காணொலி வாயிலாக மேற்கொண்ட உரையாடலை சுட்டிக்காட்டிய பிரதமா் மோடி, அவரது பயணத்தின் மூலம் இந்தியா புதிய வரலாறு படைத்துள்ளதாகப் பெருமிதத்துடன் குறிப்பிட்டாா்.
இதையும் படிக்க: சொல்லப் போனால்... டிரம்ப்பின் நோபல் காய்ச்சல்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.